பாஜகவினர் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீச்சு: உரிய நடவடிக்கை எடுக்க இஸ்லாமிய அமைப்பு வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் பாஜக நிர்வாகிகள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசுவது யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும் என, அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் அரசியல் கட்சிகள் மற்றும் ஜமாஅத் கூட்டமைப்பு குமரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அப்துல் ரகுமான் தெரிவித்தார்.

நாகர்கோவிலில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது: நாடு முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. அலுவலகங்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அப்போது எந்த தகவலும் கிடைக்காததால் முக்கிய நிர்வாகி களை கைது செய்துள்ளனர். ஆனால், இந்த அமைப்புகள் சமுதாய நலப் பணிகளை செய்து வருகிறார்கள். அப்படி இருக்க மத்திய அரசின் நடவடிக்கையை, பழிவாங்கும் நடவடிக்கையாக கருதுகிறோம்.

வரும் 30-ம் தேதி மாலை 4 மணிக்கு நாகர்கோவிலில் உள்ளமாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது.

தமிழகத்தில் பாஜக நிர்வாகிகளின் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசுவது யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும். பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ. கட்சியை முடக்குவதற்காக இதுபோன்ற சம்பவங்கள் நடத்தப்படுகிறது.

இதன் பின்னணியில் பாஜக உள்ளது. இதுதொடர்பாக போலீஸார் உரிய விசாரணை நடத்தி பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் உண்மை நிலையைக் கண்டறிய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மார்க்சிஸ்ட் கண்டனம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஆர்.செல்லசுவாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கன்னியாகுமரி மாவட்டத்தில் வகுப்புவாத பதற்றத்தை உருவாக்கும் குறியீடாக மண்டைக்காடை மாற்றும் முயற்சி நடந்துள்ளது. இது கண்டனத்துக்குரியது. மண்டைக்காட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நன்கு பயிற்சிபெற்ற நபர்கள் மூலம் நிறைவேற்றப்பட்ட சதிச்செயல் ஆகும்.

அமைதியை விரும்பும் மாவட்ட மக்களிடையே மீண்டும் பிரிவினையைத் தூண்ட நடக்கும் முயற்சிகளை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்.

மக்களிடையே வெறுப்பையும் பகைமையையும் தூண்டும் நடவடிக்கைகளை தடுக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை மாவட்ட ஆட்சியர் நடத்த வேண்டும் என அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE