தென்காசி வழியாக ஞாயிறு தோறும் இயக்கப்பட்ட நெல்லை - தாம்பரம் வாராந்திர சிறப்பு ரயில் மீண்டும் இயக்கம்

By செய்திப்பிரிவு

திருநெல்வேலியில் இருந்து தென்காசி வழியாக தாம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் வாராந்திர சிறப்பு ரயில் இன்று முதல் ஜனவரி மாதம் வரை மீண்டும் இயக்கப்படுகிறது. இதனால் தென் மாவட்ட ரயில் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திருநெல்வேலியில் இருந்து தென்காசி வழியாக மேட்டுப்பாளையத்துக்கும், தாம்பரத்துக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு இருப்பதால் திருநெல்வேலி- மேட்டுப் பாளையம் ரயில் மேலும் 5 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

இந்நிலையில் திருநெல்வேலி யில் இருந்து தென்காசி வழியாக தாம்பரத்துக்கு இயக்கப்பட்ட வாராந்திர சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்ட சேவை காலம் நிறைவடைந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக இயக்கப்படாமல் இருந்தது. இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில், திருநெல்வேலி - தாம்பரம் வாராந்திர சிறப்புக் கட்டண ரயில் ( எண் 06004) திருநெல்வேலியில் இருந்து செப்டம்பர் 18 (இன்று) முதல் மீண்டும் இயக்கப்படுகிறது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்த ரயில் இன்று முதல் ஜனவரி 29 வரை ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.

மறு மார்க்கத்தில் தாம்பரம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்புக் கட்டண ரயில் (06003) தாம்பரத்தில் இருந்து செப்டம்பர் 19 முதல் ஜனவரி 30 வரை திங்கட்கிழமைகளில் இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.40 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும்.

இந்த சிறப்பு ரயில்கள் சேரன்மகாதேவி, அம்பாசமுத் திரம், கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சிவகாசி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம், செங்கல்பட்டு நிறுத்தங்களில் நின்று செல்லும்.

திருநெல்வேலியில் இருந்து மேட்டுப்பாளையம் மற்றும் தாம்பரத்துக்கு தென்காசி வழியாக இயக்கப்படும் வாராந்திர சிறப்பு ரயில்களுக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு இருப்பதால் இந்த ரயில்களை நிரந்தரமாக தினசரி இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

திருநெல்வேலியில் இருந்து தென்காசி வழியாக தாம்பரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் வாராந்திர சிறப்பு ரயில் இன்று முதல் ஜனவரி மாதம் வரை மீண்டும் இயக்கப்படுகிறது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE