ஆவின் இனிப்பு வகைகளின் விலை உயர்வுக்கு ஓபிஎஸ் கண்டனம் 

By செய்திப்பிரிவு

சென்னை: ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளின் விலைகள் உயர்த்தப்பட்டிருப்பதற்கு ஓ. பன்னீர்செல்வம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

ஆட்சியைப் பிடிப்பதற்காக நிறைவேற்ற முடியாத, சாத்தியமற்ற தேர்தல் வாக்குறுதிகளை அள்ளிவீசி, “சொன்னதை செய்வோம், செய்வதையே சொல்வோம்” என்ற வீர வசனத்தை தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு, அதன் மூலம் ஆட்சியைப் பிடித்த திமுக, “சொன்னதை செய்யமாட்டோம், சொன்னதற்கு முரணாக நடப்போம்” என்ற வழியில் “மக்கள் விரோத மாடல்” ஆட்சியை தமிழ்நாட்டில் நடத்திக் கொண்டிருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்தால், மாதத்திற்கு ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனை நடைமுறைப்படுத்தாததோடு கூடுதல் மின் கட்டணத்தை மக்கள்மீது சுமத்தியுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் மீண்டும் மேம்படும் வரை சொத்து வரி உயர்த்தப்படமாட்டாது என வாக்குறுதி அளிக்கப்பட்டது. பொருளாதாரம் மேம்படாத நிலையில் சொத்து வரி 150 விழுக்காடு அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆட்சிக்கு வந்தபின் அகவிலைப்படிக்கே அரசு ஊழியர்கள் அல்லல்பட வேண்டியிருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்தாகிவிடும் என்று மேடைக்கு மேடை முழங்கப்பட்டது. இப்போது க்யூட் தேர்வு வேறு வந்துவிட்டது.

ஏழை மக்கள் பசி தீர, முதல் கட்டமாக 500 இடங்களில் உணவகம் அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், இருக்கின்ற அம்மா உணவகங்களை நீர்த்துப் போகச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பொங்கல் திருநாள் மாபெரும் பண்பாட்டுத் திருநாளாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்படும் என்று தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது. பொங்கல் தினத்தன்று வழங்கப்பட்ட மளிகைப் பொருட்களின் அடிப்படையில் பார்த்தால், அந்த நாள் கருப்பு தினமாகத்தான் கொண்டாடப்பட்டது. அந்த அளவுக்கு தரமற்ற, ஒவ்வாமை ஏற்படக்கூடிய பொருட்கள் தான் திமுக அரசால் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் இருந்தது.

கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளிக்கப்பட்டு இருந்தது. உண்மையில், பெரும்பாலானோர் கடனாளியாக ஆனதுதான் மிச்சம். இதுபோல், திமுகவால் அளிக்கப்பட்ட ஒவ்வொரு வாக்குறுதியும் முன்னுக்குப் பின் முரணாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. “திராவிட மாடல்” என்று சொல்லிக் கொண்டு, மக்களை வாட்டி வதைக்கின்ற ஆட்சியை தமிழ்நாட்டில் திமுக நடத்திக் கொண்டு இருக்கிறது.

அந்த வகையில், ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. அந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டாலும், அந்த இழப்பை ஈடுகட்டும் வகையில், ஆவின் பொருட்களான தயிர், நெய், வெண்ணெய், ஐஸ்க்ரீம் வகைகள் பன்மடங்கு உயர்த்தப்பட்டன. உதாரணமாக திமுக ஆட்சிக்கு வரும்போது அரை லிட்டர் தயிரின் விலை 27 ரூபாய்; ஒரு லிட்டர் 54 ரூபாய் என்றிருந்தது. இன்றைக்கு அதே தயிர் அரை லிட்டர் 35 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் 70 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகின்றன. இதேபோல், திமுக ஆட்சிக்கு வரும்போது ஒரு லிட்டர் சாதாரண நெய்யின் விலை 515 ரூபாயாக இருந்தது. இன்றைக்கு அந்த நெய்யின் விலை 580 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 80 ரூபாயாக இருந்த 200 கிராம் பாதாம் பவுடர் 100 ரூபாயாக உயர்த்தப்பட்டது. சிறிய ஐஸ்க்ரீம் விலைகளும் 5 ரூபாய் வரை உயர்த்தப்பட்டன. இதற்குக் காரணம் கேட்டால் ஜிஎஸ்டி என்று திமுக அரசு விளக்கம் தரும். ஆனால், அதையும் தாண்டி விலை உயர்த்தப்பட்டது என்பதுதான் யதார்த்தம். இதற்கிடையில் எடை குறைப்பு வேறு.

இது போதாது என்று, தீபாவளிப் பண்டிகை வர இருக்கின்ற இந்தத் தருணத்தில், ஆவின் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் இனிப்பு வகைகளின் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன. இனிப்பில்லாத ஒரு கிலோ கோவா 520 ரூபாயிலிருந்து 600 ரூபாயாகவும், பேரிச்சை கோவா அரை கிலோ 230 ரூபாயிலிருந்து 270 ரூபாயாகவும், கால் கிலோ ரசகுல்லா 80 ரூபாயிலிருந்து 100 ரூபாயாகவும், அரை கிலோ மைசூர்பா 230 ரூபாயிலிருந்து 270 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளன.

திமுக ஆட்சி பொறுப்பேற்றதிலிருந்தே, இனிப்பான வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், கசப்பான மருந்துகளையே தொடர்ந்து மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கும் மக்கள் விரோத அரசாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. ‘திராவிட மாடல்’ என்று சொல்லிக் கொண்டு மக்களை வஞ்சிக்கின்ற திமுக அரசிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, ஆவின் பொருட்களின் விலை உயர்வினை திரும்ப பெறவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஓராண்டு கால திமுக ஆட்சியினால் ஏழையெளிய மக்கள் விரக்தியின் விளிம்பிற்கு சென்று கண்ணீர் விட ஆரம்பித்து விட்டார்கள். மக்களை வாட்டி வதைக்கும் செயலைக் கைவிட்டுவிட்டு, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மக்கள் வடிக்கும் கண்ணீர் திமுக ஆட்சியை அழிக்கும் ஆயுதமாக மாறிவிடும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்