காலை சிற்றுண்டித் திட்டம்: 10 பேரிடம் வாகன சாவி - சமையலறையில் இருந்து வகுப்பறைக்கு உணவு கொண்டு செல்லப்படுவது எப்படி?
சென்னை: முதல்வரின் காலை சிற்றுண்டித் திட்டத்தில் எவ்வித தவறும் நடைபெறாத வகையில் பல்வேறு கண்காணிப்பு வழிமுறைகளை தமிழக அரசு செயல்படுத்தியுள்ளது.
முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான முதல்வரின் காலை சிற்றுண்டித் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் மதுரை நெல்பேட்டையில் உள்ள ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து நாளை (செப்.16) தமிழகம் முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவர்களுக்கு சத்தான காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இந்நிலையில், இந்தத் திட்டத்தில் எந்த தவறும் நடைபெறாத வகையில் பல்வேறு கண்காணிப்பு முறைகளை தமிழக அரசு நடைமுறைபடுத்தியுள்ளது. இதன் முழு விவரம்:
- உணவு தயார் செய்யும் சமையல் கூடம் காலை 5 மணிக்கு திறக்கப்படும்.
- சமையல் கூடம் திறந்தவுடன் சமையல் செய்யும் பணி தொடங்கப்படும்.
- காலை 5 மணி முதல் 7 மணி வரை உணவு தயார் செய்து அனுப்பி வைக்க தயார் நிலையில் இருக்கும்.
- காலை 7 மணி முதல் 8 மணிக்குள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.
- வாகனத்தில் உணவு செல்லும் பகுதியின் சாவி ஓட்டுநர் தவிர்த்து 10 பேரிடம் இருக்கும். உணவு கொண்டு செல்லும்போது ஓட்டுநர்கள் எந்த தவறும் செய்து விடக் கூடாது என்பதால் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- ஒரு வாகனத்தில் 6 பள்ளிகளுக்கான உணவு கொண்டு செல்லப்படும்.
- அந்தப் பள்ளியின் பொறுப்பாளர் உணவு இருக்கும் பகுதியின் கதவை திறந்து உணவை எடுத்துவிட்டு மூடிவிட வேண்டும்.
- இதன்படி 6 பள்ளிகளின் பொறுப்பாளர்களிடம் 6 சாவிகள் இருக்கும்
- மீதம் உள்ள 4 சாவிகள் கண்காணிப்பு அலுவலர் மற்றும் உயர் அதிகாரிகளிடம் இருக்கும்.
- உணவு தயார் செய்ய தொடங்கி நேரம், அனுப்பிய நேரம், பள்ளிகளுக்கு சென்ற நேரம் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் செயலியில் பதிவேற்றம் செய்யப்படும்.
- குழந்தைகள் சாப்பிட்ட பிறகு பாத்திரங்கள் மதியம் 1 மணிக்குள் சமையல் அறைக்கு திரும்பி கொண்டு வரப்படும்.
- அந்த பாத்திரங்களை சுடு தண்ணீரில் தான் சுத்தம் செய்யப்படும்.
- தினசரி சமைக்கும் உணவில் 200 கிராம் தனியாக எடுத்து வைக்கப்படும். உணவால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் பரிசோதனை செய்வதற்கு இந்த உணவு பயன்படுத்தப்படும்.