ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புக்கும் ஊர்வலம், கூட்டங்கள் நடத்த அனுமதி கிடையாது - தமிழக அரசு அறிவிப்பு முழு விவரம்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புக்கும், ஊர்வலம் மற்றும் கூட்டங்கள் நடத்த அனுமதி அளிக்க இயலாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

நாட்டின் 75-வது சுதந்திர தினம், விஜயதசமியை முன்னிட்டு, வரும் அக். 2-ம் தேதி தமிழகம் முழுவதும் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்எஸ்எஸ் சார்பில் அனுமதி கோரப்பட்டது.

இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில், பல்வேறு நிபந்தனைகளுடன் ஊர்வலம் நடத்த அனுமதி அளிக்குமாறு காவல் துறைக்கு, நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், இந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், "மத நல்லிணக்கத்தைச் சீரழித்து, பிரித்தாளும் கொள்கையைப் பின்பற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்கு காந்தி ஜெயந்தி தினத்தில் அணிவகுப்பு நடத்த அனுமதிக்கக் கூடாது. அக். 2-ம் தேதி விடுதலை சிறுத்தைகள் சார்பில் சமூக நல்லிணக்க ஊர்வலம் நடத்த உள்ள நிலையில், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து உயர் நீதிதிமன்றம் பிறப்பித்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும்" என்று வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, இந்தக் கோரிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடும்படி இரு தரப்புக்கும் அறிவுறுத்திய உயர் நீதிமன்றம், முறையீட்டை ஏற்க மறுத்தது.

இந்நிலையில், திருவள்ளூரில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அப்பகுதி காவல் ஆய்வாளர் அனுமதி அளிக்காததால், உள்துறைச் செயலர், டிஜிபி, எஸ்.பி., காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதில், ஊர்வலத்துக்கு அனுமதி அளிக்காவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

சமீபத்தில் திமுக எம்.பி. ஆ.ராசா வின் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இந்து அமைப்புகள் போராட்டங்களை நடத்தின. தொடர்ந்து, பிஎஃப்ஐ அமைப்பு மீதான என்ஐஏ நடவடிக்கைகளை எதிர்த்து போராட்டங்கள், பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன.

இதனால் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதை சுட்டிக்காட்டி, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புக்கும் ஊர்வலம் மற்றும் கூட்டங்கள் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட அறிவிப்பில், "ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு, விதிகளுக்கு உட்பட்டு அனுமதி அளிப்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சட்டம்- ஒழுங்கு பாதுகாப்பு காரணமாக ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசால் பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இச்சூழலில், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி கேட்கப்பட்டுள்ள நாளில், சில அமைப்புகள் சமய நல்லிணக்கப் பேரணி, மனித சங்கிலி நடத்த அனுமதி கோரியுள்ளன.

மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்க, போலீஸார் ரோந்து உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய சூழலில், ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட எந்த அமைப்புக்கும் ஊர்வலம் மற்றும் கூட்டங்கள் நடத்த அனுமதி அளிக்க இயலாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பை சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர். அதேசமயம், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன், உள்ளிட்டோர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

டிஜிபிக்கு எதிரான அவமதிப்பு வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி மறுத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், டிஜிபிக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (செப். 30) விசாரணைக்கு வர உள்ளது.

வரும் அக். 2-ல் தமிழகம் முழுவதும் ஆர்எஸ்எஸ் சார்பில் அணிவகுப்பு நடத்த அனுமதி கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதிஇளந்திரையன், ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு, நிபந்தனையுடன் அனுமதி வழங்குமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை திரும்பப் பெறக் கோரி திருமாவளவன் தொடர்ந்த வழக்கை, அவசர வழக்காக விசாரிக்க உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

இதற்கிடையே, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கை காரணம் காட்டி, ஆர்எஸ்எஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட எந்த அமைப்பினரும் அக். 2-ம் தேதி ஊர்வலம் நடத்தக் கூடாது என்று தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இதற்கிடையில், ஆர்எஸ்எஸ் ஊர்வலம் நடத்த திருவள்ளூர் மாவட்ட போலீஸார் அனுமதி மறுத்ததை எதிர்த்து, ஆர்எஸ்எஸ் அமைப்பின் திருவள்ளூர் மாவட்ட இணைச் செயலர் கார்த்திகேயன், தமிழக உள்துறைச் செயலர், டிஜிபி, திருவள்ளூர் எஸ்.பி., திருவள்ளூர் நகர் காவல் ஆய்வாளர் ஆகியோருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமென நீதிபதி ஜி.கே.இளந்திரையனிடம் நேற்று வழக்கறிஞர் ரபுமனோகர் முறையீடு செய்தார். அதையடுத்து, இன்று (செப். 30) விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதி தெரிவித்துள்ளார்.

அதேபோல, ஆர்எஸ்எஸ் அணிவகுப்புக்கு அனுமதி வழங்க உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை மறுஆய்வு செய்யக்கோரி தமிழக அரசுத் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், பிஎஃப்ஐ அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலம் தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்திவிடும். எனவே, சட்டம்-ஒழுங்கு பிரச்சினையைக் கருத்தில்கொண்டு, ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க பிறப்பித்த உத்தரவை மறுஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த மனுவும் நீதிபதி இளந்திரையன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வர உள்ளது.

மனித சங்கிலிக்கும் தடை

இந்நிலையில், அக். 2-ம் தேதி தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடத்த உள்ளதாக விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவித்திருந்தன.

இதற்கு அனுமதி கோரி விசிக தலைவர் திருமாவளவன் அண்மையில் டிஜிபியிடம் மனு அளித்தார். இந்நிலையில், சமூக நல்லிணக்க மனித சங்கிலிக்கும் காவல் துறை அனுமதி மறுத்துள்ளது. இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, "ஒரே நாளில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு மற்றும் விடுதலை சிறுத்தைகள் மற்றும் அதன் நட்புக் கட்சிகளின் மனித சங்கிலிக்கு அனுமதி அளித்தால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே, இரு தரப்புக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது" என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

19 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்