மதுரை விமான நிலையத்திற்கு தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீரா? - கவுன்சிலர்கள் எதிர்ப்பால் அமளி

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

மதுரை: பெரியார் குடிநீர் திட்டத்தில் மதுரை விமான நிலையத்திற்கு தினமும் 2 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்வதற்கு மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் இந்திராணி தலைமையில் நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன், துணை மேயர் நாகராஜன் முன்னிலை வகித்தனர். மேயர் இந்திராணி கூட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில், "எரியாத 55 ஆயிரம் தெரு விளக்குகள் பழுதுப்பார்க்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தெருவிளக்குகள் படிபடியாக சரி செய்யப்படுகிறது. 30 நாட்களில் அனைத்து தெருவிளக்குகளும் சரி செய்யப்படும். வார்டுகளுக்கு தேவையான வசதிகள், பிரச்சினைகளை கவுன்சிலர்கள் மாமன்றத்தில் பேசும்போது மிக பொறுமையாகவும், பொறுப்புணர்வுடன் கண்ணியமான வார்த்தைகளை பயன்படுத்தி பேச வேண்டும். அது உங்கள் எதிர்கால பொதுவாழ்வுக்கு உதவும்" என்றார். தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு;

மண்டலத் தலைவர் வாசுகி: “தூய்மைப்பணியாளர்கள் வீடுகள் தோறும் சென்று சரியாக குப்பைகள் சேகரிப்பதில்லை. இந்தச் சூழலில் வெறும் 2 மணி நேரம் மட்டுமே வேலை செய்துவிட்டு வீட்டிற்கு சென்றுவிடுகிறார்கள். சாலைகளை சுத்தமாக பெருக்குவதில்லை. சாலைகளில் மண் சேர்ந்து இரு சக்கர வாகனங்களில் செல்வோர் சருக்கி விழும் நிலை உள்ளது. மாநகராட்சி சாலைகளில் சமீப காலமாக இரு புறமும் ஆக்கிரமிப்புகள் அதிகமாகிவிட்டது.”

மண்டலத் தலைவர் முகேஷ் சர்மா: “45-வது வார்டில் பாதாளசாக்கடை பொங்கி கழிவுநீர் சாலையில் ஓடுகிறது. பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. சாலையில் நடமாட முடியவில்லை. இது இந்த ஒரு வார்டு பிரச்சினை மட்டும் இல்லை; மாநகராட்சியின் பெரும்பாலான வார்டுகள் அவலம் இதுதான். ஒரு முறை புகார் சொன்னால் பம்பிங் செய்து அப்புறப்படுத்துகிறார்கள். இதற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.”

சிபிஎம் கவுன்சிலர் குமரவேல்: குலமங்கலம் மெயின் ரோடு கடந்த 4 மாதமாக வாகனங்கள் செல்ல முடியாமல், மக்கள் நடக்க முடியாமல் தோண்டிப்போட்டுள்ளனர். இதுவரை சரி செய்யவில்லை. தினசரி வாகன விபத்துகள் நடக்கிறது.”

காங்கிரஸ் கவுன்சிலர் முருகன்: “திமுக கூட்டணியில் இருப்பதால் குறைபாடுகளை எதிர்க்கவும் முடியில்லை. ஆதரிக்கவும் முடியவில்லை.”

மேயர் இந்திராணி: “குறைபாடுகளை கோரிக்கையாக சொல்லுங்கள்.”

திமுக கவுன்சிலர் ஜெயராமன்: “மாநகராட்சி பெரும் வருவாய் மாட்டுத்தாவணி பஸ் நிலையம், ஆரப்பாளையம் பஸ் நிலையம் கடைகள் வாடகை மூலம் கிடைக்கிறது. ஆரப்பாளையம் பஸ் நிலையத்தில் மாநகராட்சி அனுமதியில்லாமல் கடைகள் உள்ளன. அந்தக் கடைகளுக்கு குறிப்பிட்ட தொகை வாங்கி கொண்டு அதிகாரிகளே அனுமதிக்கின்றனர். அந்தக் கடைகளை அவர்கள் ரூ.30 ஆயிரத்திற்கு உள் வாடகைக்கு விடுகின்றனர். மேயர், ஆணையாளர் ஆய்வு செய்து இதுபோன்ற கடைகளை அப்புறப்படுத்த வேண்டும்.”

மாநகராட்சி ஆணையாளர்: “நாளை துணை ஆணையர் தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வருவார்கள்.”

திமுக கவுன்சிலர் ஜெயராமன்: “எனது 58வது வார்டில் 20 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். 40 ஆயிரம் மக்கள் வசிக்கிறார்கள். 20 ஆயிரம் மாணவ, மாணவிகள் படிக்கிறார்கள். ஆனால், இரண்டு வார்டுக்கு ஒரு கழிவு நீர் பம்பிங் ஸ்டேஷன் உள்ளது. அதனால், பாதாளசாக்கடை கழிவு நீர் பொங்கி தெருக்களில் ஓடுகிறது. வார்டுக்கு ஒரு பம்பிங் ஸ்டேஷன் வேண்டும்.”

சிபிஎம் கவுன்சிலர் விஜயா: “மதுரை விமான நிலையத்திற்கு பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தில் 2 லட்சம் லிட்டர் குடிநீர் வழங்குவதற்கு தீர்மானம் வைத்துள்ளீர்கள். தினமும் கொடுக்கிறீர்களா உள்ளிட்ட எந்த விவரமும் தெளிவாகவே இல்லையே?”

மாநகாட்சி அதிகாரிகள்: "பேச்சுவார்த்தையில்தான் உள்ளது. இறுதி முடிவு எட்டப்படில்லை."

கவுன்சிலர் விஜயா: “முடிவாகாத விஷயத்தை எதற்கு ஒப்புதலுக்கு வைத்துள்ளீர்கள்?”

உடனே மற்ற கவுன்சிலர்கள் எழுந்து “நமக்கே குடிநீர் போதுமானதாக இல்லை. அவர்களுக்கு 2 லட்சம் லிட்டர் தண்ணீர் கொடுத்தால் நாம் எங்கே போவது?" என்று கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கூச்சல், குழப்பத்துடன் கூட்டம் நிறைவடைந்தது.

கருணாநிதி, ஸ்டாலினை புகழ்ந்த அதிமுக மாநகராட்சி கவுன்சிலர்:

அதிமுக கவுன்சிலர் சோலை ராஜா பேசுகையில், "மாநகராட்சிப் பள்ளிகளுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி, முன்னாள் சபாநாயகர் பிடிஆர் பெயர்களை வைக்க கல்வி குழு சார்பில் தீர்மானம் போட்டுள்ளனர். தமிழ்நாட்டு முன்னேற்றத்திற்கும், தமிழ் மொழிக்கும், மக்களுக்கும் கருணநிதிதி நிறைய செய்துள்ளார். பிடிஆரும் அவரது காலத்தில் மதுரை வைகை ஆற்றில் பாலங்கள், நிறைய சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இவர்களை பெயரை வைக்க நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதுபோல், வார்டு 72ல் மாநகராட்சி பள்ளிக்கு சத்துணவு தந்த எம்ஜிஆர் பெயரையும், வார்டு 82ல் அனுப்பானடி மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிக்கு ஜெயலலிதா பெயரையும் சூட்ட வேண்டும். மதுரை நகர் பகுதியில் கபடி விளையாட இடமில்லாமல் இளைஞர்கள் தடுமாறுகிறார்கள்.

மாணவர்கள் படிப்புடன் இதுபோன்ற விளையாட்டில் கவனம் செலுத்தினால் மட்டுமே அவர்கள் வாழ்க்கையில் தடமாறாமல் இருப்பார்கள். விளையாட்டுக்கு தற்போதைய முதல்வர் முக்கியத்துவம் கொடுக்கிறார். அவரது ஆட்சியில் 29வது வார்டில் உள்ள லாரி ஷெட் இடத்தை கபடி விளையாடுவதற்கு ஒதுக்க வேண்டும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

28 mins ago

தமிழகம்

37 mins ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்