சென்னை: “நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஓய மாட்டேன் என்பதை மட்டும் மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறேன்” என்று வன்னியர்களுக்கு 10.50% இடஒதுக்கீடு குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து பாமக தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “தமிழகத்தில் கல்வியும், வேலைவாய்ப்பும் மறுக்கப்பட்டு, சமுதாய படிநிலையின் அடித்தட்டில் தள்ளப்பட்ட பாட்டாளி மக்கள், தங்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகளைக் கேட்டு போராடியதற்காக காவல் துறையினரால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டதன் 35-ஆவது நினைவு நாள் நாளை. இந்தியாவின் சமூக நீதி வரலாற்றில் ஈடு இணையற்ற தியாகம் செய்த, காவல் துறையினரின் துப்பாக்கி குண்டுகளை துணிச்சலுடன் மார்பில் தாங்கிய இடஒதுக்கீட்டுப் போராட்ட ஈகியர்கள் 21 பேருக்கும் நான் எனது வீரவணக்கங்களை செலுத்துகிறேன்.
வன்னியர்கள் வீழ்த்தப்பட்டதற்கு காரணம், அவர்களுக்கு கல்வி கிட்டாதததுதான். எதிர்காலத் தலைமுறையினராவது முன்னேறுவதற்கு வசதியாக கல்வியும், வேலைவாய்ப்பும் வழங்குங்கள் என்றுதான் அவர்கள் கோரினார்கள். ஆனால், அவர்களின் மீதேறி அதிகாரத்தை கைப்பற்றியவர்கள், அவர்களுக்கான சமூக நீதியை வழங்க மறுத்தார்கள். அந்த நிலையிலிருந்து வன்னிய சமுதாயத்தை மீட்டெடுக்க வேண்டும்; கல்வி மற்றும் வேலைவாய்ப்பு உரிமைகளை வென்றெடுத்துக் கொடுத்து அவர்களை முன்னேற்ற வேண்டும் என்ற உன்னத நோக்குடன்தான் பிரிந்து கிடந்த அமைப்புகளையெல்லாம் ஒன்று திரட்டி, வன்னியர் சங்கத்தை கட்டமைத்தோம்.
அதன்பிறகு அடுத்த 7 ஆண்டுகளுக்கு மாநாடுகள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள், உண்ணாவிரதம், ஒரு நாள் சாலைமறியல், ஒரு நாள் தொடர்வண்டி மறியல் என ஏராளமான போராட்டங்களை நடத்தியும் நமது கோரிக்கை குறித்து பேச்சு நடத்தக்கூட ஆட்சியாளர்கள் முன்வராததால்தான் தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ஆம் தேதி முதல் ஒருவார கால தொடர்சாலை போராட்டத்தை அறிவித்தோம். உரிமை கேட்டு நாம் நடத்திய போராட்டத்தைக் கூட சகித்துக் கொள்ள முடியாமல் காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு, கொடூரத் தாக்குதல்கள் ஆகியவற்றில் 21 சொந்தங்கள் தங்களின் இன்னுயிரை தியாகம் செய்தனர்.
» 'கமிசன், கலெக்சன், கரெப்சனிலும் திராவிட மாடல்' - இபிஎஸ் குற்றச்சாட்டு
» மாணவர்கள் அரசியலில் ஈடுபடாமல் இருந்தால் திருடர்கள் அரசியலுக்கு வந்து விடுவார்கள்: கமல்ஹாசன்
தொடர் சாலைமறியல் போராட்டத்திற்கு பிறகுதான் அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அழைத்து பேசினார். அதன்பிறகு ஆட்சிக்கு வந்த திமுக தலைவர் கருணாநிதி நம்மை அழைத்துப் பேசி 108 சமுதாயங்களை இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு என்ற புதிய பிரிவை உருவாக்கி அதற்கு 20% இடஒதுக்கீடு வழங்கினார். அதிலும் நமக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைக்காத நிலையில்தான் 2020-ஆம் ஆண்டு மீண்டும் ஒரு போராட்டத்தைத் தொடங்கினோம். அதன் பயனாக 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி வன்னியர்களுக்கு 10.50% இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது. அதன்பின் ஆட்சிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு அந்த இடஒதுக்கீட்டை நடைமுறைக்கு கொண்டு வந்தது. அந்த வகையில் கடந்த ஆண்டு நமது சமூக நீதி பயணத்தில் வெற்றி ஆண்டாக அமைந்தது. அதனால், கடந்த ஆண்டு இடஒதுக்கீட்டு ஈகியர்களின் நினைவு நாளில் அவர்களுக்கு நன்றி தெரிவித்து மரியாதை செலுத்தினோம்.
காலம் காலமாக கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் புறக்கணிக்கப்பட்டு வந்த சமுதாயம், போராடி, உயிர்த் தியாகம் செய்து சமூக நீதியை வென்றெடுத்ததை தாங்கிக் கொள்ள முடியாமல் கிட்டத்தட்ட 50 அமைப்புகள் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. நீதிமன்றமும் சட்டத்தின்படியாக அல்லாமல், உணர்வுகளின் அடிப்படையில் வழக்கை விசாரித்து வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கியது செல்லாது என்று தீர்ப்பளித்தது. அப்போது நான் உங்களுக்கு அளித்த வாக்குறுதி.... ''எப்பாடு பட்டாலும் வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை மீண்டும் வென்றெடுத்துக் கொடுக்காமல் ஓயமாட்டேன்'' என்பதுதான். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காகத்தான் கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக ஓயாமல் போராடிக் கொண்டிருக்கிறேன்.
வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நானே மேல்முறையீடு செய்தேன். தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து வன்னியர் இட ஒதுக்கீட்டுக்கு மீண்டும் உயிர்கொடுக்க போராடியது. உச்ச நீதிமன்றமும் நமது மேல்முறையீட்டு மனுக்களை ஆய்வு செய்து, வன்னியர் இட ஒதுக்கீட்டிற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் முன்வைத்திருந்த 7 காரணங்களில் 6 காரணங்கள் தவறானவை என்று தீர்ப்பளித்தது. அதுமட்டுமின்றி, வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க எந்தவித தடையும் இல்லை; அதற்கான சட்டத்தை நிறைவேற்றலாம் என்று உச்ச நீதிமன்றம் பச்சைக்கொடி காட்டிவிட்டது.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மார்ச் மாதத்தின் இறுதி நாளில் வந்த நிலையில், உச்ச நீதிமன்றம் வழிகாட்டியவாறு புதிய சட்டத்தை இயற்றச் செய்து, வன்னியர்களுக்கு மீண்டும் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். நமது தரப்பில் உள்ள நியாயத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஏற்றுக் கொண்டு, வன்னியர்களுக்கு மீண்டும் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்பதை தமிழக சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் வாக்குறுதியாக அளித்திருக்கிறார். நமக்கும் நம்பிக்கை உள்ளது.
ஆனாலும், உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்து ஐந்தரை மாதங்கள் கடந்து விட்டன; மருத்துவக் கல்வி, பொறியியல் படிப்பு, கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைகளில் வன்னியர்களுக்கு உள் இட ஒதுக்கீடு இல்லை; கடந்த 10 மாதங்களில் அறிவிக்கப்பட்ட 20-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளிலும் வன்னியர் இட ஒதுக்கீடு இல்லை என்ற உங்களின் கவலைக்குரல்கள் என் காதுகளை எட்டாமல் இல்லை. உங்கள் கவலைகளை நானும் உணர்கிறேன். அதைப் போக்க அனுதினமும் அயராமல் பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன்.
கேட்டவுடன் கிடைத்து விடுவதற்கு சமூக நீதி ஒன்றும் சுக்கோ, மிளகோ அல்லவே. அதற்காக பல்வேறு நடைமுறைகள் உள்ளன. அவை அனைத்தையும் கடந்து தான் வன்னியர் இட ஒதுக்கீட்டை சாத்தியமாக்க முடியும். கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பு வந்த நாளில் நான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஓய மாட்டேன் என்பதை மட்டும் மீண்டும் ஒருமுறை நினைவூட்டுகிறேன்.
கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னிய சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும் என்ற வேட்கையின் காரணமாகத் தான் 21 ஈகியர்கள் ஒரே போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்தனர். அவர்கள் சிந்திய ரத்தம் ஒருபோதும் வீண்போகாது. வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எப்பாடுபட்டாவது வெகுவிரைவில் வென்றேடுத்தே தீருவோம். இந்த உணர்வுடன் நமது சமூக நீதி நாளான செப்டம்பர் 17-ஆம் நாளில் நமது இட ஒதுக்கீட்டுப் போராட்ட தியாகிகளின் நினைவுத் தூண்களுக்கும், உருவப்படங்களுக்கும் மரியாதை செலுத்த வேண்டும்; அனைவரும் அவர்களின் வீட்டு முன்பு இட ஒதுக்கீட்டுப் போராட்டத் தியாகிகளுக்கு வீரவணக்கம் என்ற பதாகையை அமைத்து வீர வணக்கம் செலுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
32 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago