சென்னை: சொல்லிலும் செயலிலும் அலட்சியம் வேண்டாம் என்றும், தவறு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சிறிதும் தயங்க மாட்டேன் என்றும் திமுகவினருக்கு அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக திமுகவினருக்காக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், " திராவிட அரசியல் பேரியக்கமான தி.மு.கழகத்தின் 15-வது அமைப்புத் தேர்தல் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், கிளைக் கழகங்கள் என அனைத்து நிலைகளிலும் நிறைவுபெற்று நிர்வாகிகள் தேர்வு பெற்றுள்ளனர். தலைவர் உள்ளிட்ட தலைமைக் கழக நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான பொதுக்குழு அக்டோபர் 9-ம் தேதி சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி 'விங்க்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் நடைபெறவிருக்கிறது. கழகத் தலைவர் என்ற பொறுப்பை, கண்ணுங் கருத்துமாக, எனது இதயத்திலும் தோளிலும் சுமந்திருக்கும் உங்களில் ஒருவனான நான், உடன்பிறப்புகளின் உளமார்ந்த வாழ்த்துகளையும், ஒருமனதான நல்லாதரவையும் எதிர்நோக்கி, அக்டோபர் 7-ம் நாள் வேட்புமனு தாக்கல் செய்யவிருக்கிறேன்.
அண்ணா உருவாக்கிய ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில், தலைவர் கருணாநிதி, சுமார் அரை நூற்றாண்டு அரும்பாடுபட்டுக் கட்டிக் காத்த இயக்கம் தி.மு.கழகம். மாநிலக் கட்சியாக இருந்தாலும், உள்கட்சி ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதில், இந்தியாவில் உள்ள கட்சிகள் பலவற்றுக்கும் எப்போதும் வழிகாட்டியாக இருப்பது நம்முடைய இயக்கம். கழகத்தின் உள்கட்டமைப்பு ஜனநாயக முறைப்படி ஒழுங்குபடுத்தப்பட்டு, கண்ணை இமை காப்பதுபோல், தொடர்ந்து காக்கப்படுவதால்தான்,வலிவோடும் பொலிவோடும் திகழ்ந்து, இன்று தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பதுடன், நம்முடைய திராவிட மாடல் ஆட்சித்திறனை, இந்தியாவின் பிற மாநிலங்களும் ஏற்றுப் போற்றிப் பாராட்டுகின்ற வகையில் சீராகச் செயலாற்றி வருகிறது. எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.கழகத்தின் சிறப்பான பங்களிப்பை இந்தியாவே எதிர்பார்த்திருக்கிறது.
உடன்பிறப்புகளாம் உங்கள் ஒவ்வொருவரின் உழைப்பிலும், ஒத்துழைப்பிலும் வலிவு பெற்றிருக்கும் கழகத்தையும், அதன் ஆட்சியில் தமிழ்நாடு பெற்றுவரும் வளர்ச்சியையும் வலிமையையும் சற்றும் பொறுத்துக் கொள்ள முடியாத சில பிற்போக்கு சக்திகள், கழகத் தேர்தல் முடிவுகள் குறித்து, தங்களது கற்பனை எல்லையைக் காட்டும் வகையில் ஈரைப் பேனாக்கும் மட்டரகமான வேலையில் ஈடுபட்டு வருகின்றன.
» பூண்டி மாதா கோயிலுக்கு வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் கொள்ளிடம் ஆற்றில் மூழ்கி உயிரிழப்பு
» திமுக அரசின் அலட்சியப்போக்கால் தூய்மை நகரங்கள் பட்டியலில் தமிழகத்திற்கு பின்னடைவு: ஓபிஎஸ்
நாடறிந்த சில ஏடுகளும், அறிந்தோ அறியாமலோ, அதற்கு உதவுவது, அத்தகைய ஏடுகளின் நம்பகத்தன்மைக்குச் சிறிதும் பொருத்தமானதாக இருக்காது. கழகத் தேர்தல் முடிவுகள் குறித்து, தொடர்பில்லாத யார் யாரோ சொன்னதை வைத்து, தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப செய்திகளை வெளியிட்டு, உண்மைக்கு மாறான செய்திகளைப் பரப்ப முயற்சிக்கும் செயல்கள், எந்த வகை இதழியல் அறம் என்பதை, அந்த ஏடுகள்தான் நேர்மையுடன் விளக்கிட முன்வர வேண்டும்.
கழக அமைப்புகளில் உள்ள பொறுப்புகளுக்குப் போட்டியிட விரும்புகிறவர்கள் தங்களின் விருப்பத்தை வெளிப்படுத்தி மனு தாக்கல் செய்வது வழக்கம். ஒரு மாவட்டத்திற்கு ஒரு செயலாளர்தான் என்பதை மனு தாக்கல் செய்த ஒவ்வொருவருமே அறிவார்கள். தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் முன்னிலையில் அவர்களின் விருப்பமும், வாய்ப்பும் பரிசீலிக்கப்பட்டு, தேவையென்றால் மட்டும் வாக்குப்பதிவு நடைபெறுவதும், அதற்கான அவசியம் ஏற்படாத நிலையில், ஒருமனதாக ஒருவரைத் தேர்வு செய்வதும் நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதி உருவாக்கிய வழிமுறையின்படி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதனைத் தெரிந்தும் தெரியாதது போல, நம்மைவிடக் கழகத்தின் மீதும் அதன் வளர்ச்சியின் மீதும் கூடுதல் அக்கறை இருப்பதாகக் காட்டிக் கொள்ளும் வகையில், கழக அமைப்புத் தேர்தல் முறைகளை வலிந்து எதிர்மறை விமர்சனம் செய்தும், வாய்ப்பு பெற்ற ஒரு சிலருக்கு எதிராக மற்றவர்களைத் தூண்டிவிடத் துணைபோகும் வகையிலும், செய்திகள் வழியே செயல்படும் போக்கு இன்று மட்டுமல்ல, நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதி காலத்திலும் நடைபெற்றதை மறந்துவிட முடியாது.
வாக்குப்பதிவு மூலம் தேர்தல் நடைபெற்று நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களில் கடைப்பிடிக்கப்பட்ட முறையையாவது பாராட்டியிருக்கிறார்களா என்றால் அதுவும் இருக்காது. ‘இருதரப்பிலும் கடும் மோதல்‘, ‘ஆதரவாளர்கள் தாக்குதல்‘, ‘உள்கட்சி உள்குத்து - வெளிக்குத்து’ என்றுதான் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. தி.மு.கழகம் எனும் பேரியக்கம் ஏறத்தாழ முக்கால் நூற்றாண்டு காலமாக வலிமை குன்றாமல் இருப்பதும், தேர்தல் தோல்விகளைக் கடந்து மீண்டும் மீண்டும் மக்களின் ஆதரவுடன் மகத்தான வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து சமூகநீதி மற்றும் சமத்துவ நெறி அடிப்படையிலான சட்டங்களைத் தீட்டி, தக்க திட்டங்களை நிறைவேற்றுவதும் ‘பாரம்பரியமிக்கவர்களுக்கு’ உறுத்தலாக இருப்பதன் விளைவுதான், நம்முடைய உள்கட்சித் தேர்தலில் அவர்கள் காட்டுகின்ற அதீத ‘அக்கறை’க்குக் காரணம்.
இவற்றையெல்லாம் கடந்துதான் திராவிட இயக்கம் நூற்றாண்டு காலமாக இந்த மண்ணில் ஓயாது பாடுபட்டு, மக்கள் மனதில் மாற்றத்தையும் மறுமலர்ச்சியையும் உருவாக்கி, ஈராயிரம் ஆண்டுகால ஒடுக்குமுறைகளைத் தகர்த்து, இன்று ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்கிற திராவிட மாடல் நல்லரசை வழங்கி வருகிறது. கடைக்கோடி மனிதர்களுக்கும், கடைசி குக்கிராமத்திற்கும் அரசின் திட்டங்கள் சிந்தாமல் சிதறாமல் சென்று சேர வேண்டும் என்கிற சிந்தையுடனும் முனைப்புடனும் முழுமையான அர்ப்பணிப்புடனும் உங்களில் ஒருவனான என் தலைமையிலான நமது அரசு ஒவ்வொரு நொடியும் செயல்பட்டு வருகிறது. இதற்கு எப்படியாவது ஊறு விளைவித்திட வேண்டும் என நினைப்போரை சரியாக அடையாளம் கண்டு நாம் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் செயலாற்றிட வேண்டும்.
‘சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்’ என்கிற அரசாட்சியின் அடிப்படை இலக்கணத்தை நம் உயிர்நிகர் தலைவர் கருணாநிதி நமக்கு வழங்கியிருக்கிறார். அதனைக் குறைவின்றிக் கடைப்பிடிப்பதுடன், ‘சொல்லாததையும் செய்வோம்.. சொல்லாமலும் செய்வோம்’ எனப் புதிய புதிய முற்போக்குத் திட்டங்களை மக்களுக்காக நிறைவேற்றி வருகிறோம். தமிழ்நாட்டு மக்களுக்கு நன்மை விளைவதைப் பார்த்துப் பொறுத்துக் கொள்ள முடியாத பொல்லாங்கு எண்ணம் கொண்டோர், நமக்கு எதிராகச் சிறு துரும்பையும் பெரும் தூணாக்க முடியுமா எனத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறு துரும்புக்கு மட்டுமல்ல, தூசுக்கும்கூட இடம் கொடுக்காத வகையில், நாம் கவனமுடன் செயல்பட வேண்டியுள்ளது.
அமைச்சர் பெருமக்களுக்கும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் உள்ளாட்சிப் பொறுப்பிலே இருக்கக்கூடிய கழக நிர்வாகிகளுக்கும் நான் ஏற்கெனவே செப்டம்பர் 26ம் நாளன்று ஓர் அறிக்கை வாயிலாக அன்புக்கட்டளை விடுத்திருக்கிறேன். அதனை மீண்டும் நினைவூட்டுகிறேன். எக்காரணம் கொண்டும் சொல்லிலும் செயலிலும் அலட்சியமான போக்கு வேண்டாம். இரண்டையும் கவனத்துடன் கையாளுங்கள். நம்மிடமிருந்து வெளிப்படும் சொற்கள், அதனை வெளிப்படுத்தும் உடல்மொழி, நம்மை நாடி வரும் மக்களை அணுகும் முறை என அனைத்திலும் கவனமுடனும் பொறுப்புடனும் கண்ணியம் துளியும் குறைந்து விடாமல் செயலாற்றுங்கள்.
மற்றவர்களைவிட உள்ளாட்சிப் பிரதிநிதிகள் அதிகளவில் மக்களுடன் நேரடித் தொடர்பு கொண்டவர்கள். அவர்கள் இன்னும் கூடுதல் பொறுப்புடனும் பொறுமையுடனும் நடந்து கொள்ள வேண்டும். நம் தரப்பிலிருந்து தவறுகளுக்கோ, குறைகளுக்கோ குன்றிமணி அளவுகூட இடம் தரக்கூடாது. அப்படி ஏதேனும் ஒன்றிரண்டு நிகழ்வுகள் என் கவனத்திற்கு வந்தாலும், கடுமையான நடவடிக்கை எடுத்திட சிறிதும் தயங்க மாட்டேன் என்பதைக் கண்டிப்புடன் நினைவூட்டிட விரும்புகிறேன். அரும்பாடுபட்டு அமைந்துள்ள மக்கள் நல ஆட்சிக்கு, அவப்பெயர் ஏற்படுத்த நினைக்கும் எதிரிகளுக்கு அருமை உடன்பிறப்புகள் யாரும் எள்ளளவும் துணைபோக மாட்டீர்கள் என உறுதியாக நம்புகிறேன்.
ஒவ்வொரு நாளும் சாதனைத் திட்டங்களால் நிரம்பியது நமது ஆட்சி. அதனால், மக்களிடம் நம் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. நம்பிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அந்த நம்பிக்கையை முழுமையாக நிறைவேற்றும் வகையில் நமது அரசின் செயல்பாடுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. அதற்குத் தடங்கலாகும் சூழலைத் திட்டமிட்டு உருவாக்க சில அரசியல் கட்சிகளும், அவர்களின் பின்னணிக் குரலாகச் செயல்பட நினைப்போரும் காத்திருக்கிறார்கள். நாம் பேசுகிற நீண்ட பேச்சில், தொடர்பில்லாமல் ஒரு சிறிய துண்டை மட்டும் எடுத்து, அதிலும் வெட்டி - ஒட்டி, திரித்து மோசடி செய்து, வெற்றுப் புழுதியைக் கிளப்பி, அதனை எதிர்ப்புப் புயல் என நம்ப வைக்க நினைக்கிறார்கள்; பெரும்பாடு படுகிறார்கள். அவர்களின் கற்பனையிலும் கனவிலும்தான் புழுதிமண் விழும்; விழ வேண்டும். அதற்கேற்ப உங்களின் சொற்களும் செயல்களும் கவனம் குறையாத வகையில் அமைந்திட வேண்டும்.
பெரியாரும் அண்ணாவும் கருணாநிதியும், நமக்கு ஊட்டியுள்ள திராவிட உணர்வுடன் தமிழ்நாடு தலைநிமிர்ந்திட, தமிழர்களின் வாழ்வு செழித்திட, செம்மொழித் தமிழ் செம்மாந்து திகழ்ந்திட, கழகமும் கழக அரசும் தொடர்ந்து பாடுபடும். அதற்கான ஊக்கத்தைப் பெற்றிடும் வகையில் கழகத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், துணைப் பொதுச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர் உள்ளிட்டோரைத் தேர்வு செய்யும் பொதுக்குழு அக்டோபர் 9ம் நாள் ஞாயிறு அன்று கூடுகிறது.
ஞாயிறு என்றாலே சூரியன்தான். உதயசூரியன் வெளிச்சத்தால் தமிழ்நாட்டில் விடியல் ஏற்பட்டுள்ள நிலையில், அதன் கதிரொளி எத்திசையும் பரவிடும் வகையில் செயல்படுவதற்கான தீர்மானங்களை நிறைவேற்றவிருக்கும் பொதுக்குழுவில், உயிரனைய உடன்பிறப்புகளை நானும், உங்களில் ஒருவனான என்னை நீங்களும் காணவிருக்கிறோம். ஒரு தாய் மக்களாய் - ஒரு கொள்கைக் குடும்பத்துச் சொந்த பந்தங்களாய் - பொதுக்குழுவில் நாம் காண்போம் ! தமிழ்ப் பொதுமக்கள் நலன் தவறாது காப்போம்!" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
8 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
45 mins ago
தமிழகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago