திருப்பூர் பாஜக பொறுப்பாளர் தங்கியிருந்த வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: போலீஸார் விசாரணை

By இரா.கார்த்திகேயன்

திருப்பூர்: திருப்பூர் பாஜக பொறுப்பாளர் 3 ஆண்டுகளுக்கு முன்பு தங்கியிருந்த வீட்டில் பற்ற வைக்காத நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

திருப்பூர் அங்கேரிபாளையம் சாலை கொங்கு வேளாளர் பள்ளி பின்புறம், பாஜக பெரும் கோட்ட பொறுப்பாளர் பாலு (42) கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தங்கியிருந்த வீட்டில் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக அனுப்பர்ப்பாளையம் போலீஸார் விசாரித்து வருகின்றனர். திருப்பூர் அங்கேரிபாளையம் அடுத்த ஏவிபி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவருக்கு காங்கயம் பகுதியில் பஞ்சு ஆலை உள்ளது. இந்நிலையில், திருப்பூர், ஏவிபி லே-அவுட் பகுதியில் உள்ள இவரது வீட்டில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பாஜக பெரும் கோட்ட பொறுப்பாளர் புதுக்கோட்டை பாலு என்பவர் குடியிருந்துள்ளார். அதன்பின்னர் அவர் வீடு மாறி சென்றுவிட்டார். இந்நிலையில், நேற்று நள்ளிரவில் இரு சக்கரத்தில் வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அந்த வீட்டுக்குள் பெட்ரோல் குண்டை பற்ற வைக்காமல் தூக்கி வீசி உள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக அனுப்பர்பாளையம் போலீஸார் கூறியதாவது: வீட்டின் உரிமையாளர் லட்சுமணன் இன்று காலை வீட்டுக்குள் பற்ற வைக்காத நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டிருப்பதை பார்த்து புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக சிசிடிவி கேமராக்கள் ஆதாரம் எதுவும் கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரித்து வருகிறோம். தொடர்ந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவமானது, லட்சுமணன் மீது தொழில் போட்டியில் வீசப்பட்டதா? அல்லது பாஜக கோட்ட பொறுப்பாளர் வீடு மாறியது தெரியாமல், அவரை குறி வைத்து செய்யப்பட்ட தாக்குதல் சம்பவமா என்பது தொடர்பாக விசாரித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE