தமிழகத்தில் பதற்றமான சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது: முத்தரசன் கருத்து

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் பதற்றமான சூழல் திட்டமிட்டு உருவாக்கப்படுவதாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்தார்.

கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

விஜயவாடாவில் அக்டோபர் 14-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற உள்ளது. அதில் நிறைவேற்றப்பட உள்ள அரசியல் தீர்மான வரைவு அறிக்கையை கோவை மாவட்டக்குழு ஏற்றுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.

இது திட்டமிட்ட ஒன்றாகவே எங்கள் கட்சி கருதுகிறது. பிஎஃப்ஐ அமைப்பு மீது எந்த அடிப்படையில் சோதனை நடக்கிறது மற்றும் என்ன ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்பதை பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும்.

மாறாக ஒரு கருத்தை உருவாக்கி அதை தடை செய்ய வேண்டும் என செயல்பட்டால் அது ஏற்புடையதல்ல. பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தபின் மாற்று கருத்துக்கு இடமில்லை என்ற நிலையில் தான் மத்திய அரசு செயல்படுகிறது.

சனாதனம் குறித்து பேசினால் ஆத்திரப்படும் அண்ணாமலை, மத்திய பாடத் திட்டத்தில் 6-ம் வகுப்பு பாடத்தில் சனாதனம் குறித்து படத்துடன் வெளியிட்டுள்ளதை தெரிந்து கொள்ள வேண்டும்.

இதை நீக்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும். தமிழகத்தில் சட்டம், ஒழுங்கைசீர்குலைத்து ஆட்சியை கவிழ்ப்பதற்கான சூழ்ச்சியை பாரதிய ஜனதா கட்சி மேற்கொண்டுள்ளது. தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE