தி.மலை ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் இல்லை: ரயில்வே பயணியர் வசதிகள் குழுவினர் அதிர்ச்சி

By இரா.தினேஷ்குமார்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு அடிப்படை வசதி இல்லாமல் இருப்பதை பார்த்து, ஆய்வு பணியில் ஈடுபட்ட ரயில்வே பயணியர் வசதிகள் குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு குடிநீர் வசதி இல்லை மற்றும் 2-வது நடைமேடையில் குழாய் மூலம் தண்ணீரும் வழங்காததால், ரயில் பயணிகள் அவதிப்படுவதாக 'இந்து தமிழ் திசை' உங்கள் குரலில் கடந்த 7-ம் தேதி, புகைப்படத்துடன் செய்தி வெளியானது. இதனை தெரிவித்த, விழுப்புரத்தை சேர்ந்த ரயில் பயணி மணிவண்ணன் (திருப்பதி - ராமேசுவரம் விரைவு ரயிலில் கடந்த 3-ம் தேதி பயணித்தவர்), ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உங்கள் குரல் செய்தி மூலமாக கோரிக்கை விடுத்திருந்தார்.

இதன் எதிரொலியாக, ரயில்வே பயணியர் வசதிகள் குழுவின் தலைவர் பி.கே.கிருஷ்ணதாஸ் தலைமையிலான குழுவினர் இன்று (15-ம் தேதி) மதியம் ஆய்வு செய்தனர். டிக்கெட் வழங்குமிடம், வரவேற்பு அறை, பயணிகள் ஓய்வறை ஆகியவற்றை பார்வையிட்டனர். முதலாவது நடைமேடையில் உள்ள தின் பண்டங்கள் விற்பனை கடை, சிற்றுண்டி கடைகளுக்கு சென்ற குழுவினர், அங்கு விற்பனை செய்யப்படும் பொருட்களின் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதியை பரிசோதனை செய்தனர். சிற்றுண்டி கடையில், தரமான உணவு மற்றும் டீ வழங்க அறிவுறுத்தினர்.

இதையடுத்து, ரயில் நிலைய அதிகாரிகளிடம் கழிப்பறை குறித்து குழுத் தலைவர் பி.கே.கிருஷ்ண தாஸ் கேட்டறிந்தார். அப்போது அவர், ''முதலாவது நடைமேடையில் உள்ள இரண்டு கட்டண கழிப்பறைகளில், ஒரு கழிப்பறையை இலவச கழிப்பறைகளாக மாற்ற வேண்டும், சரக்கு ரயில் தளம் அருகே உள்ள கழிப்பறையை இலவசமாக சுமை தூக்கும் தொழிலாளர்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்'' என பரிந்துரை செய்தார். பின்னர், ரயில்வே பாதுகாப்பு படையிடம், பணியில் உள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் இடவசதி குறித்து கேட்டறிந்தார். மேலும், முதலாவது நடைமேடையில் குழாய் ஒன்றில், தண்ணீர் வருகிறதா என ஆய்வு செய்தார். போதிய எண்ணிக்கையில் இருக்கைகள் இல்லாமல் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது.

வீண் செலவு: இதற்கிடையில் குழுவின் உறுப்பினரான மருத்துவர் ஜி.வி.கோபிநாத், ரயில் நிலைய வரவேற்பு கட்டிடத்துக்கும், முதலாவது நடைமேடையில் உள்ள மேற்கூரைக்கு இடையே உள்ள இடைவெளி மூலமாக மழைநீர் கொட்டும் என்பதை சுட்டிக்காட்டி, அதனை அடைக்க வேண்டும் என அறிவுறுத்தினார். மேலும், மழைநீர் வடிகால் வசதிக்காக, கட்டப்படும் கட்டுமான பணிகள் தேவையற்றது, வீண் செலவு என விமர்ச்சித்தவர், இதற்கு மாற்றாக மேற்கூரை வழியாக 6 அங்குல குழாயைப் பொருத்தி, நடைமேடைக்கு மழைநீர் வடியும் வகையில் செயல்படுத்த வேண்டும் என்றார். இதேபோல், இரண்டு நடைமேடைகளிலும், பயணிகளுக்கு போதிய எண்ணிக்கையில் மின்விசிறிகள் இல்லை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவில்லை என சுட்டிக்காட்டினார். எனவே, முதல் மற்றும் இரண்டாவது நடைமேடையில் கூடுதல் எண்ணிக்கையில் மின்விசிறி அமைக்கவும், தனித்தனியாக சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

வந்தார்கள்... சென்றார்கள்: ரயில்வே பயணியர் வசதிகள் குழுவினர், திருவண்ணாமலை முதலாவது நடைமேடையுடன் ஆய்வுப் பணியை முடித்துக் கொண்டனர். அதுவும் முழுமையாக இல்லை. கழிப்பறைகளை பார்வையிடவில்லை. இரண்டாவது நடைமேடையை திரும்பிக் கூட பார்க்காமல், குழுவின் தலைவர் பி.கே.கிருஷ்ண தாஸ் நடையை கட்டினார். மேலும், குழுவினர் ஆய்வு செய்தபோது, பயணிகள் யாருமில்லை. ரயில்கள் வந்து செல்லும் நேரத்தில் ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படாததால், பயணிகளிடம் நேரிடையாக, அவர்களது குறைகளை கேட்கும் சூழல் இல்லாமல் போனது. முன்னறிவிப்பு இல்லாததே, இதற்கு காரணம் என கூறப்படுகிறது. பகல் 12.50 மணியளவில் தொடங்கிய ஆய்வு 1.25 மணிக்கு, குறுகிய நேரத்தில் நிறைவுபெற்றுவிட்டது. வந்தார்கள், சென்றார்கள் என்ற நிலையிலேயே ஆய்வு பணி, முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

44 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்