பிஹாரை போல் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி ஆட்சி அமைக்க ரங்கசாமி தயாரா? - ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி

By செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: பிஹாரை போல் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜகவில் இருந்து வெளியேறி மாற்றுக் கட்சியுடன் கூட்டணி அமைத்து ஆட்சியமைக்கத் தயரா என்று மார்க்சிஸ்ட் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுச்சேரி மாநில உரிமையை மீட்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 200 கிமீ நடை பயண இயக்கம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி நடைபயணம் இன்று நெல்லித்தோப்பு சுப்பையா சிலையில் இருந்து தொடங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நடைபயண இயக்கத்தை தொடங்கி வைத்தார். முன்னாள் மத்திய குழு உறுப்பினர் சுதாசுந்தரராமன், மாநில செயலாளர் ராஜாங்கம், மூத்த தலைவர் முருகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

இந்த நடைபயணம் வரும் 26ம் தேதி வரை புதுவை, காரைக்கால், மாகே, ஏனாம் பிரதேசங்கள் முழுவதும் நடக்கிறது. நடைபயணத்தை தொடக்கி வைத்து சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில், "புதுச்சேரி மக்கள் நலன்களை பாதுகாக்கவே இப்பயணத்தில் ஈடுபட்டுள்ளோம். மூடியுள்ள ரேஷன் கடையை திறந்து அரிசி தருவதாக தேர்தல் வாக்குறுதி தந்த பாஜக-என்ஆர் காங்கிரஸ் அரசானது பதவியேற்று ஒன்றரை ஆண்டுகளாகியும் செயல்படுத்தவில்லை. ஏற்கெனவே பயனாளிகளுக்கு வழங்கி வந்த அரிசிக்கான தொகையையும் நிறுத்தி விட்டனர்.

பள்ளிகளில் மதிய உணவை அரசுதான் தமிழகத்தில் வழங்குகின்றனர். ஆனால் புதுச்சேரியில் அட்சய பாத்திரா தொண்டு நிறுவனத்திடம் தந்து, அவர்கள் பூண்டு, வெங்காயம் சேர்க்காமல் சுவையில்லாமல் தயாரித்தும் தரும் உணவை குழந்தைகள் குப்பையில் கொட்டும் சூழல் உள்ளது. சீருடை தரவில்லை. ரேஷனை திறந்து அரிசி, சர்க்கரை இதர பொருட்களை தரும் வரையில் தொடர் போராட்டங்களை நடத்துவோம்.

சமீபத்தில் கேரளத்தில் தென்மாநில முதல்வர்கள் மாநாட்டில் புதுச்சேரி முதல்வர் பங்கேற்கவில்லை. அது சரியான அணுகுமுறை இல்லை. மத்திய அரசு கோரிக்கைகளை நிறைவேற்றவில்லை என்று புலம்புவது சரியானது அல்ல. ஆர்எஸ்எஸ், பாஜகவை வளர்ப்பதை தவிர மக்கள் நலன் பாதுகாக்கும் நோக்கம் பாஜகவுக்கு இல்லை.ரங்கசாமியின் பேச்சை பாஜக அமைச்சர்கள் மத்திய அமைச்சர்கள் கேட்டவில்லையென்றாலும், முதல்வர் என்ற அடிப்படையில் நினைக்கும் திட்டத்தை அமலாக்க முடியாவிட்டாலும் முதல்வர் பதவியை அவர் ராஜிநாமா செய்யலாம்.

பிஹாரில் நிதிஷ் குமார் போல் ராஜினாமா செய்துவிட்டு பாஜக கூட்டணியிலிருந்து வெளியே மாற்று கூட்டணியுடன் ஆட்சி அமைக்க ரங்கசாமி தயாரா?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE