கிண்டி சிறுவர் பூங்காவில் வன உயிரினம் பற்றிய காட்சியரங்கம்: நாளை முதல் செயல்படத் தொடங்கும்

தமிழக வன உயிரினங்கள் பற்றிய ஆர்வத்தை சிறு வயதினரிடையே அதிகரிக்கச் செய்யும் நோக்கில், சென்னை கிண்டி சிறுவர் பூங்காவில், வனம் மற்றும் விலங்குகளைப் பற்றிய ஒரு ஒளி-ஒலி காட்சிக் கூடத்தை வனத்துறை திறக்கவுள்ளது.

நாட்டிலேயே சிறுவர் பூங்காக்களில் இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்படுவது இதுவே முதல் முறையாகும்.

சிறுவர் பூங்கா

சென்னை கிண்டியில் சிறுவர் பூங்கா அமைந்துள்ளது. நகரின் நடுப்பகுதியில் விலங்குகளைக் காட்சிக்கு வைத்திருக்கும் ஒரே பூங்கா இது என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு முதலை, அரிய வகை பறவைகள், ஓநாய், நரி, பாம்பு உள்ளிட்ட விலங்குகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

வண்ண ஒளி-ஒலி காட்சியரங்கு

இந்த சிறுவர் பூங்கா வனத்துறை யின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு ஒரு வண்ண ஒளி-ஒலி காட்சியரங்கை வனத்துறை யினர் தொடங்கவுள்ளனர். ரூ.42 லட்சம் செலவில் இந்த அரங்கு அமைக்கப்பட்டுள்ளது.

அங்கு, தமிழகத்தின் வன உயிரின வளத்தை சித்தரிக்கும் 40 வகை வன உயிரின படங்கள் மற்றும் பல்வேறு வகையான காடுகளில் இருக்கும் மரங்கள் இடம்பெறும்.

சுமார் 650 சதுர அடி பரப்பில் இந்த அரங்கம் அமைந்துள்ளது. ஒவ்வொரு வன விலங்கு குறித்து அறிவிப்பு வெளியாகும்போதும் குறிப்பிட்ட விலங்கின் மீது வண்ண ஒளி பாய்ச்சப்படும். அப்போது அந்த விலங்கு பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் விளக்கம் அளிக்கப்படும்.

சுமார் 40 நிமிடங்கள் வரை நீடிக்கும் இந்த காட்சிக்கு கட்டணமாக ஒருவருக்கு தலா ரூ.10 வசூலிக்கப்படும். நாள்தோறும் பகல் 11 மணி, நண்பகல் 12, பிற்பகல் 2 மற்றும் 3 மணி என நான்கு காட்சிகள் நடைபெறும்.

இது பார்வையாளர்களிடையே தமிழக வனம் மற்றும் வன உயிரினம் பற்றிய விழிப்புணர்வையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தும்.

இந்த காட்சிக் கூடத்துக்கு வன உயிரின விழிப்புணர்வு காட்சியரங்கம் எனப் பெயரிடப் பட்டுள்ளது. வரும் புதன் கிழமை முதல் பார்வையாளர் களுக்காக திறந்துவைக்கப்பட வுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE