அண்ணாமலையார் கோயிலில் பணம் மட்டுமே பிரதானம்: முதல்வருக்கு பக்தரின் ட்விட்டர் பதிவால் சலசலப்பு

By செய்திப்பிரிவு

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் ‘பணம் (காசு) மட்டுமே பிரதானம்’ என முதல்வர் மற்றும் இந்து சமய அறநிலையத் துறைக்கு பக்தர் ஒருவர் நேற்று ட்விட்டர் மூலம் பதிவிட்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாக வீற்றிருக்கிறது திருவண் ணாமலை அண்ணாமலையார் கோயில். உலக பிரசித்திப் பெற்றது.

இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய, விடுமுறை நாட்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். உள்ளூர் பக்தர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும்மாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள் வருகை தருகின்றனர். இவர்களுடன், வெளிநாட்டு பக்தர்களின் வருகையும் கணிசமாக இருக்கும்.

விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டத்தை, தங்களுக்கு சாதகமாக தரகர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர். இவர்களுடன், கோயிலில் பணியாற்றுபவர்களும் ‘கை’கோர்த்துள்ளனர்.

வசதி படைத்தவர்கள், செல்வாக்கு மிக்கவர்கள் ஆகியோர் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய, தவறான வழிமுறைகளை பின்பற்றுவதாக குற்றச்சாட்டு உள்ளது.

கூடுதல் பணத்தை செலவிட்டால், இறைவனை எளிதாக தரிசித்து விடலாம் என்ற எண்ணம், அவர்களிடம் மேலோங்கி உள்ளது. இதில், ஆந்திரா மற்றும் கர்நாடகமாநில பக்தர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

அவர்களை பிரத்யேக பாதையில் அழைத்துச் சென்று, மூலவர் சன்னதி முன்பு வரிசையில் காத்திருக்கும் பக்தர்களை தடுத்துவிட்டு, சுவாமி தரிசனம் செய்ய அனுப்பி வைக்கப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதனை, தடுக்க வேண்டியவர் களும் கண்டுகொள்வதில்லை.

இந்நிலையில், விடுமுறை நாளான நேற்று காலை 6 மணியில் இருந்து பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருந்தன. பொது வழி தரிசனம், ரூ.50 கட்டண தரிசன பாதையில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இரண்டு வழி தடங்களிலும், பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். அப்போது, கட்டண தரிசன பாதையில் சென்ற பக்தர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, செல்வாக்கு மிக்கவர்கள் அடிக்கடி அனுப்பப்பட்டு வந்துள்ளனர்.

இதனால் மனவேதனை அடைந்த பக்தர் டிஎஸ் வினோத் சிவம் என்பவர், ‘தமிழக கோயில்களில் விடியல் அரசில் பணம் (காசு) மட்டுமே பிரதானம்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 50 ரூபாய் கட்டண தரிசன பாதையில் 2 மணி நேரம் காத்திருந்தும், சுவாமியை தரிசிக்க முடியவில்லை. இதற்கு, அண்ணாமலையாரே முடிவு கட்டுவார்” என முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் இந்து சமய அறநிலையத் துறைக்கு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

இதையடுத்து, பொது தரிசனம் மற்றும் கட்டண தரிசன பாதையில் காத்திருந்த பக்தர்களை விரைவாக சுவாமி தரிசனம் செய்ய வைத்து கோயில் பணியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும், சிறிது நேரம் பிரத்யேக வழியாக செல்வாக்குமிக்கவர்களை அழைத்து வரும் செயல், கைவிடப்பட்டிருந்தது. முதல்வருக்கு அனுப்பப்பட்ட ட்விட்டர் பதிவால் சலசலப்பு ஏற்பட்டது.

இணை ஆணையர் மறுப்பு: இது குறித்து கோயில் இணை ஆணையர் அசோக்குமாரிடம் கேட்டபோது, “ட்விட்டரில் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை மறுக்கிறோம். ட்விட்டர் பதிவிட்டுள்ளவர் மும்பையைச் சேர்ந்தவர் என தெரிய வருகிறது.

குற்றஞ்சாட்ட வேண்டும் என்பதற்காக பதிவு செய்துள்ளார். விடுமுறை நாட்களில் எப்போதும் கூட்டம் அதிகம் இருக்கும். ட்விட்டர் பதிவு குறித்து தகவல் கிடைத்ததும், கூடுதல் பாதையை ஏற்படுத்தி, பக்தர்கள் அனைவரும் விரைவாக சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது” என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE