ராஜபாளையம் அருகே பெண் வருவாய் ஆய்வாளர் மீது தாக்குதல்: மரம் வெட்டுவதை கண்டித்ததால் ஆத்திரம்

By செய்திப்பிரிவு

ராஜபாளையம் அருகே திருவேங்கடபுரத்தில் அனுமதியின்றி மரம் வெட்டுவது குறித்து கேள்வி எழுப்பிய பெண் வருவாய் ஆய்வாளர் மீது அப்பகுதியைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தினர்.

ராஜபாளையம் குறு வட்டார வருவாய் ஆய்வாளர் மலர்விழி. இவர் நேற்று நடைபெற்ற தடுப்பூசி முகாம்களை பார்வையிடுவதற்காக சத்திரப்பட்டி சென்றார். அப்போது திருவேங்கடபுரத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் பெரிய வேப்ப மரங்களை சிலர் எடுத்துச் சென்றனர்.

இது குறித்து வருவாய் ஆய்வாளர் மலர்விழி கேட்டபோது, அருகில் உள்ள கோயிலில் இருந்து மரத்தை வெட்டி எடுத்து வருவதாக அவர்கள் கூறியுள்ளனர். கோயில் இடத்தில் உள்ள மரத்தை வெட்டுவதற்கு அனுமதி பெறப்பட்டதா என வருவாய் ஆய்வாளர் கேள்வி எழுப்பினார்.

அப்போது அப்பகுதி மக்கள் வருவாய் ஆய்வாளருடன் வாக்குவாதம் செய்தனர். அவர்கள் பேசியதை மொபைல் போனில் படம் எடுத்த வருவாய் ஆய்வாளரை தாக்கி மொபைலை பறித்து பதிவு செய்த படங்களை அழித்தனர்.

இதில் காயமடைந்த வருவாய் ஆய்வாளரை உடன் வந்தவர்கள் ராஜபாளையம் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.

இதை அறிந்த மாவட்ட வழங்கல் அலுவலர் பால்துரை, வட்டாட்சியர் சீனிவாசன், மண்டல துணை வட்டாட்சியர் கோதண்டராமன் ஆகியோர் மருத்துவமனைக்குச் சென்று நடந்த சம்பவத்தை வருவாய் ஆய்வாளரிடம் கேட்டறிந்தனர்.

இது குறித்து கீழராஜகுலராமன் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE