பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரத்துக்கு தமிழக அரசு விரைந்து முடிவு கட்ட வேண்டும்: ராமதாஸ், கமல்ஹாசன், சசிகலா வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

சென்னை: பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரத்துக்கு தமிழக அரசு விரைந்து முடிவு கட்ட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், வி.கே.சசிகலா உள்ளிட்டோர் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது:

பாமக நிறுவனர் ராமதாஸ்: கோவை உட்பட தமிழகத்தில் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் தொடர்ந்து நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள், பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளன. தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலான இந்த வன்முறை நிகழ்வுகள் கட்டுக்குள் கொண்டுவரப்படுவதற்கு மாறாக, பிற பகுதிகளுக்கு பரவி வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. அமைதிப் பூங்கா என்ற தமிழகத்தின் பெருமைக்கு பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் குந்தகத்தை ஏற்படுத்தி விடக்கூடாது.

தமிழகத்தில் 20-க்கும் மேற்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சு நிகழ்வுகள் நடந்திருக்கின்றன. அவற்றின் சிசிடிவி காட்சிகளும் பெளியாகியுள்ளன. இவ்வளவுக்கு பிறகும் ஓரிருவரைத் தவிர, குற்றவாளிகள் கைது செய்யப்படாதது கவலை அளிக்கிறது. பெட்ரோல் குண்டு வீச்சில் ஈடுபடுவோர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்படுவர் என்று டிஜிபி சைலேந்திரபாபு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழகத்தின் அமைதி, வளர்ச்சி, தொழில் முதலீடுகளை ஈர்த்தல் உள்ளிட்ட அனைத்துக்கும் சட்டம் - ஒழுங்கு நிலைநாட்டப்பட வேண்டியது அவசியம். இதை கருத்தில்கொண்டு பெட்ரோல் குண்டு வீச்சு கலாச்சாரத்துக்கு தமிழக அரசு விரைந்து முடிவு கட்ட வேண்டும்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்: தமிழகத்தில் பாஜக, இந்து முன்னணி, ஆர்எஸ்எஸ் அமைப்புகளை சேர்ந்தோரின் வீடுகள், வாகனங்கள் மீதான பெட்ரோல் குண்டு வீச்சு, தீவைப்பு சம்பவங்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கின்றன. இந்த சம்பவங்களில் ஈடுபட்ட யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள யாரும் இதுபோன்ற வன்முறையை பார்த்துக்கொண்டு அமைதியாக இருக்க மாட்டார்கள். எந்தச் சூழ்நிலையிலும் தமிழக மண்ணில் வன்முறை கலாச்சாரத்தை அனுமதிக்க மாட்டோம். அமைதிப் பூங்கா என்று பெயரெடுத்த தமிழகத்தை, வெடிகுண்டு கலவர கலாச்சாரத்துக்கு மாற்ற முயல்வோரை இரும்புக் கரம் கொண்டு அடக்கி, சட்டம்-ஒழுங்கையும், அமைதியையும் பாதுகாக்க வேண்டும்.

வி.கே.சசிகலா: தமிழகத்தில் தொடர்ச்சியாக பெட்ரோல் குண்டு வீசி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவது வண்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு இவற்றையெல்லாம் வேடிக்கை பார்க்காமல், பொது மக்களை அச்சுறுத்தும் விதத்தில் சட்டத்துக்கு புறம்பான செயல்களில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும்.

இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து: தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர், பாஜகவினர் மீது சமூக விரோதிகளால் நடத்தப்பட்டு வரும் வன்முறை மிகவும் கண்டிக்கத்தக்கது. அமைதிப் பூங்காவான தமிழகத்தில் இதுபோல நடக்கும் வன்முறை எந்த மதத்தினரானாலும், எந்த கட்சிகளாலும், நடந்தாலும் அதை இந்திய ஜனநாயக கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இதுபோன்ற செயலை தமிழக அரசு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE