தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க காவல் துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி கோரிய வழக்கில், ஊர்வலத்துக்கு அனுமதி வழங்க தமிழக காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த தின நூற்றாண்டு, விஜய தசமி ஆகியவற்றை முன்னிட்டு தமிழகத்தின் 51 இடங்களில் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் சார்பில் அக்டோபர் 2-ம் தேதி அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரி தமிழக உள்துறை அமைச்சகம் மற்றும் டிஜிபியிடம் கடந்த மாதம் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவின் மீது இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. எனவே அணிவகுப்பு ஊர்வலத்துக்கு அனுமதி கோரி சென்னையை சேர்ந்த சுப்ரமணியன், கடலூரைச் சேர்ந்த சண்முகசுந்தரம், ஈரோட்டை சேர்ந்த செந்தில்நாதன் உள்ளிட்ட 9 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், "அணிவகுப்பு ஊர்வலத்தை ஒழுங்குபடுத்த மட்டுமே காவல் துறைக்கு அதிகாரம் உள்ளது. அனுமதி வழங்க மறுக்க காவல் துறைக்கு அதிகாரமில்லை. ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படும் நிலையில், ஆர்எஸ்எஸ் சீருடையுடன் இசை வாத்தியங்கள் முழங்க அணிவகுப்பு ஊர்வலம் செல்ல தமிழகத்தில் மட்டும் அனுமதி மறுக்கப்படுகிறது" என்று மனுவில் கோரியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி ஜி. கே. இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல் துறை தரப்பில், "எந்த பாதையில் ஊர்வலம் செல்கிறார்கள் என்ற தகவல்களை தெரிவிக்கவில்லை. ஊர்வலத்தின்போது கோஷங்கள் எழுப்பக் கூடாது. ஊர்வலத்தில் காயம் ஏற்படுத்தும் வகையிலான எந்த பொருட்களுக்கும் அனுமதியில்லை. சட்டம் ஒழுங்கு, மத நல்லிணக்கம் ஆகியவை காக்கப்பட வேண்டும்.

இவை தொடர்பான எந்த உறுதியும், மனுதாரர்கள் தரப்பில் தாக்கல் செய்யவில்லை. குறிப்பாக, ஊர்வலம் செல்லும் வழியில் மதம் சார்ந்த பதற்றமான பகுதிகள் இருக்கலாம் என்பதால், அவர்கள் செல்லும் வழியை துல்லியமாக தெரிவிக்க வேண்டும். இந்த விதிகளை பின்பற்றுவதாக உறுதி அளித்தால், அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி கோரிய மனுக்கள் குறித்து பரிசீலிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில், "பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கும், ஊர்வலம் செல்லவும் ஒவ்வொரு குடிமகனுக்கும் சட்டத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. இதனை உச்ச நீதிமன்றமும் பலமுறை உறுதி செய்துள்ளது. மேலும், ஊர்வலத்தை காவல்துறை ஒழுங்குபடுத்தலாம். ஆனால் அனுமதி மறுக்க முடியாது. தமிழகத்தில் கடந்த காலத்திலும் ஊர்வலங்கள் நடத்தப்பட்டது. இதுவரை எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படவில்லை. புதுச்சேரியில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் தமிழக காவல் துறை அனுமதி வழங்க மறுக்கிறது.

பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாமல் இருக்கவே ஞாயிற்றுக்கிழமையன்று ஊர்வலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்ட இயக்கம் அல்ல. நாங்கள் சட்டத்தை மதிக்கக் கூடியவர்கள். இதுதொடர்பாக நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ள தயார்" என்றும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

அப்போது காவல் துறை தரப்பில், "ஆர்எஸ்எஸ் அமைப்பினர் குறிப்பிட்ட ஓர் இடம் என்று குறிப்பிடாமல், மாநிலம் முழுவதும் ஊர்வலம் செல்ல அனுமதி கேட்பதால், காவல்துறை தரப்பில் முடிவெடுக்க தாமதமாகிறது" என்று தெரிவிக்கப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி , அக்டோபர் 2-ம் தேதி ஆர்எஸ்எஸ். ஊர்வலத்திற்கு செப்டம்பர் 28-ம் தேதிக்குள் அனுமதி வழங்க வேண்டுமென காவல் துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அணிவகுப்பு ஊர்வலத்திற்கான நிபந்தனைகள் குறித்து விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

36 secs ago

தமிழகம்

5 mins ago

தமிழகம்

39 mins ago

தமிழகம்

21 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

23 mins ago

தமிழகம்

49 mins ago

தமிழகம்

51 mins ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்