கடந்த சில அத்தியாயங்களில் கேரளத்தின் கிராமப் பஞ்சாயத்து களைப் பற்றிப் படித்து வியந்திருப்பீர்கள். கல்வி, சுகாதாரம், மருத்துவம், விளையாட்டு, கலாச் சாரம், இயற்கை விவசாயம், வறுமை ஒழிப்பு, சமூக உழைப்பு, அதிநவீன நிர்வாகம் என பஞ்சாயத்துகளின் பல்வேறு பரிணாமங்களைப் பார்த் தீர்கள். மேற்கண்ட பஞ்சாயத்துகள் மட்டுமில்லை; அங்கே பெரும் பான்மையான பஞ்சாயத்துகள் இப்படிதான் இருக்கின்றன. கேரள மக்களைப் பொறுத்தவரை, இவை இயல்பான நடைமுறைகள்தான்.
சரி, கேரளத்தில் மட்டும் பஞ்சாயத்து ராஜ்ஜியம் வெற்றிபெற்றது எப்படி?
நேரு உருவாக்கிய முதல் தலை முறை பஞ்சாயத்துகளும், 70-களில் ஜோதிபாசு, ராமகிருஷ்ண ஹெக்டே, என்.டி.ராமாராவ் உள்ளிட்டோர் உரு வாக்கிய இரண்டாம் தலைமுறை பஞ்சாயத்துகளும் நாடெங்கும் அழிந்தபோதும் கேரளத்தில் மட்டும் அவை நிலைத்தன, நீடித்தன. பிறகு ராஜீவ் காந்தி மூன்றாம் தலைமுறை பஞ்சாயத்துகளை உருவாக்குகிறார். பின்னாளில் நரசிம்மராவ் 73, 74-வது அரசியல் சாசன சட்டத் திருத்தங்கள் மூலம் அதற்கு உயிர் கொடுத்தபோது கேரளத்தில் முதல்வராக இருந்தவர் ஏ.கே.அந்தோணி. உடனே அரசியல் சாசன சட்டப் பாதுகாப்புகளுடன் பஞ்சாயத்து ராஜ்ஜியத்தை மேலும் வலுப்படுத்தினார் அந்தோணி. 1994, மார்ச் மாதம் கேரள பஞ்சாயத்து ராஜ்ஜியம் சட்டம் இயற்றப்பட்டது. 1995, அக்டோபரில் பஞ்சாயத்துத் தேர்தல்கள் நடத்தப்பட்டன.
1996 தொடங்கி கேரள மாநில அரசுகள் 35 - 40 சதவிகிதம் நிதியை நேரடியாக பஞ்சாயத்து ராஜ்ஜியங்களுக்கு ஒதுக்கின. குறிப்பாக கல்வி, மருத்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. அடுத்து முதல்வரான ஈ.கே.நாய னார் மக்கள் பங்கேற்பு திட்டங் களை அறிமுகப்படுத்தினார். பின்ன ணியில் அரசியல் முடிவுகளை எடுக்கும் ஸ்தானத்தில் நம்பூதிரி பாட் இருந்தார். அவருடைய ஆலோ சனைகள் பஞ்சாயத்துகளை மேலும் வலிமையாக்கின. கேரளம் 100 சதவிகிதம் எழுத்தறிவு பெற்றது இப்படிதான். இதுவே கேரளத்தில் பஞ்சாயத்து ராஜ்ஜியங்கள் உருவான சுருக்கமான வரலாறு.
சரி, கேரளத்தின் பஞ்சாயத்து ராஜ்ஜியங்கள் எவ்வாறு செயல் படுகின்றன?
முதல்வர் Vs பஞ்சாயத்துத் தலைவர்
கேரளத்தில் மாநில அரசுக்கும் பஞ்சாயத்து ராஜ்ஜியத்துக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. மாநிலத்துக்கு முதல்வர் எப்படியோ பஞ்சாயத்துக்கு அதன் தலைவர். சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு உள் ளிட்ட சில துறைகளைத் தவிர்த்து இருவரும் கிட்டத்தட்ட சம அதி காரங்களைக் கொண்டவர்களே. மாநிலத்துக்கு 60 சதவிகிதம் நிதி. பஞ் சாயத்துக்கு 40 சதவிகிதம். மக்கள் வாழ்வாதாரத் திட்டங்களை மாநில அளவில் முதல்வர் உருவாக்குவார். பஞ்சாயத்து அளவில் தலைவர் உருவாக்குகிறார். அரசு வருவாய் திட்டங்களை மாநில அளவில் முதல்வர் உருவாக்குவார். பஞ்சா யத்து அளவில் அதன் தலைவர் உருவாக்குகிறார். உற்பத்தி மற்றும் சேவை கட்டமைப்புகளை மாநில அளவில் முதல்வர் உருவாக்குவார். பஞ்சாயத்து அளவில் தலைவர் உருவாக்குகிறார்.
சட்டசபை Vs கிராம சபை
சட்டசபையைப்போல கிராம சபை செயல்படுகிறது. ஆனால், சட்டம் இயற் றும் அதிகாரம் கிடை யாது. சட்ட சபையில் மக்கள் பங்கேற்க முடி யாது. ஆனால், கிராம சபையில் மக்கள் பங்கேற்கலாம். மக்கள் ஆதரவுடன் முடிவுகள் எடுக்கப்படுகின்றன. முதல் வருக்கு கீழே அமைச்சர்களைப் போல பஞ்சாயத் தில் அதன் உறுப்பினர்கள் செயல்படு கிறார்கள். ஒவ்வொரு பஞ்சாயத்திலும் உறுப்பினர்களின் தலைமை அல்லது பங்களிப்புடன் நிதிக் குழு, வளர்ச்சிக் குழு, கல்வி மற்றும் சுகாதாரக் குழு, மக்கள் நலக் குழு ஆகிய நான்குக் குழுக்கள் செயல்படுகின்றன. கிராம சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மேற்கண்ட குழுக்களின் ‘விகசன’ கூட்டங்களில் இறுதி வடிவம் பெறுகின்றன.
தலைமைச் செயலாளர் Vs பஞ்சாயத்து செயலாளர்
மாநில அரசுக்கு தலைமைச் செயலாளர் பதவி எப்படியோ அப்படி தான் ஒரு கிராமப் பஞ்சாயத்துக்கு அதன் செயலாளர் பதவி. அரசு பணியாளரான இவர்தான் பஞ்சா யத்தின் செயல் அலுவலர். பஞ்சா யத்து குழுக்களில் இறுதி வடிவம் பெறும் முடிவுகள் அனைத்தும் பஞ்சாயத்து செயலாளரிடம் வரும். பஞ்சாயத்து செயலாளரின் கட்டுப்பாட்டில் ஊரக வளர்ச்சி, விவசாயம், கல்வி, மருத்துவம், கால்நடை, பொறியியல், குழந்தைகள் மற்றும் மகளிர் நலம் ஆகிய துறைகள் வருகின்றன. மேற்கண்ட துறைகளில் பணியாற்றும் மருத்துவர்கள், ஆசிரி யர்கள் உள்ளிட்ட அனைத்து பணி யாளர்களும் பஞ்சாயத்து செயலாள ருக்கு நிர்வாக ரீதியாக கட்டுப்பட்ட வர்கள். இவர்களின் செயல்பாடுகள், நிறை, குறைகள் உள்ளிட்டவற்றை கண்காணித்து பரிந்துரைக்கும் பொறுப்பு பஞ்சாயத்து செயலாள ருக்கு உண்டு. ஆனால், யார் மீதும் நேரடியாக நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் செயலாளருக்குக் கிடை யாது. இவர் பரிந்துரையின் அடிப்படை யில் பஞ்சாயத்து தலைவர் மூலம் பஞ்சாயத்துக் குழுக்கள் நடவடிக்கை எடுக்கும். குறிப்பிட்ட சில மேல் நடவடிக்கைகளை கல்வித் துறை, சுகாதாரத் துறை போன்ற மாநில அரசு துறைகள் மட்டுமே எடுக்க இயலும்.
நிதிப் பகிர்வில் ‘சுலேகா’!
மத்திய அரசு, மாநில அரசு ஆகியவை பஞ்சாயத்துக்கு ஒதுக் கும் சுமார் 40 சதவிகித நிதியை கையாள்பவரும் செயலாளர்தான். சேவை, உற்பத்தி, உள்கட்டமைப்பு ஆகிய மூன்று பிரிவுகளில் நிதி பிரிக்கப்படுகிறது. மேற்கண்ட நிதியில் 60 சதவீதம் கல்வி, சுகாதாரம், விவசாயம், பெண்கள், குழந்தைகள், முதியோர், மாற்றுத் திறனாளிகள் நலம், இளைஞர் மேம்பாடு ஆகியவற்றுக்கு கட்டாயமாக ஒதுக்கப்பட வேண்டும். மீதமுள்ள 40 சதவீத நிதியை உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புக்கு பயன்படுத்த வேண்டும். மேற்கண்ட நிதி பகிர்வுகளைத் தலைவரோ உறுப்பினர்களோ செயலாளரோ தன்னிச்சையாக செய்ய முடியாது. கேரள அரசின் தகவல் தொழில்நுட்ப துறை உருவாக்கிய பிரத்தியேக மென்பொருளான ‘சுலேகா’ தான் நிதியைப் பகிர்வு செய்கிறது. மாநிலம் முழுவதும் சுமார் இரண்டு லட்சம் பஞ்சாயத்து திட்டங்களைக் கண்காணிப்பதும் ‘சுலேகா’ மென் பொருள்தான். தவிர, மாநில திட்டக் குழு நிதி பகிர்வையும் ‘சுலேகா’ மேற்கொள்கிறது. மேற்கண்ட திட்டங்களுக்காக ஒவ்வொரு ஆண் டும் ஏப்ரல் - மார்ச் மாதத்தில் நிதி அறிக் கையை பஞ்சாயத்து செயலாளர் தாக்கல் செய்ய வேண்டும். அதன் அடிப்படையில் ஜூலை மாதத்தில் திட்டங்கள் செயல்பட தொடங்கும்.
பஞ்சாயத்து வேட்பாளர்கள் தேர்வு
தமிழகத்தை போல் அல்லாமல் கேரளத்தில் உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்களைக் கட்சிகளே தேர்வு செய்கின்றன. சுயேட்சைகள் போட்டியிடலாம். ஆனால், ஆதிக் கம் செலுத்துவது கட்சிகளே. பெரும் பாலும் இடதுசாரி முன்னணி அல்லது ஐக்கிய ஜனநாயக முன்னணி. கட்சிக ளின் சின்னத்தில் வேட்பாளர்கள் போட் டியிடலாம். கிராம அளவில் நடக்கும் சிறிய தவறுகள்கூட மாநில அளவில் கட்சிகளின் பெயரை பாதிக்கும் என்பதால் வேட்பாளர்கள் தேர்வில் கவனமாக இருக்கின்றன கட்சித் தலை மைகள். அதேசமயம், தேர்தலுக்கு பிறகு பஞ்சாயத்துத் தலைவர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் தவறு செய்தால் நடவடிக்கை எடுக்கவும் கட்சிகள் தயங்குவதில்லை.
கேரள பஞ்சாயத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு கவுரவ சம்பளம் உண்டு. பஞ்சாயத்துத் தலைவருக்கு சம்பளம் ரூ.13,500. துணைத் தலை வருக்கு சம்பளம் ரூ.10,500. குழுத் தலைவர்களுக்கு சம்பளம் ரூ. 8,500. வார்டு உறுப்பினர்களுக்கு சம்பளம் ரூ.7,000. எல்லாவற்றுக்கும் மேலாக தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப் பான கேரளா உள்ளாட்சி நிர்வாகக் கழகம் (Kerala Institute of Local Administration) பஞ்சாயத்துகளை வழிநடத்துகிறது. மேற்கண்டதில் ஒன்றுகூட தமிழகத்தில் இல்லை என்பதுதான் நடைமுறை உண்மை!
- பயணம் தொடரும்...
முக்கிய செய்திகள்
தமிழகம்
27 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
12 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
17 hours ago
தமிழகம்
18 hours ago
தமிழகம்
19 hours ago
தமிழகம்
19 hours ago