சேலம், கோவை, ஈரோடு பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்களில் எஸ்டிபிஐ-யினர் 5 பேர் உட்பட 8 பேர் கைது

By செய்திப்பிரிவு

சேலம்/ஈரோடு/கோவை: சேலத்தில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில் குண்டு வீசிய, எஸ்டிபிஐ அமைப்பைச் சேர்ந்த இருவரை போலீஸார் கைது செய்தனர். சேலம் அம்மாப்பேட்டை பரமக்குடி நல்லுசாமி தெருவைச் சேர்ந்தவர் ராஜன் (50). சிற்பக் கலைஞர். ஆர்எஸ்எஸ் அமைப்பின் சமுதாய தலைவர்களை இணைத்தல் பிரிவில் பொறுப்பாளராக உள்ளார். நேற்று அதிகாலை அவரது வீட்டு வாசலில் மண்ணெண்ணெய் நிரப்பிய பாட்டில் குண்டை மர்ம நபர்கள் வீசியுள்ளனர். இதுகுறித்து துணை ஆணையர் மாடசாமி உள்ளிட்டோர்அடங்கிய தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

அதில், எஸ்டிபிஐ அமைப்பினருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுசம்பந்தமாக எஸ்டிபிஐ சேலம் மாவட்ட தலைவர் சையத் அலி (42), 34-வது வார்டு கிளை தலைவர் காதர் உசேன் (33) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

தீ வைத்தல், புகழுக்கு களங்கம் விளைவித்தல், மத நல்லிணக்கத்துக்கு எதிராகச் செயல்படுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுஉள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஷெரீப் பாஷா (40), முகமது ரபி (42), முகமது இஸ்மாயில் (30), முகமது ஹாரிஸ் (27), காஜா உசேன் (37) ஆகியோரையும் போலீஸார் கைது செய்தனர்.

ஈரோட்டில் நடந்த குண்டு வீச்சு சம்பவங்கள் தொடர்பாக எஸ்டிபிஐ அமைப்பைச் சேர்ந்த ஒருவர் உட்பட 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர். மேலும், கட்சி அலுவலகங்கள், பாஜக, இந்து அமைப்புகளின் தலைவர்களின் வீடுகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதேபோன்று, கோவையில் பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது மற்றும் இந்து முன்னணி பிரமுகரின் காருக்கு தீ வைத்தது தொடர்பாக, எஸ்டிபிஐ கட்சியை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

குனியமுத்தூர் சுப்புலட்சுமி நகரைச் சேர்ந்த பரத், முத்துசாமி சேர்வை வீதியைச் சேர்ந்த தியாகு (35) ஆகியோரது வீடுகள் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த, மதுக்கரை அறிவொளி நகர் ஜேசுராஜ்(33), குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்த இலியாஸ் (38) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE