வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் 21 பேர் குற்றவாளிகள்: போக்சோ நீதிமன்றம் 

By ஆர்.பாலசரவணக்குமார்

சென்னை: வண்ணாரப்பேட்டை சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான எண்ணூர் ஆய்வாளர், பாஜக பிரமுகர் உள்ளிட்ட 21 பேர் குற்றவாளிகள் என அறிவித்துள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு விவரங்களை வரும் 19-ம் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் 15 வயது சிறுமியைப் பாலியல் தொழிலில் ஈடுபட வைத்து, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சிறுமியின் உறுவினர் ஷகிதா பானு, உடந்தையாக இருந்த காவல் ஆய்வாளர் புகழேந்தி, தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் வினோபாஜி, பாஜக பிரமுகர் ராஜேந்திரன், நாகராஜ், மாரீஸ்வரன், பொன்ராஜ், மாநகராட்சி ஒப்பந்த ஊழியரான அஜி(எ) வெங்கட்ராமன், ஸ்ரீபெரும்புதூர் கார்த்திக், திரிபுராவைச் சேர்ந்த தெபாசிஸ் நாமா உள்ளிட்ட 26 பேர் மீது போக்சோ தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த வண்ணாரப்பேட்டை காவல்துறையினர் 21 பேரைக் கடந்த ஆண்டு நவம்பர் 21-ம் தேதி கைது செய்தனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய ஒருவர் இறந்துவிட இரண்டு பெண்கள் உள்பட 4 பேர் தலைமறைவாக உள்ளனர்.
வழக்கின் விசாரணை, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்து வழக்கு தீர்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜலெட்சுமி முன் இன்று விசாரணைக்கு வந்தது. "இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 21 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி, தீர்ப்பு விவரங்கள் வரும் செப்டம்பர் 19-ம் தேதியன்று அறிவிக்கப்படும்" என்று உத்தரவிட்டுள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE