கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் இட நெருக்கடியில் தவிக்கும் எம்.ஜி.ஆர். காய்கனி மார்க்கெட்

By ஆர்.கிருஷ்ணகுமார்

கோவையில் உள்ள எம்.ஜி.ஆர். மொத்த காய்கனி மார்க்கெட் இடநெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. வெட்ட வெளியில் வைக்கப்பட்டுள்ள காய்கறிகள், மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வியாபாரிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்துகின்றன.

கோவை ரங்கே கவுடர் வீதி, டி.கே.பிளாக் பகுதிகளில் 40 ஆண்டுகளாக காய்கனி மொத்த மார்க்கெட் செயல்பட்டு வந்தது. அங்கு இட நெருக்கடி நிலவியதால், கடந்த 1994-ல் கோவை-மேட்டுப்பாளையம் சாலையில், மாநகராட்சி 10-வது வார்டுக்கு உட்பட்ட சாய்பாபா கோயில் பகுதிக்கு அந்த மார்க்கெட் மாற்றப்பட்டது.

112 கடைகள்

ஏற்கெனவே ரங்கே கவுடர் வீதி, டி.கே.பிளாக் பகுதிகளில் கடை வைத்திருந்த 60 வியாபாரிகளுக்கு, புதிய மார்க்கெட்டில் இடம் ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக கடைகளின் எண்ணிக்கை அதிகரித்து, தற்போது 112 கடைகள் இந்த மார்க்கெட்டில் உள்ளன.

மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வெங்காயம், தக்காளி, ஆக்ரா, குஜராத்திலிருந்து உருளைக்கிழங்கு மற்றும் கோவை, நீலகிரி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரட், பீட்ரூட், பீன்ஸ், கத்தரிக்காய், முருங்கை, முள்ளங்கி, பீர்க்கங்காய், பாகற்காய், தேங்காய், புடலங்காய் உள்ளிட்ட பல்வேறு காய்கறிகள் இந்த மார்க்கெட்டுக்கு வருகின்றன.

கேரளாவுக்கு 90% விற்பனை

இங்கு வரும் காய்கறிகளில் 90 சதவீதம் கேரள மாநிலம் பாலக்காடு, கோழிக்கோடு, எர்ணாகுளம், கோட்டயம் ஆலப்புழா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும், கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களின் அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கிருந்து காய்கறிகள் விற்கப்படுகின்றன.

காலை நேரங்களில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கும், மாலை முதல் இரவு வரை கேரள மாநிலத்துக்கும் லாரிகளில் காய்கறிகள் மூட்டை மூட்டையாக அனுப்பப்படுகின்றன.

ஒரு ஆண்டில் தீபாவளி, பொங்கல், ரம்ஜான், மே தினம் உள்ளிட்ட 5 நாட்களுக்கு மட்டுமே இந்த மார்க்கெட் செயல்படாது. மற்ற அனைத்து நாட்களும், 24 மணி நேரமும் இந்த மார்க்கெட் தொடர்ந்து செயல்படும்.

தினமும் 300 லாரிகள் இங்கு வந்து, செல்கின்றன. ஏறத்தாழ 2 ஆயிரம் டன் காய்கறிகள் இங்கு கொண்டுவரப்பட்டு, பல்வேறு பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்படுகின்றன.

அரசுக்கு ரூ.2 கோடி வருவாய்

விவசாயிகள், காய்கறி வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள், வாகன ஓட்டுநர்கள், அருகில் உள்ள டீக்கடை, ஹோட்டல்காரர்கள் என நேரடியாகவும், மறைமுகமாகவும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த மார்க்கெட்டால் பயனடைகின்றனர்.

இந்த மார்க்கெட்டில் தினமும் சுமார் ரூ.3 கோடி அளவுக்கு காய்கறிகள் விற்பனையாகின்றன. இது காய்கறிகளின் வரத்து, விற்பனை, தேவையைப் பொறுத்து மாறுபடும். சுங்கக் கட்டணம், கடை வாடகை என அரசுக்கு சுமார் ரூ.2 கோடி வருவாய் கிடைக்கிறது.

பரிதவிக்கும் வியாபாரிகள்

இவ்வாறு மிகப் பெரிய மார்க்கெட்டாகத் திகழ்ந்தாலும், இட நெருக்கடி உள்ளிட்ட பிரச்சினைகளால், இங்குள்ள வியாபாரிகள், விவசாயிகள் பரிதவிக்கின்றனர்.

இது தொடர்பாக மார்க்கெட் வியாபாரிகள் மற்றும் காய்கறிகளைக் கொண்டுவரும் விவசாயிகள் ‘தி இந்து’விடம் கூறியது:

கடந்த 22 ஆண்டுகளுக்கு முன் இருந்த மக்கள் தொகைக்கு ஏற்ப, சுமார் 3 ஏக்கரில் இந்த மார்க்கெட் அமைக்கப்பட்டது. அப்போது 60 கடைகள்தான் இருந்தன. தற்போது மக்கள்தொகை இரு மடங்காகியுள்ளது. அதற்கேற்ப கடைகளின் எண்ணிக்கை மற்றும் காய்கறிகளின் வரத்தும் பெரிதும் அதிகரித்துள்ளது. ஆனால், அந்த அளவுக்கு மார்க்கெட் விரிவாக்கம் செய்யப்படாததால், மிகுந்த நெருக்கடி நிலவுகிறது.

இதனால், மார்க்கெட்டுக்கு உள்ளே வரவும், வெளியே செல்லவும் காய்கறி லாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

போக்குவரத்து நெரிசல்

தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோவையின் காய்கறித் தேவையை பெருமளவு பூர்த்தி செய்யும் இந்த மார்க்கெட்டுக்கு, தினமும் சுமார் 500 வியாபாரிகள் வரை வருகின்றனர். பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருகிறார்கள். அவர்களது வாகனங்களை நிறுத்த இங்கு இடமில்லை. இதனால் மார்க்கெட்டுக்கு வெளியே அவற்றை நிறுத்திவிட்டு, மார்க்கெட்டுக்குள் வருகின்றனர். இதனால், கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது.

சுமார் 5 ஆண்டுகளுக்கு முன், காய்கறி சந்தைக்கு எதிரே மேட்டுப்பாளையம் செல்லும் பேருந்துகளுக்காக தனி பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. இதனால், போக்குவரத்து நெருக்கடி மேலும் அதிகரித்துவிட்டது. சில நேரங்களில் இப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அவ்வப்போது விபத்துகளும் நேரிடுகின்றன. ஓரிரு விபத்தில் சிலர் இறந்த நிகழ்வுகளும் உண்டு. மார்க்கெட்டுக்குள் லாரிகள் நுழைவது மிகவும் சிரமமாகிவிட்டது.

அதுமட்டுமின்றி போதுமான கழிப்பிட வசதி, குடிநீர் வசதியும் கிடையாது. வாகனங்களை நிறுத்த இடவசதி இல்லை. இங்கு வரும் விவசாயிகள் ஓய்வெடுக்க எந்த வசதியும் இல்லை. இந்தப் பிரச்னைக்கு நிரந்தத் தீர்வுகாண வேண்டியது அவசியம் என்றனர்.

மழையால் வீணாகும் காய்கறிகள்

கோவை மாவட்ட மொத்த அனைத்து காய்கறி வியாபாரிகள் சங்க நிர்வாகி அப்துல் ஹக்கீம் கூறியது: டன் கணக்கில் காய்கறிகள் வந்தாலும், அவற்றை வைக்க இடமில்லை. ஏற்கெனவே ரங்கே கவுடர் வீதியில் இருந்தபோது, கடைகளுடன், சிறிய கிடங்கும் இருந்தது. இங்கு கடைகளுக்கே போதுமான இடமில்லை. இதனால், வெட்ட வெளியில் காய்கறி மூட்டைகளை அடுக்கி வைத்துள்ளோம். சிறிது மழை பெய்தால், அவை நனைத்து வீணாகின்றன. தொடர் மழை பெய்தால், லட்சக்கணக்கான மதிப்புமிக்க வெங்காயம், தக்காளி மற்றும் அனைத்து காய்கறிகளும் அழுகி வீணாகின்றன. அதேபோல, வெயிலில் காய்ந்தும் காய்கள் வாடுகின்றன. சில நாட்கள் காய்கறிகளை விற்க முடியாதபோது, பாதுகாப்பற்ற நிலையில் வைத்துள்ளதால், அடுத்து வரும் நாட்களில் மிகக் குறைந்த விலைக்கே அவற்றை வாங்கிச் செல்கின்றனர். இதனால், வியாபாரிகள் மிகுந்த நஷ்டத்துக்குள்ளாகின்றனர்.

அதுமட்டுமின்றி சாக்கடை வசதி இல்லாததால், மழைக் காலங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீரும், சேறும் தேங்கிநிற்கிறது. போதுமான கழிப்பறையோ, ஓய்வறையோ இல்லாததால், விவசாயிகள், வியாபாரிகள் தவிக்கின்றனர்.

இங்கு சேரும் குப்பையை மாநகராட்சி ஊழியர்கள் எடுத்துச் சென்று, ஓரிடத்தில் குவித்து வைக்கின்றனர். சில நாட்களுக்குப் பிறகு, அவற்றை வாகனங்களில் எடுத்துச் செல்கின்றனர். அதை தேங்கும்போது துர்நாற்றம் வீசுகிறது. எனவே, ஒப்பந்ததாரர் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் இணைந்து, குப்பையை உடனிடயாக கொண்டுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விசாலமான இடத்துக்கு மார்க்கெட்டை மாற்ற வேண்டும். அதுவரை, அருகில் மாநகராட்சிக்குச் சொந்தமாக உள்ள சுமார் 2 ஏக்கர் காலி இடத்தை, மார்க்கெட் வியாபாரிகள் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்றார்.

15 ஏக்கரில் புதிய மார்க்கெட்

கோவை மாவட்ட அண்ணா மொத்த அனைத்து காய்கனி வியாபாரிகள் சங்கச் செயலாளர் ஏ.சுப்பிரமணி, நிர்வாகிகள் வி.எம்.ஹனீபா, எஸ்.ஐ.நஷீர் ஆகியோர் கூறும்போது, “மார்க்கெட் நெருக்கடி தொடர்பாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, எம்எல்ஏ அருண்குமார் ஆகியோரிடம் மனு அளித்தோம். இங்கிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ள, கவுண்டம்பாளையம் எரு கம்பெனி பகுதியில், 15 ஏக்கர் பரப்பில் புதிதாக மார்க்கெட் அமைக்க நடவடிக்கை மேற்கொள்வதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர். அங்கு, தேவையான அளவுக்கு கிடங்கு, வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடனும் மார்க்கெட் அமைக்கப்படும். விரைவில் இப்பணிகள் தொடங்கி, ஓரிரு ஆண்டுகளில் மார்க்கெட் இடம் மாற்றம் செய்யப்படும். அப்போது, இன்னும் கூடுதலான வியாபாரிகள், காய்கறி விற்பனையில் ஈடுபடுவர். காய்கறிகள் வரத்தும் அதிகரித்து, மக்களுக்கு குறைந்த விலையிலும், புதிதாகவும் காய்கறிகள் கிடைக்கும் என்றனர்.

குடிநீர் வசதிக்கு ஏற்பாடு

கோவை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன் கூறும்போது, “எம்.ஜி.ஆர். மார்க்கெட்டில் உள்ள சாலையைச் சீரமைக்க வேண்டுமென வலியுறுத்தினர். தற்போது, அங்குள்ள சாலையைச் சீரமைத்து, சாக்கடை வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், குடிநீர்த் தொட்டி அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் மற்ற கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மார்க்கெட்டை வேறு இடத்துக்கு மாற்றுவது தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்