1 முதல் 8-ம் வகுப்பு வரை ஒரு வாரம் விடுமுறையால் புதுச்சேரியில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள்

By செய்திப்பிரிவு

புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. குறிப்பாக பள்ளி மாணவர்களிடையே அதிகளவில் காணப்படுகிறது.

இதையடுத்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு புதுவை மற்றும் காரைக்கால் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மருத்துவ மனைகளில் படுக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட குழந்தைகள் வீட்டில் இருந்தபடியே முகக் கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வதன் மூலம் இந்த வைரஸ் காய்ச்சலை தடுக்க முடியும்.

ஆகவே 1 முதல் 8-ம் வகுப்பு வரை குறைந்த நாட்களுக்கு விடுமுறை அளிக்கலாம் என்று சுகாதாரத்துறையானது கல்வித் துறைக்கு பரிந்துரைத்துள்ளது. அதன்படி வரும் 25-ம் தேதி வரை அரசு விடுமுறை விட்டுள்ளது.

இச்சூழலில் பல பள்ளிகளில் இன்று முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளன. கரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடைமுறையில் இருந்தன.

தற்போது நிலைமை சீராகியிருந்த சூழலில் காய்ச்சல் அதிகரிப்பால் ஒருவாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் ஆன்லைன் வகுப்புகள் நடைமுறைக்கு வருவது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE