பிச்சையெடுத்தல், உடல் உறுப்புகளை பெறுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக கடந்த 2 ஆண்டுகளில் கடத்தப்பட்ட 23,699 குழந்தைகள் நாடு முழுவதும் மீட்கப்பட்டுள்ளனர். பிச்சையெடுக்கும் குழந்தைகளைக் கண்டால் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்து உதவ வேண்டும் என இந்திய குழந்தைகள் நல கவுன்சில் வேண்டுகோள் விடுத்துள்ளது.
வழிபாட்டுத் தலங்கள், சாலைகளின் முக்கிய சந்திப்புகள், சிக்னல்கள், சுற்றுலாத் தலங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்களை வழிமறித்து பிச்சையெடுக்கும் வட மாநில குழந்தைகளின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக சென்னையைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர், ‘தி இந்து’ உங்கள் குரல் வசதியை பயன்படுத்தி கூறும்போது, “சென்னையில் போக்குவரத்து சிக்னல்களில் நிறைய சிறுவர்கள் பிச்சையெடுத்தும், பொருட்களை விற்பனை செய்தும் வருகின்றனர். இந்நிலை தொடர்ந்தால் இவர்கள் விபத்துகளில் சிக்கவும், கல்வியின்றி எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது. எனவே, இச்சிறுவர்களுக்கு கல்வி அளிக்க அரசு ஏற்பாடு செய்துதர வேண்டும்” என்றார்.
வெளிமாநிலத்தவர்கள் அதிகம்
இதுகுறித்து ‘யுனிசெப்’ அமைப்பின் குழந்தை பாதுகாப்பு சிறப்பு அலுவலர் (ஓய்வு) வித்யாசாகர் கூறியதாவது:
தமிழகத்தில் பிச்சை எடுப்பவர்களில் வெளி மாநிலங்களில் இருந்து இடம்பெயர்ந்து வருபவர்கள்தான் அதிகம் பேர் உள்ளனர். இதுதவிர, குடிசைப் பகுதிகளில் குழந்தைகளை வாடகைக்கு எடுத்து வந்தும், குழந்தைகளை கடத்திச் சென்றும் பிச்சையெடுக்க வைக்கின்றனர். சிறு குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்கள், அந்தக் குழந்தைகள் அழாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தூக்க மருந்து போன்றவற்றை அளிக்கின்றனர். இதனால், குழந்தைகளின் உடல்நலம் பாதிக்கப்படுகிறது.
இவ்வாறு பிச்சையெடுக்கும் குழந்தைகள், கடத்தப்படும் குழந்தைகளை மீட்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 32 மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் பணியிடங்களை தமிழக அரசு அண்மையில் நிரப்பியுள்ளது. அந்த பணியிடங்கள் அனைத்தும் தற்காலிகமாகவே நிரப்பப்பட்டுள்ளன. எனவே, அந்தப் பணிக்கு நிரந்தரமாக அதிகாரிகளை நியமித்து அவர்களுக்கு போதிய பயிற்சியை அரசு அளிக்க வேண்டும்.
மேலும், புகார் வந்தால் மட்டுமே குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கின்றனர். அப்படி இல்லாமல், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அதிகாரிகள் அவ்வப்போது சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். எந்தெந்த பகுதிகளில் இருந்து பிச்சையெடுக்க வருகின்றனர். அவர்களது பிரச்சினைகள் என்ன என்பதைக் கண்டறிந்து, அவர்களின் வாழ்வாதாரத்துக்கான மாற்று வழிகளையும் அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சவாலான பணி
சென்னையில் உள்ள குழந்தைகள் நல குழுமத்தின் (சிடபிள்யூசி) உறுப்பினர் ஷீலா சார்லஸ் மோகன் கூறும்போது, “பிச்சை எடுப்பதில் இருந்து மீட்கப்படும் குழந்தைகள் எங்கள் முன்பு ஆஜர்படுத்தப்படுகின்றனர். அந்தக் குழந்தைகள் குறித்த விவரங்களை சரிபார்ப்பதுதான் எங்களுக்கு சவாலான பணியாக உள்ளது. குழந்தைகளை பிச்சையெடுக்க வைப்பதில் மிகப்பெரிய கும்பல் செயல்படுகிறது. மீட்கப்படும் குழந்தைகளுக்கு அந்த கும்பல் சொந்தம் கொண்டாடும். இருப்பினும், தீவிர விசாரணை நடத்தி உரியவர்களிடம் குழந்தையை ஒப்படைக்கிறோம். பெரும்பாலான குழந்தைகளின் மறுவாழ்வு, கல்விக்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டு வருகிறோம். வெளிமாநில குழந்தைகள் மீட்கப்பட்டால் அந்தந்த மாநில குழந்தைகள் நல குழுமத்திடம் அவர்களை அனுப்பி வைக்கிறோம்’’ என்றார்.
தகவல் தெரிவிக்க வேண்டுகோள்
இந்திய குழந்தைகள் நல கவுன்சில் (ஐசிசிடபிள்யூ), தமிழ்நாடு பிரிவின் துணைத் தலைவர் சந்திரா தணிகாசலம் கூறியதாவது:
சிறார் நீதிச் சட்டம் 2015-ன் கீழ் பிச்சையெடுக்கும் குழந்தைகளை, பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு தேவைப்படும் குழந்தை என அறிவித்து 18 வயது வரை அவர்களுக்கு தேவையான படிப்பு, உணவு, உடை ஆகியவற்றுக்கு அரசு செலவு செய்ய வேண்டும். மீட்கப்படும் குழந்தைகளை பராமரிக்க அரசு, அரசு அங்கீகாரம் பெற்ற இல்லங்கள் தமிழகத்தில் உள்ளன.
பிச்சையெடுக்கும் குழந்தைகளுக்கு நாம் பணம் கொடுப்பதால் அந்தக் குழந்தையின் வாழ்வில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை. ஒருவேளை உணவுக்காக குழந்தைகள் பிச்சை எடுக்கின்றனர் என்பது தவறான கருத்து. அனுதாபத்தின் மூலம் எளிதில் பணம் பெறும் வகையில்தான் குழந்தைகளை பிச்சையெடுக்க பயன்படுத்துகின்றனர்.
எனவே, அவர்களுக்கு பணம் கொடுப்பதற்கு பதில், பிச்சையெடுக்கும் குழந்தைகள், சாலைகளில் பொருட்களை விற்கும் குழந்தைகளைக் கண்டால் ‘1098’ என்ற 24 மணி நேர இலவச தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தகவல் தெரிவிப்பது மட்டுமே பிச்சையெடுக்கும் குழந்தைகளை மீட்டு நிரந்தர மறுவாழ்வு அளிக்க உதவும்.
இவ்வாறு சந்திரா தணிகாசலம் கூறினார்.
தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் (என்சிஆர்பி) தகவலின்படி கடந்த 2014 முதல் 2016-ம் ஆண்டு ஜூன் வரை மட்டும் நாடு முழுவதும் பிச்சையெடுத்தல், பாலியல் தொழில் மற்றும் உடல் உறுப்புகளுக்காக கடத்தப்பட்ட 23,699 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். 2014-ல் 7,670 குழந்தைகளும், 2015-ல் 11,954 குழந்தைகளும், 2016-ல் (ஜூன் வரை) 4,075 குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago