அதிமுக தலைமை அலுவலக மோதல் விவகாரம்: சிபிசிஐடி போலீஸாரிடம் மேலாளர் விளக்கம்

By செய்திப்பிரிவு

சென்னை: அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பாக, அலுவலக மேலாளர் மகாலிங்கம் சிபிசிஐடி போலீஸாரிடம் நேற்று விளக்கம் அளித்தார்.

கடந்த ஜூலை 11-ம் தேதி சென்னையை அடுத்த வானகரத்தில் அதிமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. அதே தினத்தில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பன்னீர்செல்வம், பழனிசாமி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில், இரு தரப்பினரும் கற்கள், கம்புகளால் தாக்கிக் கொண்டனர். இந்த மோதலில் 47 பேர் காயமடைந்தனர்.

பின்னர், அதிமுக அலுவலகத்துக்குள் நுழைந்த ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஆவணங்களை எடுத்துச் சென்றுவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ராயப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், போலீஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து சி.வி.சண்முகம், தான் அளித்த புகார் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் மற்றும் ஆவணங்கள் எடுத்துச் செல்லப்பட்ட வழக்கை தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

இந்நிலையில், அதிமுக அலுவலக மோதல், கலவரம், ஆவணங்கள், சொத்துகள் சூறையாடப்பட்டது தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் பதிவான 4 வழக்குகளையும், சிபிசிஐடி பிரிவு போலீஸாரின் விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். ஆனாலும், போலீஸார் உரிய விசாரணை நடத்தவில்லை என்று இபிஎஸ் தரப்பினர் குற்றம் சாட்டினர்.

இதையடுத்து, இபிஎஸ் ஆதரவாளரான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் மனு தாக்கல் செய்தார். அதில், “அதிமுக அலுவலக கலவரம் மற்றும் அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்குகளை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய பிறகும், விசாரணையைத் தொடங்கவில்லை.

பகல் நேரத்தில் கேமராக்களுக்கு முன்பாகவும், கதவுகளை உடைத்தும் ஆவணங்கள், பொருட்களை எடுத்து சென்ற நபர்களுக்கு எதிராக தெளிவான ஆதாரங்கள் இருந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று குற்றம் சாட்டியிருந்தார்.

இதையடுத்து, சிபிசிஐடி போலீஸார் கடந்த 7-ம் தேதி ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்துக்கு நேரில் சென்று, விசாரணை மேற்கொண்டனர். கலவரத்தின்போது காவல் துறையினரால் எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை அடிப்படையாக கொண்டு, அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், அலுவலகத்தில் என்னென்ன பொருட்கள் சேதப்படுத்தப்பட்டது மற்றும் மாயமான ஆவணங்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. கைரேகை நிபுணர்களும் சென்று, அதிமுக அலுவலகத்தில் பதிவாகி இருந்த தடயங்களைச் சேகரித்தனர். சுமார் 5 மணி நேரத்துக்கு மேலாக ஆய்வு நடைபெற்றது.

இதையடுத்து, விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி அதிமுக தலைமை அலுவலக மேலாளர் மகாலிங்கத்துக்கு போலீஸார் சம்மன் அனுப்பினர். இதன்படி, சென்னை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில், தனது வழக்கறிஞர்களுடன் நேற்று காலை மகாலிங்கம் ஆஜரானார்.

அப்போது, சிபிசிஐடி போலீஸார், அதிமுக தலைமை அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், அவரிடம் பல்வேறு கேள்விகளைக் கேட்டு, விளக்கம் பெற்றனர்.

சுமார் ஒன்றரை மணி நேரத்துக்குப் பிறகு, விசாரணை முடிந்து மகாலிங்கம் வெளியே வந்தார். தேவைப்பட்டால் மீண்டும் விசாரணைக்கு வர வேண்டும் என்று கூறிய போலீஸார், அவரை அனுப்பிவைத்ததாகக் கூறப்படுகிறது.

அடுத்தகட்டமாக, ஓபிஎஸ் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளிடம் சிபிசிஐடி பிரிவு போலீஸார் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்காக அவர்களுக்கும் விரைவில் சம்மன் அனுப்பப்பட உள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE