பாஞ்சாங்குளம் பள்ளி விவகாரத்தில் சிஇஓ-விடம் விளக்கம் கேட்டுள்ளோம்: அமைச்சர் அன்பில் மகேஸ்

By செய்திப்பிரிவு

சென்னை: பாஞ்சாங்குளம் பள்ளி விவகாரம் தொடர்பாக சிஇஓ-விடம் விளக்கம் கேட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்தார்.

"போதை இல்லா பாதை" என்கிற இயக்கம் சார்பில் வருகின்ற அக்டோபர் 2-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் போதை ஒழிப்புக்கான விழிப்புணர்வு பயணம் நடைபெற இருக்கிறது. இதற்கான பதாகை (போஸ்டர்) வெளியீட்டு நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கலந்து கொண்டு பதாகைகளை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "போதையில்லா தமிழகத்தை உருவாக்க தமிழக முதல்வர் எடுக்கின்ற முயற்சிக்கு, இது போன்ற இயக்கங்கள் நடத்துகின்ற விழிப்புணர்வு முதல்வருக்கு உறுதுணையாக இருக்கும்.

அக்டோபர் 2-ம் தேதி காந்தி பிறந்த நாள் அன்று இந்த விழிப்புணர்வு பிராசாரம் தொடங்குகிறது. போதைப் பழக்கம் என்பது ஒரு நோய். இதை சரிசெய்ய வேண்டியது சமூகத்தில் இருக்கின்ற ஒவ்வொருவருடைய கடமை. போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க மருத்துவர்கள் உள்ளனர். இவர்கள் மருத்துவமனையை தேடி சென்றால் யாரேனும் பார்த்து விட்டால், அசிங்கப்படுத்தி விடுவார்கள் என்று நினைக்க வேண்டாம், அதைக் காட்டிலும் அவமானமான விஷயம் நீங்கள் போதைக்கு அடிமையாகி இருப்பதுதான்.

போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட நீங்கள் கவுன்சிலிங் செல்வதை பார்த்து சமூகத்தில் இருக்கும் இது போன்றவர்களுக்கு தைரியம் ஏற்பட்டு அவர்களும் போதைப் பழக்கத்திலிருந்து விடுபட மருத்துவர்களை அணுகி இதை சரி செய்து கொள்ளலாம் என்று நினைப்பு வரும்.

பள்ளி மேலாண்மை குழு தொடங்கப்பட்டதற்கான காரணம் பள்ளிகள் தன்னிறைவு அடைவதற்காக மட்டுமல்ல. பள்ளி வளாகத்தை சுற்றி என்ன பிரச்சினைகள் நடைபெறுகிறது, அதை உள்வாங்கிக் கொண்டு சரி செய்வதற்காகவும்தான்” என்றார்.

பள்ளிகளில் சாதிப் பாகுபாடு பார்க்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுகிறது என்ற கேள்விக்கு, “அதற்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தமிழக அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும்” என்றார்.

பாஞ்சாங்குளம் பள்ளி விவகாரம் தொடர்பாக முதன்மைக் கல்வி அலுவலரிடம் அறிக்கை கேட்டுள்ளோம். குறிப்பிட்ட நாள் அன்று 13 மாணவர்கள் ஏன் பள்ளிக்கு வரவில்லை என்று கேட்கப்பட்டுள்ளது. 14417 என்ற எண் இன்னும் உபயோகத்தில் தான் உள்ளது. அந்த எண்களை தொடர்பு கொண்டு இதுபோன்ற ஏதேனும் சம்பவங்கள் நடைபெற்றால் புகார் அளிக்கலாம்.

கிருஷ்ணகிரியில் ஒரு பள்ளியில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்பட்ட விலையில்லா மிதிவண்டியில் எஸ்சி எஸ்டி என்று குறிப்பிடப்பட்டது தொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக, தென்காசி மாவட்டம் பாஞ்சாங்குளம் கிராமத்தில் சாதி பிரச்சினை காரணமாக பட்டியலின மாணவர்களுக்கு தின்பண்டங்கள் வழங்க மறுத்த கடை உரிமையாளர் மகேஸ்வரன், அதற்கு உடந்தையாக இருந்த ராமச்சந்திரன் என்ற மூர்த்தி ஆகிய 2 பேர் கைது செய்யப்பட்டனர். பாஞ்சாங்குளம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளியில் மாணவர்களிடையே சாதி பாகுபாடு காட்டப்படுவதாகவும் புகார் எழுந்தது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE