கோவை / பொள்ளாச்சி: பரம்பிக்குளம் அணையிலிருந்து நேற்று 2-வது நாளாக விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது. மதகுக்கு குறைவாக நீர்மட்டம் வந்து, தண்ணீர் வெளியேறுவது நின்றால் மட்டுமே சீரமைப்புப் பணி மேற்கொள்ள முடியும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பரம்பிக்குளம் - ஆழியாறு எனும் பிஏபி திட்டத்தில் கட்டப்பட்ட, 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணை கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்தாலும், தமிழக பொதுப்பணித்துறையே அதை நிர்வகிக்கிறது. பரம்பிக்குளம் அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் மூலம் திருமூர்த்தி அணை, ஆழியாறு புதிய ஆயக்கட்டு பகுதிகளில் சுமார் 4 லட்சம் ஏக்கர் நிலங்கள் பயனடைகின்றன. அணையில் 17,820 மில்லியன் கனஅடி தண்ணீரை தேக்க முடியும். அணையின் 3 மதகுகளிலும், தலா 21 அடி உயரத்துக்கு 35 டன் எடை கொண்ட கதவுகள் (ஷட்டர்கள்) பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், 2-வது மதகின் ஷட்டர் நேற்று முன்தினம் அதிகாலை உடைந்து, தண்ணீர் வெளியேறியது. தண்ணீரின் வேகத்தால் மற்ற ஷட்டர்களும் பாதிக்கப்படாமல் இருக்க, அந்த ஷட்டர்களும் குறிப்பிட்ட அளவுக்கு திறந்து விடப்பட்டன. தற்போது ஷட்டர் உடைந்ததால் சுமார் 6 டிஎம்சி தண்ணீர் வீணாக கடலில் கலக்கிறது.
இதுதொடர்பாக பொதுப்பணித்துறையினர் கூறும்போது, ‘‘2016-ல் ரூ.4.50 கோடி செலவில் அணையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. விபத்து நடந்த சமயத்தில் சங்கிலி உடைந்து கான்கிரீட் தூண் சமநிலை தவறி கீழே விழுந்துள்ளது. அந்த கான்கீரிட் தூண், ஷட்டரை அதிவேகமாக தாக்கியுள்ளது. அதிக அழுத்தம் கொண்ட தண்ணீரும் சேர்ந்து, ஷட்டரை மதகின் காடியில் இருந்து பெயர்த்து தண்ணீரில் அடித்து செல்ல காரணமாக இருந்திருக்கும் என யூகிக்கிறோம்.
மதகுக்கு கீழ் வரை நீர் வெளியேறிய பிறகே ஷட்டர் சீரமைப்பை மேற்கொள்ள முடியும். அதுவரை காத்திருக்க வேண்டியுள்ளது. அணையில் 2-வது நாளான நேற்று விநாடிக்கு 14 ஆயிரம் கனஅடிக்கு தண்ணீர் வெளியேறியது. அணையில் நேற்று 64 அடிக்கு நீர் இருந்தது’’ என்றனர்.
ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் திருநாவுக்கரசு கூறும்போது, ‘‘பொதுவாக அணைகளில் ஷட்டர் உடைந்தால், புதிய ஷட்டர் அமைக்க ஒரு வருடமாகிவிடும். எனவே, புதிய ஷட்டர் அமைக்கப்படும் வரை, மீண்டும் அணை நிரம்பினால் நீர் வெளியேறாத வகையில், கருங்கற்களைக் கொண்டு ஷட்டர் இருந்த பகுதியில் தற்காலிக சுவர் எழுப்பலாம்.
2-வதாக பெரிய காற்று நிரப்பப்பட்ட ரப்பர் கட்டமைப்பை கதவு இருந்த இடத்தில் தற்காலிகமாக பொருத்தலாம். ஆனால், இந்த 2 வழிமுறைகளும் நீர் வெளியேற்றம் நின்ற பின்னரே மேற்கொள்ள முடியும்’’ என்றார்.
இது தொடர்பாக அணையைப் பார்வையிட்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறும்போது, ‘‘முதல்வரிடம் கலந்து பேசி போர்க்கால அடிப்படையில் ஷட்டரை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும். மற்ற அணைகளின் மதகுகளின் நிலையும் ஆய்வு செய்யப்படும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
58 secs ago
தமிழகம்
11 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
14 hours ago
தமிழகம்
14 hours ago