காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிரம் - 1,000 இடங்களில் இன்று சிறப்பு மருத்துவ முகாம்கள்

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் பரவும் காய்ச்சலைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி, 1,000 இடங்களில் இன்று (செப். 21) காய்ச்சல் தடுப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

மேலும், தற்போது பரவுவது சாதாரண காய்ச்சல் என்பதால், மக்கள் அச்சமோ, பதற்றமோ அடையத் தேவையில்லை என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பணியாற்றும் இதய நோய் மருத்துவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் நேற்று நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், துறைச் செயலர் ப.செந்தில்குமார், தமிழ்நாடு சுகாதார அமைப்பு திட்ட இயக்குநர் உமா, பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் செல்வவிநாயகம், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் ஆண்டுதோறும் பருவமழை தொடங்குவதற்கு முன்பு காய்ச்சல் பரவும். அதுபோலத்தான் தற்போதும் காய்ச்சல் பரவுகிறது. வழக்கமாக, மொத்த மக்கள் தொகையில் தினமும் 1 சதவீதம் பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கும். பருவநிலை மாற்றத்தின்போது அந்த எண்ணிக்கை 1.5 சதவீதமாக அதிகரிக்கும். அந்த அளவுக்குதான் தற்போது காய்ச்சல் பரவியுள்ளது.

தமிழகம் முழுவதும் எச்1என்1 இன்ஃப்ளூயன்சா காய்ச்சலால் கடந்த ஜனவரி முதல் தற்போதுவரை 1,166 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது அரசு மருத்துவமனைகளில் 15 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 260 பேரும், வீடுகளில் 96 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது சாதாரண காய்ச்சல் பாதிப்புதான். 3 அல்லது 4 நாட்களில் காய்ச்சல் குணமாகிவிடும். எனவே, பொதுமக்கள் அச்சமோ, பதற்றமோ அடையத் தேவையில்லை.

வடகிழக்குப் பருவமழை தொடங்கும் வரையிலும், மழை வந்த பின்னரும் காய்ச்சல் முகாம்களை நடத்துமாறு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, தமிழகம் முழுவதும் செப். 21-ம் தேதி (இன்று) 1,000 இடங்களில் சிறப்பு காய்ச்சல் மருத்துவ முகாம்கள் நடத்தப்படுகின்றன. சென்னையில் மட்டும் 100 இடங்களில் முகாம்கள் நடைபெறும்.

388 நடமாடும் மருத்துவ வாகனங்கள்

காய்ச்சல், சளி, தலைவலி, இருமல் பாதிப்புக்கு உள்ளானவர்கள் இந்த முகாம்களில் சிகிச்சை பெறலாம். செப். 22-ம் தேதி (நாளை) முதல், ஒரு பகுதியில் 3 பேருக்கு காய்ச்சல் பாதிப்பு இருந்தால், அங்கு சிறப்பு காய்ச்சல் முகாம் நடத்தப்படும். இவைதவிர, 388 நடமாடும் மருத்துவ வாகனங்கள், மருத்துவச் சேவையில் ஈடுபட்டு வருகின்றன.

கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தால், அவர்களைப் பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம்.

அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் சிறப்பு மருத்துவர்களுடன் துறைவாரியாக கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று இதய நோய் மருத்துவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம், இதய நோய் மருத்துவர்களால் அதிகம் செயல்படுத்தப்படுகிறது.

காப்பீடு செயல்பாடு அதிகரிப்பு

திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, அரசு மருத்துவமனைகளில் காப்பீட்டுத் திட்ட செயல்பாடு 37 சதவீதமாக இருந்தது. ஆட்சிக்கு வந்த இந்த ஒன்றரை ஆண்டுகளில் இத்திட்டத்தின் செயல்பாடு 47 சதவீதமாக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவக் காப்பீட்டுத் திட்ட செயல்பாடுகள் குறைவாக உள்ள கோவை, காஞ்சிபுரம், திண்டுக்கல், ஈரோடு, பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் அதிக கவனம் செலுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப் பட்டுள்ளது.

இந்த காப்பீட்டுத் திட்டம் 2009-ம் ஆண்டு ஜூலை 23-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் கடந்த மாதம் 31-ம் தேதி வரை 1 கோடியே 19 லட்சத்து 10,653 பயனாளிகள், ரூ.10,835 கோடி காப்பீட்டுத் தொகையில் பயனடைந்துள்ளனர். இத்திட்டத்தின் கீழ் 937 தனியார் மற்றும் 796 அரசு மருத்துவமனைகள் என மொத்தம் 1,733 மருத்துவமனைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்த நோய்களின் பக்கவிளைவாக உருவாகின்ற இதய நோய் தற்போது பெருமளவு அதிகரித்துள்ளது. ஏழை, நடுத்தர மக்களுக்கு இதற்கான உயரிய சிகிச்சையை வழங்க 1973-ம் ஆண்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் `கேத் லேப்' வசதி ஏற்படுத்தப்பட்டது. தற்போது 19 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தலா ரூ.4.5 கோடி முதல் ரூ.7.5 கோடி மதிப்பிலான `கேத் லேப்' வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் போன்ற தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்த, நாட்டிலேயே முதல்முறையாக ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற முன்னோடித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இவ்வாறு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்