தென்மாவட்டங்களில் களைகட்டும் தசரா திருவிழா - குலசேகரன்பட்டினத்தில் நாளை சூரசம்ஹாரம்

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்தீஸ்வரர் திருக்கோயில் தசரா பெரும் திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (அக்.05) நள்ளிரவு நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு பக்தர்கள் குவிகின்றனர்.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா ஆண்டு தோறும் 11 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

இந்தாண்டு இத்திருவிழா செப்டம்பர் 26-ம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பக்தர்கள் காப்பு அணிந்து பல்வேறு வேடம் தரித்தும், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தசரா குழுவினர் பல்வேறு ஊர்களில் குடில் அமைத்து கலை நிகழ்ச்சிகளை வீதி தோறும் நடத்தியும் அம்மனுக்கு காணிக்கை வசூலித்து வருகின்றனர்.

7-ம் நாளான நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்திலும், நேற்று இரவு கமல வாகனத்தில் கஜலட்சுமி திருக்கோலத்திலும் அம்மன் எழுந்தருளி வீதியுலா வந்தார். 9-ம் நாளான இன்று (அக்.4) அன்ன வாகனத்தில் கலைமகள் திருக்கோலத்தில் அம்மன் வீதியுலா வருகிறார்.

தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை (அக்.5) நள்ளிரவு நடைபெறுகிறது. நாளை நள்ளிரவு 12 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கடற்கரை சிதம்பரேஸ்வர் கோயில் முன் எழுந்தருளி மகிசாசூரனை சம்ஹாரம் செய்வார்.

பல்வேறு பகுதிகளில் இருந்து குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் இதை பக்தி பரவசத்துடன் பார்த்து தரிசனம் செய்வர். அக்டோபர் 6-ம் தேதி அதிகாலை 1 மணிக்கு கடற்கரை மேடை, சிதம்பரேஸ்வரர் கோயில், கலையரங்கில் எழுந்தருளும் அம்மனுக்கு சாந்தாபிஷேகம், ஆராதனை நடைபெறும்.

அன்று காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப்பரத்தில் திருவீதி உலா நடைபெறும். சப்பரம் மாலை 4 மணிக்கு கோயிலை வந்தடைந்தவுடன் கொடியிறக்கப்படும். தொடர்ந்து பக்தர்கள் காப்பு அவிழ்த்து வேடம் களைந்து விரதத்தை நிறைவு செய்வார்கள். இரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE