சித்த மருத்துவ பல்கலை.,க்கு ஆளுநரின் துரித அனுமதியை எதிர்பார்க்கிறோம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

By செய்திப்பிரிவு

சென்னை: ஆளுநர் விரைந்து சித்த மருத்துவப் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி அளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்,

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் செய்தியாளர்களை சந்தித்த மருத்துவதுறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், "தமிழகத்தில் ஏற்கனவே இந்திய மருத்துவ முறைகளான ஆயுர்வேதா, ஹோமியோபதி, யுனானி மற்றும் யோகா ஆகியவற்றோடு இணைந்து சித்த மருத்துவ பல்கலைக்கழகம் ஒன்றும் அமைக்கப்பட வேண்டும் என்ற வகையில் 2021 - 22 ஆம் ஆண்டு மக்கள் நல்வாழ்வுத்துறை நிதிநிலை அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.

அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைகழக மசோதா 2022 ஏப்ரல் மாதம் சட்டமன்றத்தில் வைக்கப்பட்டு பேரவையின் ஒப்புதலும் பெறப்பட்டது. ஒப்புதல் பெறப்பட்டு பிறகு மே 2022 இல் சட்டத்துறையின் மூலமாக ஆளுநரின் ஒப்புதலை வேண்டி அனுப்பி வைக்கப்பட்டது.

25 .7.2022 அன்று ஆளுநரின் முதன்மைச் செயலாளர், சட்டத்துறைக்கு அனுப்பிய கடிதத்தில் தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவில் மாணவர்களின் சேர்க்கை சம்பந்தப்பட்ட சில பிரிவுகள் இந்திய மருத்துவ தேசிய ஆணையச் சட்டம் 2020 இல் உள்ள சட்டப் பிரிவுகளுக்கு முரண்பாடாக உள்ளதா என்பதை ஆராய்ந்து குறிப்புரை வழங்க கடிதம் எழுதி இருந்தார்.

இதற்கு அளித்த பதிலில் தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்கழக சட்ட மசோதாவின் பிரிவுகளுக்கும் , இந்திய மருத்துவ தேசிய ஆணையச் சட்டம் 2020 மற்றும் ஹோமியோபதி தேசிய ஆணைய சட்ட பிரிவுகளுக்கும் முரண்பாடு ஏதும் இல்லை என விரிவான விளக்கங்களுடன் தெரிவிக்கப்பட்டது. இந்த பதில் ஆளுநரின் முதன்மைச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. எனவே ஆளுநர் விரைந்து தமிழகத்தில் உருவாக இருக்கிற சித்த மருத்துவ பல்கலைக்கழகத்திற்கு அனுமதி அளிப்பார் என்று எதிர்பார்த்து இருக்கிறோம்" இவ்வாறு அமைச்சர் கூறினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE