சென்னை: "அமித் ஷாவின் இந்தி வெறிப் பேச்சுக்கு கண்டனம் தெரிவிக்கவும், அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்திக்கு இணையான மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வலியுறுத்தியும், வரும் செப்.24-ல் மதிமுக சார்பில் சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்" என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு அமைந்த நாள் முதல், ஒரே மொழி; ஒரே மதம்; ஒரே பண்பாடு; ஒரே நாடு என்ற முழக்கத்துடன், மாநிலங்களுக்கு எதிரான போக்கினை நாள்தோறும் கட்டவிழ்த்துவிட்டு வருகிறது. இந்தி பேசாத மாநிலங்களின் மீது சமஸ்கிருத மொழியையும், இந்தி மொழியையும் மூர்க்கத்தனமாகத் திணித்து வருகிறது.
டெல்லியில் நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-ஆவது கூட்டத்திற்கு தலைமை வகித்து, உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றும்போது, "உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்று மொழியாக இந்தி மொழியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று உரையாற்றினார்.
இந்திய அமைச்சரவையின் 70 விழுக்காடு நிகழ்ச்சி நிரல் இந்தியில் தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், வடகிழக்கு மாநிலங்களில் 22,000-க்கும் அதிகமான இந்தி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுவிட்டார்கள் என்றும், அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்றும் அந்தக் கூட்டத்தில் ஆணவமாகப் பேசினார். நாடு முழுக்க கண்டனக் குரல் எழும்பியதும், நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை என்று சமாளித்து, மழுப்பி பின்வாங்கிக் கொண்டார் அமித் ஷா.
» “சீனிவாசன் நலமுடன் உள்ளார்” - நேரில் நலம் விசாரித்த ஸ்மினு சிஜோ தகவல்
» ஓட்டுநர் உரிமம் வேண்டுமா? - இனி ஆர்டிஓ அலுவலகம் செல்ல வேண்டாம்... ஆன்லைனில் 58 சேவைகள்
இப்பொழுது மீண்டும் இந்தியைத் திணிக்கும் ஆர்வத்தோடு, இந்திய வரலாற்றின் ஆன்மாவை கற்றுக்கொள்ள அனைவரும் இந்தி மொழியைக் கற்க வேண்டும் என்று பேசியிருக்கிறார். "அலுவல் மொழியான இந்தி நாட்டை ஒற்றுமை என்னும் கயிற்றில் இணைக்கிறது. அனைத்து இந்திய மொழிகளுக்கும் தோழன் இந்திதான்" என்றும் அமித் ஷா இந்தி வார விழாவில் கொக்கரிக்கிறார்.
தொன்மைவாய்ந்த நம் தமிழ்மொழியையும், பிற மாநில மொழிகளையும் புறந்தள்ளிவிட்டு, இந்திதான் இந்தியாவின் தேசிய மொழி, உலகின் உயர்ந்த மொழி என்ற பொய்த் தோற்றத்தை அமித் ஷா புனைய முனைவது, இந்தி ஆதிக்கத்தின் வெளிப்பாடே ஆகும். வேற்றுமையில் ஒற்றுமை என்னும் பண்பாட்டிற்கும் நேர் எதிரானது ஆகும் இது.
சமஸ்கிருத வளர்ச்சிக்கும், இந்தி மொழி வளர்ச்சிக்கும் மலை அளவு நிதி ஒதுக்கி, தமிழுக்கும், பிற மொழிகளுக்கும் கடுகளவு நிதி ஒதுக்கும் பாஜக அரசு, தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரால் இந்தியையும், சமஸ்கிருதத்தையும் இந்தி பேசாத மக்களிடம் புகுத்தும் பாஜக அரசு, "ஒருமைப்பாடு" என்பதைக் காட்டி, இந்தியை நம்மீது மீண்டும் திணிக்கும் அபாய எச்சரிக்கையாகவே அமித் ஷாவின் பேச்சை நாம் கவனிக்க வேண்டும். இதனைக் கண்டித்து தமிழ் மக்கள் ஓரணியில் திரள வேண்டும் என அழைக்கிறேன்.
அண்டை மாநிலமான கர்நாடகத்தில் இந்தி எதிர்ப்புக் கனல் கொழுந்து விட்டு எரிகிறது. எதிர்ப்பு காரணமாக மைசூரு நகரில் இந்திநாள் கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்தி நாள் கொண்டாட்டத்திற்கு எதிராக, விதான் சவுதாவில் உள்ள காந்தி சிலை முன்பு மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள். மேற்கு வங்கம், ஆந்திரம், கேரளம் ஆகிய மாநிலங்களிலும், வடகிழக்கு மாநிலங்களிலும், இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தி எதிர்ப்பு என்பது நீறுபூத்த நெருப்பாகவே உள்ளது.
எனவேதான், அமித் ஷாவின் இந்திவெறிப் பேச்சுக்கு - போக்குக்கு கண்டனம் தெரிவிக்கவும், அரசமைப்புச் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் இந்திக்கு இணையான மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் மதிமுக அறப்போருக்கு அழைப்பு விடுக்கிறது.
24.9.2022 சனிக்கிழமை மாலை 4 மணிக்கு, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் என்னுடைய தலைமையில் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தமிழக மக்களையும், தமிழ் உணர்வாளர்களையும் அன்புடன் அழைக்கிறேன்.
பெரியாரும் - அண்ணாவும் அரும்பணியாற்றிய - திராவிட இயக்கம் வேரூன்றி நிற்கும் தமிழ் மண்ணில், தமிழ் மொழி உணர்வு பட்டுப்போகாமல் செழித்து நிற்கிறது; போராட்ட போர்க்குணம் ஆழித்தீயாய் என்றும் கனன்று கொண்டுதான் இருக்கிறது என்பதை அகிலத்திற்கு பறைசாற்றிட, மதிமுக நடத்தும் ஆர்ப்பாட்டத்திற்கு அனைவரும் வரவேற்கிறேன்" என்று வைகோ கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 mins ago
தமிழகம்
8 mins ago
தமிழகம்
8 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago