புதுச்சேரியில் ஃப்ளு காய்ச்சல் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைக்கு தினமும் 500+ குழந்தைகளுக்கு வெளிப்புற சிகிச்சை

By அ.முன்னடியான்

புதுச்சேரி: புதுச்சேரியில் ஃப்ளு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், ராஜிவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் தினமும் 500 முதல் 600 குழந்தைகள் வரை காய்ச்சலுக்காக வெளிப்புற சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர் என சுகாதாரத் துறை இயக்குநர் ஸ்ரீராமலு தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் பருவநிலை மாற்றம் காரணமாக வைரஸ் காய்ச்சல் (ஃப்ளூ) வேகமாக பரவி வருகிறது. இக்காய்ச்சலால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் சளி, இருமல் மற்றும் காய்ச்சலுடன் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது.

குறிப்பாக, ராஜீவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் குழந்தை சிகிச்சை பிரிவில் உள்ள அனைத்து படுக்கைகளும் நிரம்பியுள்ளன. இந்த வைரஸ் காய்ச்சலை தடுக்க சுகாதாரத் துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மருத்துவமனைகளில் சிறப்பு காய்ச்சல் சிகிச்சை பிரிவுகள் ஏற்பாடு செய்யப்பட்டு 24 மணி நேரமும் இயங்கி வருகின்றன. காய்ச்சல் அதிகரிப்பால் புதுச்சேரியில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு வரும் 25-ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று ஒரே நாளில் ராஜீவ் காந்தி மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் 192 குழந்தைகள் அதிக காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் ஸ்ரீராமுலு இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ‘‘புதுச்சேரியில் கடந்த 10 நாட்களாக வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வருகிறது. குழந்தைகள், பெரியவர்கள் காய்ச்சலுடன் மருத்துவமனைக்கு வருகின்றனர். குறிப்பாக, ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு ஒரு நாளைக்கு 500 முதல் 600 குழந்தைகளும், அரசு பொது மருத்துவமனையில் வெளிப்புற சிகிச்சை பிரிவுக்கு ஒரு நாளைக்கு 40 முதல் 50 பேரும் வருகின்றனர். இதனால் ஒவ்வொரு மருத்துவமனையிலும் தனியாக காய்ச்சல் மையம், காய்ச்சல் சிகிச்சை பிரிவு ஆரம்பித்துள்ளோம்.

ராஜீவ் காந்தி குழந்தைகள் மருத்துவமனையில் 120 படுக்கைகள் உள்ளன. நேற்று ஒரே நாளில் 192 குழந்தைகள் உள்நோயாளிகள் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோல், அரசு பொது மருத்துவமனையில் 12 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது சாதாராண வைரஸ் காய்ச்சலாக (ஃப்ளூ) தான் தெரிகிறது.

இருப்பினும், ஸ்வைன் ப்ளூ, (பன்றி காய்ச்சல்), இன்புளுயன்சா, மலேரியா, சிக்குன் குனியா, டெங்கு காய்ச்சல் உள்ளதா என பார்ப்பதற்கு போதுமான பரிசோதனை கருவிகள் வாங்கி கொடுத்துள்ளோம். ஜிப்மரிலும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் பரிசோதனைகள் செய்து வருகிறார்கள். இந்த பரிசோதனை முடிவுகள் வரும் 19-ம் தேதி முதல் தெரியவரும்.’’என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE