மதுரை எய்ம்ஸ் கட்டுமானத்துக்கான பூர்வாங்க பணிகள் 95% நிறைவு - பாஜக தலைவர் ஜே.பி.நட்டா தகவல்

By கி.மகாராஜன்

மதுரை: ‘மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானப் பணி விரைவில் தொடங்கும். கட்டுமானப் பணிக்கான பூர்வாங்க நடவடிக்கைகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளது’ என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறினார்.

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று காலை மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரை மத்திய இணை அமைச்சர் முருகன், பாஜக மேலிடப் பார்வையாளர் சி.டி.ரவி, இணை பார்வையாளர் சந்தோஷ், மாநில தலைவர் அண்ணாமலை, எம்எல்ஏக்கள் நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன் மற்றும் நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் விமான நிலையம் அருகேயுள்ள தனியார் ஓட்டலில் பல்வேறு துறைகளை சேர்ந்தவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது பேசிய நட்டா, "இந்தியாவில் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறை பெரும் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. நாடு முழுவதும் வரி வசூல் அதிகரித்து உள்ளது. மேக் இன் இந்தியா திட்டம் மூலம் 85 சதவீத மக்கள் வளர்ச்சி அடைந்துள்ளனர். கரோனாவுக்கு பின்னர் அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ச்சி பெற்றுள்ளது. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள மக்களின் நிலை 10 சதவீதமாக குறைந்துள்ளது.

மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற மத்திய அரசு ரூ.550 கோடி ஒதுக்கியுள்ளது. அதற்காக தமிழக அரசிடம் 633.17 ஏக்கர் நிலம் கேட்டது. ஆனால் தமிழக அரசு 543 ஏக்கர் நிலத்தை மட்டுமே தந்துள்ளது. இருப்பினும் மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் பணியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பூர்வாங்க பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்து உள்ளன. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் ரூ.1264 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தொற்று நோய் பிரிவுக்காக ரூ.134 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. 750 படுக்கைகள் மற்றும் ஐ.சி.யூ. வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் அமையவுள்ளது. மாணவர் சேர்க்கை இடங்களும் 100-ல் இருந்து 250 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

விரைவில் கட்டுமானப் பணி தொடங்கும். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி திறந்து வைப்பார். மதுரையில் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்கா அமைக்க ரூ.732 கோடி, மதுரை ஸ்மார்ட் சிட்டி பணிகளுக்கு ரூ.392 கோடி ஒதுக்கீடு, மதுரை மல்லிகை ஏற்றுமதி அதிகரிப்பு உட்பட பல்வேறு திட்டங்களை மதுரைக்கு மத்திய அரசு வழங்கியுள்ளது.

மோடி தலைமையிலான பாஜக அரசின் திட்டங்களால் இந்தியா பல துறைகளிலும் சர்வதேச அளவில் முன்னேறி வருகிறது. கரோனா காலத்தை மோடி சிறப்பாக கையாண்டார். உலகின் பலமிக்க நாடாக, 5 ட்ரில்லியன் பொருளாதாரம் கொண்ட நாடாக இந்தியாவை மாற்ற அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், மதுரையிலிருந்து காரைக்குடிக்கு புறப்பட்டுச் சென்றார். நட்டா வருகையை ஒட்டி மதுரை விமான நிலையத்தில் மதுரை மாநகர காவல் துணை ஆணையர் சீனிவாச பெருமாள் தலைமையில் 200 போலீஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE