சென்னை: "தான் குடியேற இருந்த, குடியேறுவதற்காக பரிந்துரை செய்யப்பட்ட பூம்பொழில் இல்லத்தை டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக கொடுப்பதாக ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டவர் தலைவர் கலைஞர்" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா இன்று சென்னை தரமணியில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், வெள்ளி விழா கல்வெட்டை திறந்துவைத்து, வெள்ளி விழா மலரை வெளியிட்டார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "1997-ஆம் ஆண்டு அன்றைக்கு முதல்வராக் இருந்த தலைவர் கலைஞரால், சட்டக் கல்விக்காக தெற்காசியாவிலேயே முதன்முதலாக ஒரு சட்டப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. அந்தப் பெருமைமிகு பல்கலைக்கழகம்தான், இந்த, டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம். இதனை அன்றைக்குத் தொடங்கிய முதல்வர் கலைஞருடைய மகனான நான், முதல்வராக இருக்கக்கூடிய காலக்கட்டத்தில், இந்தப் பல்கலைக்கழகத்தினுடைய வெள்ளிவிழாவில் கலந்து கொள்வதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன், பெருமைப்படுகிறேன்.
திமுக ஆட்சியிலே இந்த வெள்ளி விழா நடந்து கொண்டிருக்கிறது. இது அண்ணல் அம்பேத்கர் பெயரால் அமைந்துள்ள பல்கலைக்கழகம். சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் பெயரில், சட்டப் பல்கலைக்கழகம் நிறுவிய முதல் மாநிலம், நம்முடைய தமிழ்நாடுதான். அந்தச் சிறப்பு நமது தமிழ்நாட்டுக்குக் கிடைத்திருக்கக்கூடிய வகையில், அந்தப் பணியை நிறைவேற்றித் தந்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் .
இன்னும் சொல்ல வேண்டுமென்றால், அண்ணல் அம்பேத்கரின் பெயரை மரத்வாடா, அதாவது மகாராஷ்டிராவில் இருக்கக்கூடிய மரத்வாடா பல்கலைக்கழகத்திற்கு வைக்க தலைவர் கலைஞர் அவர்கள் அன்றைக்கு முயற்சியை மேற்கொண்டார். ஆனால், மகாராஷ்டிரா மாநிலத்தில் இருக்கக்கூடிய மக்கள், அந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய குறிப்பிட்ட சிலர் அதை எதிர்த்தார்கள். எதிர்த்தது மட்டுமல்ல, வன்முறையில்கூட ஈடுபட்டார்கள். அம்பேத்கர் அவர்கள் பிறந்த மராட்டிய மாநிலத்திலே இந்த நிலைமை இருந்தது.
» ஜெதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை
» திமுக ஆட்சியில் ஊடகத்துறையினர் மீதான மிரட்டலும், தாக்குதலும் அதிகரித்துள்ளது: டிடிவி தினகரன்
தமிழ்நாட்டிலிருந்து தந்திகளை அனுப்ப வேண்டும் என்று நம்முடைய முதல்வராக இருந்த கலைஞர் , அன்றைக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு வேண்டுகோளை வைத்தார். கோடிக்கணக்கான தந்திகள் பறந்தன. அவருடைய கட்டளையை ஏற்று, அத்தனை பேரும் தந்தி அனுப்பி வைத்தார்கள். அந்த மாநில ஆளுநராக இருந்த அலெக்சாண்டர் , அப்பொழுது முதல்வர் பொறுப்பில் இருந்த சரத்பவாரும் அந்தத் தந்திகளையெல்லாம் பார்த்ததற்குப் பிறகு, தலைவர் கலைஞருக்கு ஒரு பதில் அனுப்பினார்கள். என்ன பதில் என்றால், நீங்கள் நினைப்பதைப்போல நிச்சயமாக அம்பேத்கர் பெயரை நாங்கள் சூட்டுவோம் என்று அறிவித்தார்கள்.
1989-ஆம் ஆண்டு நூற்றாண்டு கண்ட சென்னை சட்டக்கல்லூரிக்கு, 'டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி' என்று பெயர் சூட்டியவர்தான் அன்றைக்கு முதல்வராக இருந்த கலைஞர் . 1997-ஆம் ஆண்டு சென்னையில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உருவாக்கியவரும் கலைஞர்தான். அத்தகைய பல்கலைக்கழகத்திற்குத்தான், இன்றைக்கு நாம் வெள்ளிவிழாவை எழுச்சியோடு, ஏற்றத்தோடு கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.
இன்னொரு முக்கியமான செய்தியை உங்களிடத்தில் நான் சொல்லியாக வேண்டும். இந்தப் பல்கலைக்கழகத்திற்கு தேவையான இடத்தைத் தேர்வு செய்வது சற்று கடினமாக இருந்தது, அப்போது நடந்த நிகழ்வை, நான் இங்கு உங்கள் அனைவருக்கும் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.
தலைவர் கலைஞர் அவர்களது இல்லம் கோபாலபுரத்தில் இருக்கிறது. முதல்வராக இருந்தபோது அந்த இல்லத்தில் தான் இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். அந்த கோபாலபுரம் பற்றி உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அந்தத் தெருவில் நான்கைந்து கார்கள் கூட நிற்க இடம் இருக்காது, ஏனென்றால், அது நெருக்கமான இடம், போக்குவரத்துக்கு இடையூறாகிவிடும்.
அப்படிப்பட்ட முதல்வராக இருக்கக்கூடிய கலைஞருக்கு, வசதியாக இல்லம் இருக்க வேண்டும் என்று அரசுத் துறை அதிகாரிகளெல்லாம் முடிவு செய்து, அரசின் சார்பில் கிரீன்வேஸ் சாலையில் உள்ள பூம்பொழில் இல்லத்தில் பல வசதிகளெல்லாம் செய்து அந்த இடத்தை முதல்வராக இருக்கும் கலைஞருக்கு அந்த இடத்தை ஒதுக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார்கள். கலைஞரிடத்தில் சென்று இந்த ஆலோசனையைச் சொன்னார்கள். அந்தக் காலக்கட்டத்தில்தான் டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகத்தை அமைப்பதற்கு இடம் தேடப்பட்டு வந்தது.
உடனடியாக பல்கலைக் கழகத்தை அமைக்க வேண்டும் என்ற சூழ்நிலை. அதற்கு உடனடியாக கட்டடம் கட்டுவது என்றால் காலம் ஆகும், நேரமாகும், காலம் விரயம் ஆகும். எனவே, கலைஞர் உடனே ஒரு அறிவிப்பு செய்தார். தான் குடியேற இருந்த, குடியேறுவதற்காக பரிந்துரை செய்யப்பட்ட பூம்பொழில் இல்லத்தை, டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழகம் அமைப்பதற்காக ஒதுக்கீடு செய்து, அன்றைக்கு உத்தரவிட்டவர்தான் நம்முடைய தலைவர் கலைஞர் . தன்னலம் கருதாது பொதுநல நோக்கில் பல்கலைக்கழகம் துவங்கிட, செயல்பட வழிவகை செய்தவர் கலைஞர் அவர்கள்.
2008-ஆம் ஆண்டு முதல்வர் கலைஞர் தலைமையிலான அரசால் சட்டப் பல்கலைக்கழக விரிவாக்கப் பணிகளுக்கென 15 ஏக்கர் நிலப்பரப்பினை பெருங்குடி பகுதியில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா வளாகத்திற்கு அருகில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.2009-ஆம் ஆண்டிலும் தாம்பரம் பகுதியில் சட்டக் கல்வி வளர்ச்சிக்கென 2 ஏக்கர் நிலம் இப்பல்கலைக்கழகத்திற்கென முதல்வர் கலைஞர் தலைமையிலான அரசால் வழங்கப்பட்டது. இப்படி இதனை உருவாக்கியது முதல் சிறிது சிறிதாக வளர்த்தவர் முதல்வராக இருந்த கலைஞர் .
40 மாணவர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம், தற்போது ஏறக்குறைய 4500 மாணவர்களைக் கொண்டிருக்கிறது. தற்போது 11 முதுநிலைப் பிரிவுகளும் 5 இளங்கலைப் பிரிவுகளும் இருக்கின்றன. 250-க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் சட்டம் மற்றும் ஆராய்ச்சிப் படிப்பினை படித்து வருகிறார்கள்.
இந்தப் பல்கலைக்கழகம் அரசினுடைய சமூகநீதிக் கொள்கையின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கையினை மேற்கொள்வது உள்ளபடியே நமக்கெல்லாம் மகிழ்ச்சி அளிக்கிறது. அரசு சட்டக்கல்லூரிகளின் மூலமாக இந்தியாவிலேயே மிகச் சீரிய முறையில் சட்டக்கல்வியைக் கிராமப்புற மாணவர்களுக்கும் எளிதில் சென்றடைந்திடும் வகையில் சுமார் இருபதாயிரம் மாணவர்களுக்கு பயிற்றுவித்து வருகிறது.
நமது அரசு அனைத்து தரப்பினருக்கும் தரமான உயர்கல்வியை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முனைப்பில் தான், பல்வேறு சீரிய திட்டங்களை வகுத்து அதற்கு செயல்வடிவம் அளித்துவருகிறது. அனைத்து மாணவர்களை தகுதிப் படுத்தக்கூடிய வகையிலேதான் ‘நான் முதல்வன்’ திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.
மகளிருக்கு வழங்கப்பட்டுள்ள இலவசப் பேருந்து சலுகை மாணவியருக்கு பெருமளவு உதவிகரமாக அமைந்துள்ளது. அரசுப் பள்ளியில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் கல்வி உதவித்தொகையாக மாதந்தோறும் 1000 ரூபாயை நமது அரசு இந்தக் கல்வியாண்டு முதல் சட்டம் பயிலும் மாணவர்களுக்கும் வழங்கி வருகிறது.
அரசுப்பள்ளியில் பயின்ற கிராமப்புற மாணவர்களுக்குக் கல்வியில் உள்ஒதுக்கீடாக 7.5 விழுக்காடு அளித்து, கல்வி மற்றும் உறைவிடக் கட்டணத்தை சட்டம் பயிலும் மாணவர்களுக்கு அமல்படுத்தி அரசே முழுவதுமாக ஏற்கும் ஆணையை நமது அரசு வெளியிட்டுள்ளது.எனவே நீங்கள் உங்கள் கல்வியில் மிகுந்த அக்கறை காட்ட வேண்டும், அந்த அக்கறையை வெளிப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
"பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்” என்ற மகாகவி பாரதியின் கூற்றுக்கேற்ப, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் சீர்மிகு சட்டப்பள்ளியில் 70 விழுக்காட்டிற்கு மேல் மாணவிகளே சட்டம் பயின்று வருவதும், பல மாணவிகள் இப்பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று அகில இந்திய குடிமைப்பணி தேர்வுகளில் வெற்றி பெற்று, அகில இந்திய அளவில் நிர்வாகப் பொறுப்புகளில் துணை நின்று
பணியாற்றுவதும் நீதிபதிகளாக நீதி வழங்கி வருவதும் இந்தப் பல்கலைக்கழகம் பெருமிதம் அடையும் தருணமாக நான் இந்த நாளைப் பார்க்கிறேன்.
கடந்த 6.09.2021 அன்று 13 கோடி ரூபாய் மதிப்பீட்டில், அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கூடுதல் இளங்கலைக் கல்வி வளாகத்தை காணொளி காட்சியின் மூலமாக நான் திறந்து வைத்தேன். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் மென்மேலும் பொலிவுற்று பல சட்ட மாமேதைகளை உருவாக்கி சமூகத்திற்கு நன்மக்களை வழங்கக்கூடிய நற்பணியில் பல நூற்றாண்டுகள் சிறந்து செயல்பட வேண்டும் என்று நான் இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். உங்களது சட்ட அறிவை, வாதத்திறனை, ஏழை எளிய - ஒடுக்கப்பட்ட மக்களின் நீதிக்காக பயன்படுத்த வேண்டும் என்றும் நான் கேட்டுக் கொள்கிறேன்.
"சட்டம் ஒரு இருட்டறை அதில் வக்கீலின் வாதமே விளக்கு. அந்த விளக்கை ஏழைகளால் பெற முடியவில்லை" என்று அறிஞர் அண்ணா வருந்தினார். அப்படி அமைந்து விடக்கூடாது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கிக் கொடுத்துள்ள அடிப்படை உரிமைகளைக் காக்க உங்களது கல்வியை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.
சமத்துவ உரிமை, பேச்சுரிமை, எழுத்துரிமை, எண்ணங்களை வெளியிடும் உரிமை, ஒன்று கூடும் உரிமை, பணிகள் செய்யும் உரிமை, மத சுதந்திரம், கல்வி உரிமை, சொத்துரிமை பாதிக்கப்பட்டால் அதற்கு தீர்வு காணக்கூடிய உரிமை ஆகிய பல்வேறு உரிமைகளை அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. அதனைக் காக்கும் வழக்கறிஞர்களாக நீங்கள் திகழ வேண்டும்.
சட்டநீதியை மட்டுமல்ல - சமூகநீதியையும் நிலைநாட்டக் கூடியவர்களாக நீங்கள் விளங்க வேண்டும். சட்டத்தின் அரசாக - நீதியின் அரசாக - அதுவும் சமூகநீதியின் அரசாக - 'எல்லோர்க்கும் எல்லாம்' என்ற சமூகநீதித் தத்துவத்தை உள்ளடக்கிய திராவிட மாடல் அரசை நாம் நடத்தி வருகிறோம்.
மக்களுக்கு இன்றைய தேவை என்பது நீதி மட்டும்தான். அத்தகைய நீதியின் தூதுவர்களாக சட்டம் படிக்கும் நீங்கள் எதிர்காலத்தில் திகழ வேண்டும். சட்டப்புத்தகங்களையும் தாண்டி, இந்த சமூகத்தையும் பாடமாக நீங்கள் படிக்க வேண்டும். நாட்டின் அரசியல் போராட்டமாக இருந்தாலும் - விடுதலைப் போராட்டமாக இருந்தாலும் - சமுதாய சீர்திருத்த இயக்கமாக இருந்தாலும் - அதில் முன்னின்று கடமையாற்றியவர்கள் வழக்கறிஞர்களாகத் தான் இருக்கிறார்கள். இந்தப் படிப்பு என்பதே சட்ட அரசியல் - சமூகவியல் படிப்பாகத்தான் இருக்கிறது. உங்களது கட்சிக்காரர்களுக்கு வெற்றி தேடித்தரும் வழக்கறிஞர்களாக மட்டுமில்லாமல் , நீதிக்கு வெற்றி தேடித் தரும் வழக்கறிஞர்களாக நீங்கள் விளங்க வேண்டும்" என்று அவர் கூறினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
34 mins ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
13 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
15 hours ago
தமிழகம்
16 hours ago
தமிழகம்
16 hours ago