காஞ்சிபுரத்தில் நலிவடைந்து வரும் பட்டு நெசவுத் தொழிலை மீட்டெடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெசவாளர்களும் உற்பத்தியாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு முத்திரை, பட்டுப் பூங்கா மற்றும் நெசவாளர்களுக்கு கடன் உதவி என பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், போலிகள் மற்றும் இடைத்தரகர்களின் ஆதிக்கத்தை தடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
வரலாற்றுச் சிறப்பும் பழமையும் நிறைந்த காஞ்சிபுரத்தில் உற்பத்தி செய்யப்படும் பட்டு ஆடைகள், உலகப் புகழ் பெற்றவையாக விளங்குகின்றன. இந்தியாவில் மட்டுமின்றி, உலகளவிலும் குறிப்பாக பெண்கள் மத்தியிலும் காஞ்சிப் பட்டுக்கு என தனி வரவேற்பு உண்டு.
காஞ்சிப் பட்டின் சிறப்புக்கு காரணம்
பட்டுப் புழுவின் கூடு ஒரே நூலால் உருவாக்கப் பட்டது. ஒரு கூட்டில் 500 முதல் 1000 மீட்டர் நீளம் வரை பட்டு இழை இருக்கும். பட்டுப் புழு, கூடு கட்டிய 10 நாட்களுக்குள் கூட்டில் இருந்து நூலை பிரித்தெடுக்க வேண்டும். 10 நாட்களுக்கு பிறகு பட்டுக் கூட்டின் உள்ளே இருக்கும் கூட்டுப் புழுவானது உருமாற்றம் அடைந்து, அந்துப் பூச்சியாக கூட்டை விட்டு வெளியேறும். இதனால் இழையை ஒரே நூலாக பிரிக்க முடியாது. கூட்டுப் புழு உருமாற்றம் அடைவதற்கு முன் அது சுடுநீரில் போடப்பட்டு அதனை வேகவைக்க வேண்டும். அதன் பின்னர் நூல் பிரித்தெடுக்கப்படுகிறது. இதுவே உயர் தரமான பட்டு நூல். காஞ்சி பட்டுச் சேலைகளில் இதுபோன்ற பட்டு நூல்களே பயன்படுத்தப்படுவதாக நெசவாளர்கள் தெரிவிக்கின்றனர்.
காஞ்சிப் பட்டும் மற்ற பட்டுகளும்
காஞ்சிப் பட்டானது மற்ற பட்டில் இருந்து வித்தியாசமானதாக உள்ளது. இதில் ஒரு இழையில் 3 மெல்லிய இழைகள் இருக்கும். அதேபோல் ஜரிகை பகுதிக்கும், புடவைக்கும் இடையில் இணைப்பு வேலைப்பாடுகள் அதிகம் இருக்கும். அதேபோல் ஜரிகையில் 40 சதவீதம் வெள்ளியும், 0.5 சதவீதம் தங்கமும் இருக்கும் படி ஜரிகை உற்பத்தி செய்யப்படுகிறது. மற்ற பட்டுப் புடவைகளைவிட அதிக எடை கொண்டதாக இருக்கும். சுப நிகழ்ச்சிகளுக்கு இந்த பட்டுப் புடவைகளையே பொதுமக்கள் அதிகம் வாங்குகின்றனர்.
பட்டு நெசவாளர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்
காஞ்சிபுரத்தில் மொத்தம் 83 பட்டு கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகின்றன. இதில் 64,048 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஆனாலும் பெரும்பாலான பட்டு கூட்டுறவுச் சங்கங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு வேலை குறைவாகவே கிடைக்கிறது.
தனியார் கடைகள் மூலம் விற்பனை செய்யப் படும் பட்டுப் புடவைகள் சிலவற்றில் மாற்று ஜரிகைகள் மூலம் குறைவான விலையில் பட்டுச் சேலைகளை விற்பனை செய்கின்றனர். தரமற்ற இந்தச் சேலைகளால் கூட்டுறவுச் சங்கம் மூலம் விற்பனை செய்யப்படும் பட்டுப் புடவைகளின் விற்பனை குறைந்து நெசவாளர்கள் போதிய வருமானம் இன்றி பாதிக்கப்படுகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு கைத்தறி சம்மேளனத் தின் மாநில பொதுச் செயலர் முத்துக்குமார் கூறியதாவது: சில தனியார் நிறுவனங்கள் போலி பட்டுப் புடவைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் வெளியூர்களில் இருந்து வந்து காஞ்சி பட்டுச் சேலைகளை நம்பி வாங்குவதற்கான சூழல் மாறியுள்ளது என்று அவர் கூறினார்.
காஞ்சிபுரம் பச்சையப்பா சில்க் உரிமையாளர் சங்கர் கணேஷ் கூறியதாவது: காஞ்சிபுரத்துக்கு வரும் பொதுமக்களை, சில இடைத்தரகர்கள் தரமற்ற பட்டு விற்கும் கடைகளுக்கு அழைத்துச் செல்கின்றனர். இடைத்தரகர்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.
தொடர்ந்து பல்வேறு தொழில் நிறுவனங்கள் காஞ்சிபுரத்தை சுற்றி உருவாகி வருவதால் பலர் அந்த தொழிலுக்குச் செல்கின்றனர். இதனால் பட்டு நெசவுத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது என்று அவர் கூறினார்.
பட்டு நெசவுத் தொழில் உற்பத்தியாளர் மற்றும் உரிமையாளரான தாமோதரன் கூறிய தாவது: கச்சா பட்டு விலை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு கிலோ ரூ.2,600-க்கு விற்பனை செய்யப்பட்ட கச்சா பட்டு, தற்போது கிலோ ரூ.3,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. பட்டுத் தொழில், குறைந்த முதலீட்டில் பல்லாயிரம் பேருக்கு தொழில் வாய்ப்பை கொடுக்கக் கூடியது. எனவே இந்த தொழிலை வளர்ப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
போலி பட்டுகளால் பாதிப்பு
சில தனியார் பட்டுச் சேலைக் கடை உரிமையாளர்கள், ‘சில்க் மார்க் ஆஃப் இந்தியா’ என்ற மத்திய அரசின் நிறுவனம் வழங்கும் சில்க் மார்க் முத்திரையை, போலி பட்டுகள் மூலம் தயாரிக்கப்பட்ட சேலைகளில் பயன்படுத்தி, தூய பட்டுச் சேலைகள் என விற்பனை செய்வதாக குற்றம்சாட்டப்படுகிறது.
‘சில்க் மார்க்’ முத்திரை பட்டுச் சேலையில் பயன்படுத்தப்படுவதால், அதில் உள்ள ஜரிகையின் தரத்தை அறியாமல், 35 சதவீதம் வெள்ளி இழைகளைக் கொண்ட ஜரிகை என்ற நம்பிக்கையுடன் பட்டுச் சேலைகளை நுகர்வோர் வாங்குகின்றனர். பட்டுச் சேலையை, மத்திய அரசின் கம்ப்யூட்டர் ஜரிகை பரிசோதனைக் கூடத்தில் ஆய்வு செய்யும்போது போலி என தெரியவருகிறது. இதனால், நூகர்வோர் கடுமையாக ஏமாற்றமடைகின்றனர். மேலும், காஞ்சிபுரம் பட்டுச் சேலையின் பாரம்பரியத்துக்கும் களங்கம் ஏற்படுகிறது. இதனால்,போலி பட்டுச் சேலைகளை தடுப்பதற்காக ‘சில்க் மார்க் ஆஃப் இந்தியா’ நிறுவனத்தின் கிளை அலுவலகத்தை காஞ்சி நகரத்தில் திறக்க வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, காஞ்சிபுரம் கைத்தறி மற்றும் துணிநூல்துறை வட்டாரங்களில் கேட்டபோது, ‘சில்க் மார்க் ஆஃப் நிறுவனத்தின் கிளை அலுவலகம் திறக்கப்பட்டால், அவ்வப்போது கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, போலி பட்டுச் சேலைகளை பறிமுதல் செய்ய முடியும்’ என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதுகுறித்து, ‘சில்க் மார்க் ஆஃப் இந்தியா’ நிறுவனம் தெரிவித்ததாவது: ‘சில்க் மார்க்’ முத்திரை என்பது, ஹோலோக்ராமுடன் கூடிய 100 சதவீத தூய்மையான பட்டுக்கான உத்தர வாதமாக அளிக்கப்படும் சான்று. இதை தூயப் பட்டினால் தயாரிக்கப்பட்ட பட்டு பாவடைகள், அங்கவஸ்த்திரம் மற்றும் பிற பட்டாடைகளில் பயன்படுத்தலாம்.
ஆனால், பட்டில் உள்ள ஜரிகைக்கு உத்தரவாதம் இல்லை. அதனால், நுகர்வோர் கடைகளில் வாங்கும் பட்டுச் சேலைகளில் சில்க் மார்க் முத்திரை இருந்தாலும், ஜரிகையின் தரத்தை அறிந்து பரிசோதித்து வாங்க வேண்டும்.
பட்டுச் சேலைக்கு புகழ்மிக்க காஞ்சியில் சில்க் மார்க் நிறுவனத்தின் கிளை அலுவலகத்தை திறக்க, மாவட்ட நிர்வாகம் மற்றும் கைத்தறித்துறை முயற்சிக்க வேண்டும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
போலி ஜரிகை நுழைந்த வரலாறு
காஞ்சிபுரத்தில் போலி ஜரிகை நுழைந்த வரலாறு குறித்து நெசவாளர் வேலு கூறியதாவது: சாதாரண புட்டா ரகம் கொண்ட பட்டுச் சேலை குறைந்தபட்சம் 650 கிராம் முதல் 700 கிராம் வரை இருக்கும். அசல் வெள்ளி ஜரிகையின் மூலம் உடல் முழுவதும் ஜரிகை வேலைப்பாடுகள் நிறைந்த கல்யாண பட்டுச் சேலை 800 கிராம் முதல் 1 கிலோ வரை இருக்கும்.
இந்த பட்டுச் சேலை குறைந்தபட்சம் ரூ.32 ஆயிரம் முதல் ரூ.84 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. காஞ்சி பட்டுச் சேலையின் மீது ஈர்ப்பு ஏற்பட்டதற்கு காரணமே ஜரிகை வேலைப்பாடுதான். இதனால், பெண்கள் நாளுக்கு நாள் பட்டுச் சேலையில் புதுமையை விரும்பினர்.
அதிக விலையினால் ஏழை எளிய பெண்களால் காஞ்சி பட்டை வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. குறைந்த ஜரிகை வேலைப்பாடுகள் நிறைந்த பட்டுச் சேலை என்றாலும் ரூ.8 ஆயிரம் என்ற நிலை இருந்தது. பட்டுச் சேலையின் எடையை பெண்கள் சிரமமாகவே கருதினர்.
எடை மற்றும் விலை குறைவான பட்டுச் சேலைகள் வேண்டுமானால், அசல் ஜரிகையின்றி தயாரித்தால் மட்டுமே முடியும். சேலம் மாவட்டத்தில் நடைமுறையில் இருந்த (எச்எப்) போலி ஜரிகையின் மூலம் விலை குறைந்த பட்டுச் சேலை தயாரிக்கப்பட்டது. இது, காஞ்சி அசல் ஜரிகை மூலம் தயாரிக்கப்பட்ட பட்டுச் சேலை போல் பளிச்சிட்டது. விலையும் பாதியாக குறைந்தது. பெண்களிடம் இந்த பட்டுச் சேலைக்கு வரவேற்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து, உற்பத்தியாளர்கள் குறைந்த முதலீட்டில் அதிக லாபமடையும் வகையில் போலி ஜரிகையைக் கொண்டு பட்டுச் சேலை தயாரிப்பில் ஈடுபட்டனர். இவ்வாறு (எச்எப்) எனப்படக் கூடிய போலி ஜரிகை காஞ்சிபுரத்தில் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு நுழைந்தது.
பெண்கள் மத்தியில் ஏற்பட்ட வரவேற்பால் உடல் செல்பு, பாயாடி மற்றும் பெரிய பார்டர் களை கொண்ட பட்டுச் சேலைகள் விற்பனைக்கு வந்தன. இவை, 400 கிராம் முதல் 500 கிராம் வரை எடை கொண்டதாக இருந்தன. போலி ஜரிகை மற்றும் அசல் வெள்ளி ஜரிகை பட்டுச் சேலைகள் இரண்டும் ஒரே கடையில் விற்பனை செய்யப்பட்டன.
இதனால், ஒரு சில விற்பனையாளர்கள் வெளி யூர் மற்றும் வெளி மாநில நுகர்வோரிடம் போலி ஜரிகை சேலைகளை அசல் ஜரிகை எனக் கூறி விற்பனை செய்து கொள்ளை லாபமடைந்தனர். இந்த ஏமாற்று விற்பனை நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஒருசில மாதங்களில் அவை பளிச்சிடும் தன்மையை இழந்து கருத்தன.
இதனால், ஏமாற்றமடைந்த பெண்கள் போலி ஜரிகை பட்டுச் சேலைகளை வாங்குவதை நிறுத்தினர். ஆனால், குறைந்த முதலீட்டில் அதிக லாபமடைந்த ஒருசில விற்பனையாளர்கள் போலி ஜரிகை பட்டுச்சேலை உற்பத்தியை நிறுத்தாமல் தொடர்ந்தனர். இதனால், காஞ்சி அசல் வெள்ளி ஜரிகை பட்டுகளில் கலப்படம் ஏற்பட்டு அதன் பாரம்பரிய புகழ் சரியத் தொடங்கியது என்று அவர் கூறினார்.
இடைத்தரகர்களால் ஏற்பட்ட சரிவு
தனியார் பட்டுச் சேலை விற்பனையாளர்கள் சிலர் கூறியதாவது: ஒரு சிலர், தங்களின் கடைகளுக்கு நுகர்வோரை அழைத்து வரும் நபர்களுக்கு, ரூ.1,000-க்கு ரூ.100 கமிஷன் அளித்து ஊக்கப்படுத்தினர்.
இதனால், காஞ்சிபுரத்தில் இடைத்தரகர்களின் எண்ணிக்கை அதிகரித்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு பட்டுச் சேலை விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக் கைகளால் இடைத்தரகர்கள் ஆதிக்கம் குறைந் தாலும், மறைமுகமாக செயல்பட ஆரம்பித்தனர். ஆட்டோ மற்றும் வாடகை கார் ஓட்டுநர்கள் மூலம் தங்களது பணிகளை தொடர்ந்து வருகின்றனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
தறிக்கூடங்கள் அமைத்து விற்பனை
நெசவுத் தொழிலை கைவிட்டு தனியார் கடைகளில் உதவியாளராக பணிபுரியும் நெச வாளர்கள் சிலர் கூறியதாவது: பட்டுக் கூட்டுறவு சங்கங்களில், 45 நாட்களுக்கு 3 புடவைகள் நெய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். 20 நாட் களுக்கு 3 புடவைகள் நெய்த நெசவாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. குறைந்த கூலிக்கு தனியாரி டம் பாவு பெற்று, நெசவு செய்யும் நிலை நெசவாளர்களுக்கு ஏற்பட்டது. இதை பயன் படுத்தி, தனியார் உற்பத்தியாளர்கள் அதிக கூலி அளிக்க வேண்டிய ரகங்களை, குறைந்த கூலிக்கு நெய்யுமாறு பணித்தனர்.
நெசவாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராட்டங்களில் ஈடுபட்டனர். நெசவாளர்கள் வேறு பணிகளுக்கு சென்றதால், காஞ்சி பட்டுத் தறிகளின் எண்ணிக்கை குறைந்தது. தற்போது, அரசாங்கத்தின் சில நடவடிக்கைகள் காரணமாக மீண்டும் விற்பனை அதிகரித்துள்ளது. தனியார் உற்பத்தியாளர்கள் சிலர் தங்கள் கடைகளின் முன்பு ஒரு தறியை ஏற்படுத்தி, அதை நுகர்வோர்களை காணச்செய்து, இவ்வாறுதான் பட்டுச் சேலை உற்பத்தி செய்யப்படுவதாக கூறியும், தங்கள் கடையில் அனைத்து பட்டுச் சேலைகளும் இவ்வாறுதான் தயாரிக்கப்பட்டது எனவும் விளம்பரப்படுத்தி, விசைத் தறியில் நெய்யப்பட்ட சேலைகள் மற்றும் போலி ஜரிகை அடங்கிய பட்டுச் சேலைகளை விற்பனை செய்கின்றனர் என்று அவர்கள் தெரிவித்தனர்.
கூட்டுறவுச் சங்கங்களின் பெயர்களில் போலி
கூட்டுறவுச் சங்க நெசவாளர்கள் கூறியதாவது: காஞ்சிபுரம் நகரின் காந்தி சாலையில், 30-க்கும் மேற்பட்ட பட்டு கூட்டுறவுச் சங்கங்கள் செயல் பட்டு வருகின்றன. இந்நிலையில், கூட்டுறவு சங்கத்தின் பெயரில் சிறிது மாற்றம் செய்து, அனுமதி பெற்று, சில தனியார் கடை உரிமையாளர்கள் பட்டுச் சேலைகளை விற்பனை செய்து வருகின்றனர்.
உதாரணமாக ‘திருவள்ளுவர் பட்டு கூட்டுறவு சங்கம்’ என்ற பெயரை, ‘திருவள்ளுவா’ என்ற பெயர் பலகை வைத்து விற்பனை செய்கின்றனர். இதைப் பார்க்கும் நுகர்வோர், பட்டு கூட்டுறவுச் சங்கம் என நினைத்துவிடுகின்றனர். இதை அரசு தடுக்க வேண்டும் என்றனர்.
பட்டு நெசவாளர்களின் எதிர்பார்ப்பு
என்.வெங்கடேசன்
மின்னணு ஜாக்கார்டு முறையில் வடிவமைப்பு இயந்திரங்கள் நெசவாளர்கள் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருக்கும். பட்டு நெசவாளர்களுக்கு வேலை கூடுதலாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
செந்தில்நாதன்
பட்டு நெசவிலும் தற்போது புதிய உத்திகள் வந்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. நெசவாளர்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் எளிதில் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.
ஆர்.கே.ராஜா
புதிதாக வடிவமைப்புக்கு இயந்திரங்கள் வந்திருப்பது நம்பிக்கை அளிக்கிறது. இதனால் இந்த தொழிலை விட்டுச் சென்றவர்கள் மீண்டும் பட்டு நெசவுக்கே திரும்புவார்கள்.
கே.ஆர்.பார்த்தசாரதி
நெசவாளர்கள் வருமானம் குறைந்ததற்கு போலி பட்டுச் சேலைகளை தனியார் சிலர் விற்பதே காரணம். மேலும் இடைத்தரகர்களை நியமித்து சேலை வாங்க வருபவர்களை அவர்கள் கடைக்கு அழைத்துச் செல்வதும் முக்கியக் காரணம்.
அசல் பட்டு... அடையாளம் காணும் வழிமுறை
கைத்தறி சேலைகளில் கைத்தறி முத்திரைகள் இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும். சுத்தமான பட்டுச் சேலைக்கு ‘சில்க் மார்க்’ முத்திரையும் குத்தப்பட்டிருக்கும். ஜரிகை உண்மையானதா என்பதை அறிய தமிழ்நாடு ஜரிகை ஆலையின் பரிசோதனை மையத்தில் எக்ஸ்ரே ஊடுகதிர் பகுப்பாய்வு இயந்திரத்தில் தரத்தினை உறுதிபடுத்திக் கொள்ளவும், ஒவ்வொரு சேலையின் விற்பனை பட்டியலில் விலை விவரங்கள், பட்டு ஜரிகை எடை விவரங்கள், எந்த ரகம் என்ற விவரங்கள் உள்ளனவா என்பதை அறிந்து கொள்ளவும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அறிவுறுத்தியுள்ளது.
நெசவாளர்கள் கூறும் விளக்கம்: காஞ்சி பட்டை ரூ.5 ஆயிரத்துக்கு குறைவாக விற்பனை செய்யவே முடியாது. இங்கு பல்வேறு இடங்களில் ரூ.1000 மற்றும் ரூ.2000 ஆயிரத்துக்கு பட்டுச் சேலைகள் விற்பனை செய்யப்படுகின்றன. கும்பகோணம், தஞ்சாவூர், சேலம், தர்மாவரம் போன்ற பகுதிகளில் இருந்து போலி ஜரிகை சேலைகளைத் தயாரித்து அதனை காஞ்சிபுரத்தில் விற்பனைக்கு அனுப்புகின்றனர். எனவே, ஆங்காங்கே பரிசோதனைக் கூடங்களை அமைக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து மாநில கைத்தறி மற்றும் துணிநூல் துறை துணை இயக்குநர் மகாலிங்கத்திடம் கேட்டபோது, ‘தனியார் தொழில் நிறுவனங்களுடன் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து காஞ்சி பட்டில் என்ன இருக்க வேண்டும்? எந்த முத்திரைகளை பார்க்க வேண்டும் என்பது குறித்த அறிவிப்புகளை நுகர்வோருக்கு தெளிவாக தெரிவிக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம். இடைத்தரகர்களை பயன்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளோம். எவ்வாறு உண்மையான பட்டை அடையாளம் காண்பது என்பது தொடர்பான விழிப்புணர்வு பலகைகளையும் வைக்க உள்ளோம். பட்டு நெசவாளர்களின் நலனுக்காக ‘முத்ரா’ திட்டத்தின் கீழ் 1,500 பேருக்கு கடன் உதவிகள் வழங்கியுள்ளோம். அவர்களுக்கு அதில் ரூ.10 ஆயிரம் வரை மானியம் கிடைக்கும். மீதமுள்ள தொகையை அவர்கள் செலுத்தினால் போதுமானது’ என்றார்.
போலி பட்டு... கண்டறிவது எப்படி?
காஞ்சிபுரம் பட்டுச் சேலைகளின் முந்தி பகுதி வேலைப்பாடு மிகவும் கச்சிதமாக இருக்கும். முந்தி பகுதிக்கும் உடல் பகுதியில் சேலையின் நிறத்தை மாற்றுவதே இந்த வேலைபாடு. காஞ்சிபுரம் நெசவாளர்கள் இந்த பணியை மிகவும் நேர்த்தியாக மேற்கொள்வார்கள். ஆரணி மற்றும் தர்மாவரம் பட்டுச் சேலையில் இந்த வேலைப்பாடுகளை காண முடியாது.
தரமான ஜரிகையின் மூலம் உற்பத்தி செய்யக் கூடிய பட்டுச் சேலையின் விலை குறைந்தபட்சம் ரூ.8 ஆயிரத்தில் தொடங்கும். தரம் குறைந்த சேலை ரூ.3 ஆயிரத்துக்கே கிடைக்கும்.
பட்டு மற்றும் ஜரிகையின் தரத்தை அறிந்து கொள்ள மத்திய பட்டு வாரியம் மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல்துறை சார்பில் கணினி ஜரிகை பரிசோதனை கூடம், காந்தி சாலையில் 2 இடங்களில் அமைக்கப்பட்டது. பட்டுச் சேலைகளை இதில் பரிசோதனை செய்ய ரூ.50 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
காஞ்சிபுரத்தில் புதிதாக கணினி ஜரிகை பரிசோதனை மையம் அமைக்கப்படும் என மத்திய பட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இத்தகைய பரிசோதனைக் கூடங்கள் காந்தி சாலையில் இருப்பது பெரும்பாலான நுகர்வோருக்கு தெரியாது. எனவே, இது குறித்த விழிப்புணர்வு பலகைகள் அமைப்பதோடு, போலிகளை எவ்வாறு கண்டறிவதென குறும்படம் மற்றும் டிஜிட்டல் பலகைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என நெசவாளர்கள் வலியுறுத்தினர்.
பட்டுப் பூங்கா திட்டம்
பட்டு நெசவாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்கவும், அவர்களுக்கு தேவையான பொருட்கள் ஒரே இடத்தில் கிடைக்கவும் ரூ.84 கோடி செலவில் 75 ஏக்கரில் பட்டுப் பூங்கா அமைக்கப்படும் என அரசு அறிவித்தது. எனினும் இத்திட்டம் செயல்படுத்தப்படவில்லை. பட்டுப் பூங்கா அமைந்தால், 80 கடைகள் உருவாக்கப்பட்டு பட்டு நெசவுக்கு தேவையான அனைத்து பொருட்களும் அங்கேயே கிடைக்கும்.
சாயம் போடுவதற்கு தேவையான சாயப்பட்டறைகளும், விற்பனை செய்யப்படும் கடைகளும் அங்கேயே உருவாகும். இதன் மூலம் நெசவாளர்களுக்கு, நெசவு செய்வதுடன், அவர்களே விற்பனை செய்வது, தேவையான பொருட்களை சிரமம் இன்றி பெறுவது என அனைத்தும் அங்கு கிடைக்கும். அதனால் விரைவில் பட்டுப் பூங்காவை அமைக்க வேண்டும் என நெசவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
பாலாற்றில் இருந்து 5 கி.மீ. தொலைவுக்குள் சாயப்பட்டறைகள் அமைவதால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் பட்டுப் பூங்காவுக்கு அனுமதி கொடுக்கவில்லை. அதேபோல் வெளியூர் சாயப்பட்டறைகளை இதில் அனுமதித்தால் அது காஞ்சிபுரம் மக்களுக்கும் பயனில்லாமல் நிலமும் மாசுபடும் என்ற கருத்து நிலவியது. தற்போது அதில் உள்ளூர் பிரமுகர்களுக்கே வாய்ப்பளிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago