தமிழகத்தில் சர்வதேச அளவிலான இன்குபேஷன் மையம் தொடங்க திட்டம்: அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

ஜவுளிகள், கைவினைப் பொருட்கள் மற்றும் தொழில்நுட்ப ஜவுளிகளைப் பிரபலப்படுத்தும் நோக்கில் ‘குளோபல்ஸ்பின்’ என்ற பெயரில் 2 நாள் வர்த்தக மாநாடு மற்றும் கண்காட்சி சென்னையில் நேற்று தொடங்கியது.

சர்வதேச குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பு, ஐ.எம். காதி ஃபவுண்டேஷன், என்ஐஎஃப்டி பவுண்டேஷன் இணைந்து இதை நடத்தின.

சர்வதேச குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கூட்டமைப்பின் தலைவரும், ரஷ்ய நாட்டுக்கான மொரீஷியஸ் நாட்டுத் தூதருமான கே.சி.ஜானி வரவேற்புரையாற்றுகையில், “தமிழகத்துக்கும், மொரீஷியஸ் நாட்டுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. உலகம் முழுவதும் உள்ள குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக எங்கள் அமைப்பு உதவி செய்து வருகிறது” என்றார்.

மாநாட்டில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசிய கைத்தறி, ஜவுளித் துறை அமைச்சர் ஆர்.காந்தி கூறியதாவது:

ஜவுளித் துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது. பருத்தி நூல் மற்றும் பின்னலாடை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. நாட்டிலேயே அதிகஅளவு கைத்தறிகள் தமிழகத்தில் உள்ளன. அதேபோல், விசைத்தறிகளை அதிகம் கொண்டிருக்கும் மாநிலங்களில் தமிழகம் நாட்டிலேயே 2-வது இடத்தில் உள்ளது.

தமிழக அரசு ஜவுளித் துறைக்கென தனியாக ஆணையரகத்தை அமைத்துள்ளது. கிராமப் பகுதிகளில் அதிகளவு வேலைவாய்ப்பு வழங்குவதில் நாட்டில் 2-வது மிகப் பெரிய துறையாகக் கைத்தறி மற்றும் கைவினைத் துறை உள்ளது. இத்துறையில் சுமார் 30 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

நெசவாளர்களுக்கு ஊதிய உயர்வு, நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்களின் கைத்தறி உள்கட்டமைப்பை வலுப்படுத்துதல், கோ-ஆப்டெக்ஸ் மற்றும் கூட்டுறவு நெசவாளர் சங்கங்களின் சந்தைப்படுத்தல் உள்கட்டமைப்பை மேம்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

நவநாகரிக கைத்தறி, காதி தயாரிப்புகளை உருவாக்க, சர்வதேச அளவிலான ‘ஆக்கப்பூர்வமான மற்றும் கலாச்சார தொழில்களுக்கான இன்குபேஷன் மையம்’ ஒன்றை நிறுவத் திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு காந்தி கூறினார்.

மாநாட்டில், தமிழக கைத்தறி மற்றும் ஜவுளித் துறை முதன்மை ஆணையர் தர்மேந்திர பிரதாப் யாதவ், ஜவுளித் துறை ஆணையர் எம்.வள்ளலார், கோ-ஆப்டெக்ஸ் நிறுவன இயக்குநர் டி.பி.ராஜேஷ், ஐ.எம். காதி பவுண்டேஷன் நிறுவனர் யாஷ் ஆர்யா, இந்திய ஏற்றுமதி மேம்பாட்டு மையத்தின் தென்மண்டல தலைவர் ஹபீப் ஹுசைன், மத்திய பட்டு வாரிய தலைமை செயல் அதிகாரி ரஜித் ஒகன்டியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE