நவ.6-ம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தமிழகத்தில் நவம்பர் 6-ம் தேதி ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்தவும், அந்த ஊர்வலத்துக்கு காவல்துறை அனுமதியளிக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் 2-ம் தேதி ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கும்படி பல்வேறு நிபந்தனைகளை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 22-ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் மற்றும் பிஎஃப்ஐ அமைப்புக்கு விதிக்கப்பட்ட தடையை காரணம்காட்டி, தமிழக அரசு ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி மறுத்து உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன், " நிபந்தனைகளை வகுத்து, ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர், காவல்துறை அனுமதி மறுத்துள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பு செயலாகும். பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவை தடை செய்யப்பட்டதால் நடைபெறும் போராட்டங்களை காரணம் காட்டி, நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள தங்களது ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி மறுக்கமுடியாது.

கடந்த 2013-ல் அம்பேத்கர் பிறந்த நாளன்று பேரணி நடத்த விசிக சார்பில் காவல்துறையிடம் மூன்று நாட்களுக்கு முன்னர் மனு கொடுத்துவிட்டு, உடனடியாக நீதிமன்றத்தை நாடியபோது, நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் தற்போது ஆர்எஸ்எஸ் தரப்பில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே ஊர்வலத்திற்கு அனுமதி கோரி விண்ணப்பித்தும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

யாருக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பமாட்டோம் என உத்தரவாதம் அளித்த பிறகும் காவல்துறை அனுமதி அளிக்க மறுப்பதற்கான அர்த்தம் புரியவில்லை. இந்த ஊர்வலத்திற்கு அனுமதி மறுக்க வேண்டும் என்பதற்காகவே சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என காவல்துறை கூறுகிறது" என்று வாதிட்டர்.

ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் ஜி. ராஜகோபாலன், சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டியது தான் காவல்துறையின் கடமை. இதை பலமுறை நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. பிஎஃப்ஐ தடையை எதிர்த்து கடுமையான போராட்ட்ம் நடைபெறும் கேரளா, புதுச்சேரியில் அனுமதி வழங்கபட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது" என்று வாதிட்டார்.

ஆர்எஸ்எஸ் தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, "மகாத்மா காந்தியின் பிறந்தநாளை கொண்டாடும் வகையிலான ஊர்வலத்திற்கு தமிழகத்தில் மட்டும் எப்படி அனுமதி மறுக்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.

அப்போது, காவல்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ , " என்ஐஏ சோதனை, பிஎஃப்ஐ அமைப்பு மீதான தடை, பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டுவீச்சு ஆகியவற்றை கருத்தில் கொண்டு காவல்துறை இந்த முடிவை எடுத்துள்ளது. குறிப்பாக சமூக விரோதிகள் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும், பொது சொத்துகளை சேதப்படுத்தவும் வாய்ப்புள்ளதாக மத்திய மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகள் அளித்த தகவலின் அடிப்படையில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், மத்திய உளவுத்துறையின் அறிக்கைகளை புறந்தள்ளிவிட முடியாது. பொது மக்களின் நலன் தான் உச்சபட்ச முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை கருத்தில் கொண்டு காவல்துறை செயல்படுகிறது. காந்தி ஜெயந்தி கொண்டாடக்கூடாது என காவல்துறை கூறுவதாக ஆர்எஸ்எஸ் தவறாக உருவகப்படுத்துகிறது" என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, காந்தி ஜெயந்தி அன்று ஊரவலம் செல்ல மட்டும்தான் அனுமதி மறுக்கிறீர்களா? என கேள்வி எழுப்பினார். மாற்றுத் தேதியில் அனுமதி கோரினால் பரிசீலித்து முடிவெடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, "பிஎஃப்ஐ தடைக்கு பிறகு சென்னை மற்றும் வடக்கு மண்டலத்தில் மட்டும் பாஜகவினருக்கு சொந்தமான 402 வீடுகள், 65 வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுகின்றன. என்ஐஏ சோதனை, பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களுக்குப் பிறகு 52,000 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார்.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி தற்போதைய நிலவும் சூழல், காவல்துறை விளக்கம், மனுதாரர்களுக்கு சொந்தமான இடங்களில் உள்ள அச்சுறுத்தல்களை கருத்தில் கொண்டு மாற்று தேதியில் ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு அறிவுறுத்தினார்.இதனை ஆர்எஸ்எஸ் தரப்பில் ஏற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து நவம்பர் 6-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று ஊர்வலத்தை நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு உத்தரவிட்ட நீதிபதி, அந்த ஊர்வலத்திற்கு காவல்துறை அனுமதி வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை வரும் அக்டோபர் 31-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்