தேவையற்ற மேல்முறையீட்டு வழக்கு: தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் - உச்ச நீதிமன்றம் உத்தரவு

By செய்திப்பிரிவு

சென்னை: தேவையற்ற மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்த தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற பி.ஜி.வேணுகோபால் என்பவருக்கு ஓய்வூதிய பணப் பலன்களை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கின் விசாரணை, நீதிபதிகள் எம்.ஆர்.ஷா,கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. அப்போது தமிழக அரசின் தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வி.கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, ‘‘மனுதாரர் ஓய்வூதியம் பெற
தகுதியற்றவர். 2009-ம் ஆண்டுக்கு முந்தைய நடைமுறை அவருக்குப் பொருந்தாது.

இதை கருத்தில் கொள்ளாமல் அவருக்கு ஓய்வூதிய பணப்பலன்களை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது எனவே, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்’’ என வாதிட்டார். அதையேற்க மறுத்த நீதிபதிகள், இந்த மேல்முறையீட்டு வழக்கை தமிழக அரசு தேவையில்லாமல் நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் தொடர்ந்துள்ளது. ஓய்வூதிய விவகாரத்தை உச்ச நீதிமன்றம் வரை கொண்டுவந்து, அவர் ஓய்வூதியம் பெற தகுதியற்றவர் என வாதிடுகிறது. பரிகாரம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவரை, பணப்பலன்களை வழங்க மனமின்றி மேலும், மேலும் சோதிக்கக்கூடாது. அவருக்கு சேர வேண்டிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும். தேவையில்லாத இந்த மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்த தமிழக அரசுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கிறோம். அதை 4 வாரங்களுக்குள் உச்ச நீதிமன்றத்தின் சமரச தீர்வு மையகமிட்டிக்காக உச்ச நீதிமன்ற பதிவாளரிடம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டு மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE