சென்னை: திராவிட மாடல் திமுக அரசு ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல; வள்ளலாரைப் போற்றுவது தமிழக அரசின் கடமை. வடலூரில் ரூ.100 கோடி மதிப்பில் `வள்ளலார் சர்வதேச மையம்' அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
இந்து சமய அறநிலையத் துறை சார்பில் அறிவிக்கப்பட்டபடி, அருட்பிரகாச வள்ளலார் என்று போற்றப்படும் ராமலிங்க அடிகளாரின் முப்பெரும் விழாவைச் சிறப்பாக நடத்தும் வகையில், பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமையில் 14 உறுப்பினர்களைக் கொண்ட சிறப்புக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.
இதையடுத்து, சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் நேற்று வள்ளலார் முப்பெரும் விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து, “வள்ளலார் தனிப்பெருங்கருணை” என்ற சிறப்பு மலரை வெளியிட்டு, சுத்த சன்மார்க்க நெறிமுறைகளைப் பின்பற்றும் அன்பர்கள் மழையூர் சதாசிவம், சா.மு.சிவராமன், தனலட்சுமி, எம்.பாலகிருஷ்ணன், சிவப்பிரகாச சுவாமிகள் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தார்.
பின்னர், வள்ளலாரின் தனிப் பெருங்கருணை நாளை முன்னிட்டு ஆண்டு முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.
முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தந்தை பெரியார் பிறந்த நாளை சமூக நீதி நாளாகவும், அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாகவும் அறிவித்த தமிழக அரசு, வள்ளலார் பிறந்த நாளை தனிப்பெருங்கருணை நாளாக அறிவித்துள்ளது.
என்னைப் பொறுத்தவரை, சிலர் கூறிவரும் அவதூறுகளுக்குப் பதில் சொல்லக்கூடிய விழாதான் இந்த விழா. `திராவிட மாடல் ஆட்சிஆன்மிகத்துக்கு எதிரானது, திராவிட மாடல் ஆட்சி மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானது' என்று மதத்தை வைத்துப் பிழைக்கக்கூடிய சிலர் பேசி வருகின்றனர்.
திமுக ஆன்மிகத்துக்கு எதிரானது அல்ல. ஆன்மிகத்தை அரசியலுக்கும், தங்களது சொந்த சுயநலத்துக்கும், உயர்வு, தாழ்வு என பேதம் கற்பிப்பதற்கும் மட்டுமே பயன்படுத்திக் கொள்பவர்களுக்கு எதிரானதுதான் இந்த திராவிட மாடல் திமுக ஆட்சி. வள்ளலாரைப் போற்றுவது, திராவிட ஆட்சியின் கடமை.
ஆறாம் திருமுறைப் பாடல்களைத் தொகுத்து, 'ராமலிங்கர் பாடல் திரட்டு' என்ற நூலை 1940-ம் ஆண்டுகளிலேயே வெளியிட்டவர் தந்தை பெரியார். வள்ளலார் நகரை உருவாக்கியவர் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி.
திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும், வள்ளலார் பிறந்த நாளை தனிப்பெருங்கருணை நாளாக அறிவித்து, சிறப்பாகக் கொண்டாடிக் கொண்டிருக்கிறோம்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில், வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து இருந்தோம். அதன்படி, ரூ.100 கோடி மதிப்பில் வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதற்காக பெருந்திட்ட வரைவுத் திட்டத்தைத் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த விழா நடைபெறுகிறது. இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் குழுவினருடன் நானும் பல ஆலோசனைகளை செய்திருக்கிறேன்.
பல்வேறு நகரங்களில் 52 வாரங்களுக்கு முப்பெரும் விழா நடைபெற உள்ளது. ஓராண்டுக்கு தொடர் அன்னதானம், பேச்சாளர்களுக்கு சன்மானம் என மொத்தம் ரூ.3.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பசிப் பிணியைப் போக்குவதே இறை பணி என்று வள்ளலார் கருதினார். அவரது வழியில் செயல்படும் திமுக அரசு, பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது. பசியுடன் பள்ளிக்கு வரும் பிள்ளைகளுக்கு உணவு அளிக்கும் திட்டம் அது. அன்னதானம் வழங்குவது மட்டுமே வள்ளலாரின் அறநெறி அல்ல. சாதி, மத வேறுபாடுகள் இல்லாத சமநிலைச் சமூகம் அமைக்கப் பாடுபடுவதும்தான் வள்ளலாருடைய வழியில் நடப்பதாகும்.
"ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமை உளராகி உலகியல் நடத்த வேண்டும்" என்ற அவரது அறநெறி உலகத்தைப் படைக்க நாம் அனைவரும் உறுதியேற்போம். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், சட்டப்பேரவை உறுப்பினர் த.வேலு, வள்ளலார் முப்பெரும் விழா சிறப்புக் குழுத் தலைவர் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர், அறநிலையத் துறைச் செயலர் பி.சந்திரமோகன், ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் இரா.கண்ணன், அஞ்சல் துறை தென் சென்னை கோட்ட முதுநிலைக் கண்காணிப்பாளர் டி.திவ்யா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
தமிழகம்
1 min ago
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago