ராஜீவ் காந்தியின் மீது நிறைய விமர் சனங்கள் இருக்கலாம். ஆனால், பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை செயல் படுத்த, தன்னை கடுமையாக விமர்சித்தவர் களையும் தேடிப் போனவர் அவர். இடது சாரிகளை விடவும் ஜனதா கட்சியினரை விடவும் ராஜீவ் காந்தியைக் கடுமையாக விமர்சித்த வர்கள் யாரும் இருக்க முடியாது. மேற்கு வங்கத்தில் ஜோதி பாசுவும், கர்நாடகத்தில் ராமகிருஷ்ண ஹெக்டேவும் அரசியல்ரீதியாக அவ்வளவு நெருக்கடிகளைக் கொடுத்தார்கள். ஆனால், பஞ்சாயத்து ராஜ்ஜியத்தின் பரிணா மங்களை அறிந்துக்கொள்வதற்காக அந்த இரு மாநிலங்களையும் தேடிப் போனார் ராஜீவ்.
ஆக்கபூர்வமான விஷயத்துக்காக அரசியல் மாச்சர்யங்களை மறந்து மனதார வரவேற்றார்கள் அவர்கள். பஞ்சாயத்து ராஜ்ஜியம் குறித்த ஆலோசனை வழங்கி னார்கள். அங்கே ஒரு மாணவராக பாடம் பயின்றார் ராஜீவ். வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது நடந்த பஞ்சாயத்துக்கள் தொடர்பான விழாவில் ‘ராஜீவ் காந்தி காலத்தில் பஞ்சாயத்து ராஜ்ஜியம் நிறைவேறாமல் போயிருக்கலாம். ஆனால், அவர் பஞ்சாயத்து ராஜ்ஜியத்தை உருவாக்கவில்லை என்றால் எளிய மக்களுக்கான அதிகாரம் கிடைத்தி ருக்குமா என்பது சந்தேகமே’ என்று குறிப் பிட்டார். பாஜக தலைவர் ஒருவர் காங்கிரஸ் தலைவரை பாராட்டிய தருணம் அது!
சிலர் நினைப்பதுபோல பஞ்சாயத்து ராஜ்ஜியத்தை நாடு முழுமைக்கும் அமல் படுத்துவது அவ்வளவு எளிய காரியம் அல்ல. ‘பிரச்சினைகளுக்கு தீர்வுகாண காந்தி யத்தை கையில் எடுத்தார் ராஜீவ்’ என்று சொல்லியிருந்தோம் அல்லவா. கறாரான காந்தியம் அது. நேருவைப் போன்று மென் மையான போக்கை கடைபிடிக்கவில்லை அவர். அரசியல் சாசனத்திலேயே திருத்தம் கொண்டுவந்து, பஞ்சாயத்து ராஜ்ஜியத்துக்கு பலமான அடித்தளம் அமைக்க நினைத்தார். 1985-ல் 63, 64-வது அரசியல் அமைப்பு திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அடுத்தடுத்த ஆண்டுகளில் நாடு முழுவதும் பலத்த விவாதங்களையும் கடுமையான எதிர்ப்பையும் ஒருசேர எழுப்பியது அது. பஞ்சாயத்து ராஜ்ஜியம் குறித்து ராஜீவ் காந்திக்கு பாடம் எடுத்தவர்களும் சேர்ந்து எதிர்த்ததுதான் விநோதம். மூத்த இடதுசாரி தலைவர்களான மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு, இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட், கேரள முன்னாள் முதல்வர் ஈ.கே.நாயனார், ஆந்திரத்தின் முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவ், தமிழக முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, எம்.ஜி.ஆர். ஆகியோர் தங்களது எதிர்ப்பு களைப் பதிவு செய்தார்கள். மாநிலங்களின் சுயாட்சி அதிகாரம் பறிக்கப்படுவதாக அவர்கள் குற்றம்சாட்டினார்கள்.
பஞ்சாயத்துக்களுக்கு அதிகாரம் அளிப்பது மாநிலங்களுக்குள் இன்னும் ஓர் அரசாங்கத்தை உருவாக்குவதற்கு இணையானது. ஒரு மாநிலத்துக்குள் இரு அரசாங்கங்கள் எவ்வாறு செயல்பட முடியும் என்றார்கள். மத்திய அரசும் பஞ்சாயத்து ராஜ்ஜியங்களான மூன்றாவது அரசுகளும் சேர்ந்து மாநில அரசுகளை நசுக்கிவிடும் என்றார்கள். அரசியல் சாசனம் ‘தீண்டாமைக் கூடாது’ என்று கூறினாலும் சமூக அமைப்பு நடைமுறை தீண்டாமையை ஏற்றுக்கொள்கிறது; பஞ்சாயத்து ராஜ்ஜியம் அந்த சமூக அமைப்பை பலமாக்கிவிடும். இதனால் தீண்டாமை அதிகரிக்கும் என்று வாதிட்டார்கள்.
எதிர்ப்பாளர்கள் தரப்பிலும் நியாயங்கள் இருந்தன. உலகமயமாதல் தொடங்கிய கால கட்டம் அது. புதுமைகளைப் புகுத்தத் தொடங்கியிருந்தார் ராஜீவ். நாட்டை கணினி மயமாக்கினார் ராஜீவ். வேலைவாய்ப்புகள் பறிபோய்விடும் என்று பதறினார்கள் இடதுசாரிகள். இதே காலகட்டத்தில்தான் மாநிலங்களின் சுயாட்சி குறித்து நாடு முழுவதும் பரவலான விவாதங்கள் எழுந்து கொண் டிருந்தன. இந்திரா காந்தியின் ‘நெருக்கடி’ ஏற்படுத்திய பாதிப்பு அது. தாயின் வழியில் மகனும் மைய அரசை பலப்படுத்தி பிராந்தியக் கட்சிகளை ஒழிக்க திட்டமிடுகிறாரோ என்று கவலை அடைந்தார்கள். கூடுதலாக அமெரிக்காவுடன் அதிகம் நட்பு பாராட்டினார் ராஜீவ். இரு கட்சிகள் மட்டும் கொண்ட அமெரிக்க பாணிய அரசியலை விரும்புகிறாரோ என்று அச்சம் அடைந்தன பிராந்தியக் கட்சிகள். தவிர, ராஜீவ் கொண்டுவந்த 63, 64-வது திருத்தங்களில் உள்ளாட்சிகளுக்கு மிக அதிகமான அதிகாரங்கள் அளிக்கும் கடுமையான ஷரத்துக்கள் இருந்ததையும் மறுக்க முடியாது.
அத்தனைக்கும் அமைதியாக பதில் அளித்தார் ராஜீவ். ‘‘சாமானியனுக்கு நிர்வாகம் செய்ய தெரியாது’’ என்றார்கள். ‘‘முதலில் வாய்ப்பு கொடுப்போம்’’ என்றார். ‘‘மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று எங்களுக்குத் தெரியாதா?’’ என்றார்கள் முதல்வர்கள். ‘‘மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்யட்டும்’’ என்றார். ‘‘பஞ்சாயத்துத் தலைவர்களை உருவாக்குவதால் நாட்டில் லட்சக்கணக்கான அதிகார மையங்கள் உருவாகும்’’ என்றார்கள். ‘‘நம் நாட்டின் பிரதமரும் மாநிலங்களின் முதல் வர்களும்கூட தனித்து முடிவு எடுக்க முடியாது; மன்றங்கள்தான் தீர்மானிக்கும். பஞ்சாயத் துத் தலைவருக்கும் இது பொருந்தும். கிராம சபையே தீர்மானிக்கும்’’ என்றார். ‘‘கிராமங் களில் முடியாட்சி நடக்கும்’’ என்றார்கள். ‘‘முடியாட்சி அல்ல; குடியாட்சி’’ என்றார். எவ்வளவு சொல்லியும் யாரும் ஏற்கவில்லை. ஆனால், அசுர பலத்தில் இருந்தது காங்கிரஸ்.
இந்திரா காந்தியின் அனுதாப அலையில் காங்கிரஸ் - அதிமுக கூட்டணி 416 இடங்களைப் பிடித்திருந்தன. காங்கிரஸ் மட்டும் 404 இடங்களை (49.01 % ஓட்டுக்கள்) பிடித்திருந்தது. இதனால் நாடாளுமன்றத்தில் இதனை எளிதாக நிறைவேற்றியது காங்கிரஸ். ஆனால், ராஜ்ய சபா என்று ஒன்று இருக்கிறதே... மேலும், ஆட்சியின் இறுதிக் காலகட்டத்தில் ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியிருந்தார் ராஜீவ். போபர்ஸ் ஊழல், போபால் விஷ வாயு சம்பவம், சீக்கியருக்கு எதிரான நடவடிக்கைகள், இலங்கைக்கு அமைதிப் படையை அனுப்பியது, மாலத்தீவு விவகாரம், அயோத்தி பிரச்சினை என்று பல்முனை தாக்குதலில் சிக்கினார் அவர். ராஜ்ய சபாவில் செல்லுபடியாகவில்லை காங்கிரஸின் அதிகாரம். 1989, அக்டோபர் 15-ம் தேதி நள்ளிரவில் அங்கே தோற்கடிக்கப்பட்டது பஞ்சாயத்து ராஜ்ஜியத்துக்கான 63, 64-வது அரசியல் திருத்த மசோதா. கண்ணீருடன் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேறினார் ராஜீவ்.
அடுத்த பொதுத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது. குறுகிய காலத்தில் 1991-ல் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ். நரசிம்மராவ் பிரதமர் ஆனார். 63, 64-வது அரசியல் சாசன திருத்த மசோதா நாடாளுமன்ற இணைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. அந்தக் குழுவின் தலைவர் ராம் நிவாஸ் மிர்தா பரிந்துரையின் அடிப் படையில் அதில் பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன. மாநில அரசுகள் அச்சம் அடைந்த அம்சங்கள் களையப்பட்டன. 1991-ல் இந்த மசோதா, கூட்டு தேர்வு கமிட்டியின் ஆலோசனைக்கு விடப்பட்டது. பின்பு 1992 டிசம்பர் 22-ல் நாடாளுமன்றத்திலும் மறுநாள் ராஜ்ய சபையிலும் 73, 74-வது அரசியல் அமைப்பு திருத்த மசோதாவாக நிறைவேறியது. 1993-ல் குடியரசு தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டு, நாடு முழுவதும் மே மாதம் 30-ம் தேதி சட்டம் அமல்படுத்தப்பட்டது.
ஆனால், அதன் பின்பும் அவ்வளவு எளிதாக கிடைத்துவிடவில்லை மக்கள் அதிகாரம்... குறிப்பாக தமிழகத்தில்!
- பயணம் தொடரும்...
முக்கிய செய்திகள்
தமிழகம்
55 mins ago
தமிழகம்
28 secs ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
40 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago