திருச்சி: திருச்சி மாவட்டத்தில் 8 வருவாய் கிராமங்களில் உள்ள நிலங்கள் முழுமையாக தங்களுக்குச் சொந்தமானவை என வக்பு வாரியம் தெரிவித்துள்ளதால், அந்த நிலங்களின் உரிமையாளர்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள பத்திரப்பதிவுத் துறையைச் சேர்ந்த12 சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு தமிழ்நாடு வக்பு வாரிய தலைமைச் செயல் அலுவலர் ஏ.பி.ரபியுல்லா 11.08.2022 அன்று கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அந்தக் கடிதத்தில் தெரிவித்து உள்ளது: திருச்சி மாவட்டத்தில் உள்ள செம்பங்குளம், பெரியநாயகிசத்திரம், மண்ணச்சநல்லூர், திருச்செந்துறை, சித்தாநத்தம், கோமாகுடி, மணமேடு, பாகனூர் ஆகிய கிராமங்களில் உள்ள அனைத்து நிலங்களும் வக்பு வாரியத்துக்கு சொந்தமானவை. வக்பு வாரியத்தின் தடையின்மை சான்று பெறாமல், இங்குள்ள நிலங்களை விற்பனை செய்யவோ, பரிமாற்றம் செய்யவோ, அடமானம் வைக்கவோ பத்திரப்பதிவுத் துறை அனுமதிக்கக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோன்று திருச்சி மாவட்டத்தில் உள்ள கொட்டப்பட்டு, தென்னூர், கிழக்குறிச்சி, அபிஷேகபுரம், குவளக்குடி, திருமலைசமுத்திரம் (ஓலையூர்), கும்பக்குடி, அரசங்குடி, செங்குளம், சோமரசம்பேட்டை, சிக்கத்தம்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் பகுதியாக சில சர்வே எண்களில் உள்ள நிலங்களும் வக்பு வாரியத்துக்கு சொந்தமானவை என்றும் அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சர்வே எண்களுக்குட்பட்ட நிலங்களை விற்பனை செய்யவோ, அடமானம் வைக்கவோ, பரிமாற்றம் செய்யவோ இயலாத நிலைக்கு நில உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
“திருச்செந்துறை சந்திரசேகரர் சுவாமிகள் கோயில் ஏறத்தாழ 1,300 ஆண்டுகள் பழமையானது. இந்த கிராமத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் என அனைத்து மதத்தினரும் வசித்து வருகிறோம். எங்கள் மூதாதையர் காலத்து பூர்வீக சொத்துகளை தான் பரம்பரையாக அனுபவித்து வருகிறோம்.
இந்நிலையில், இந்த கிராமமே வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என்பதை எப்படி ஏற்றுக்கொள்வது?” என்கின்றனர் திருச்செந்துறை கிராம மக்கள்.
மேலும், ஒரு கிராமத்தில் ஓரிரு சர்வே எண்கள் வேண்டுமானால், வக்பு வாரியத்துக்கு சொந்தமானதாக இருக்கலாம், ஆனால், முழு கிராமமே எப்படி வக்பு வாரியத்துக்கு சொந்தமானதாக இருக்க முடியும் என்ற கேள்வியையும் அவர்கள் எழுப்புகின்றனர்.
இதுதொடர்பாக, வக்பு வாரிய அதிகாரிகளிடம் கேட்டபோது, “முன்பு இப்பகுதியை ஆட்சி செய்த ராணி மங்கம்மாள், பாண்டிய மன்னர்கள் மற்றும் குறுநில மன்னர்கள் இந்த நிலங்களை முஸ்லிம்களுக்கு இனாமாக தந்துள்ளனர். அதற்குரிய செப்புப் பட்டயங்கள் உள்ளன.
இதுகுறித்து 1954-ம் ஆண்டில் இந்திய அரசு, அதிகாரிகளைக் கொண்டு ஆய்வு செய்து அறிக்கை அளித்துள்ளது. அதில், குறிப்பிட்டுள்ள வக்பு வாரியத்துக்குரிய நிலங்களின் பட்டியல் தான் பதிவுத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வக்பு வாரிய சொத்துகளை மீட்க வேண்டும் என்ற அடிப்படையில், தமிழகம் முழுவதும் அனைத்து சார் பதிவாளர் அலுவலகங்களுக்கும் இதேபோன்ற கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என்றனர்.
இதற்கு என்ன தான் தீர்வு எனக் கேட்டதற்கு, “பல ஆண்டுகளாக இந்த நிலத்தை அனுபவித்து வரும் நில உரிமையாளர்கள் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து, சொத்துரிமையை தங்கள் பெயருக்கு மாற்றிக் கொள்ள கோரலாம்” என்றனர்.
“இந்தக் கடிதம் வக்பு வாரியத்தில் இருந்து நேரடியாக சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டது தவறு. பத்திரப்பதிவுத் துறை தலைவர் மூலமாகதான் இவை அனுப்பப்பட வேண்டும்” என்கின்றனர் பதிவுத் துறையைச் சேர்ந்த அலுவலர்கள்.
ஒரு ஏக்கர், இரண்டு ஏக்கர் நிலம் வைத்துள்ள ஒரு ஏழை விவசாயி, கூலித் தொழிலாளர்கள் தங்களது நிலத்துக்கான உரிமையை நிலைநாட்ட நீதிமன்றத்தை அணுகிதான் தீர்வு பெற வேண்டும் என்றால், அது அவர்களுக்கு பொருட்செலவு, கால விரயத்தையும் ஏற்படுத்தும்.
தங்களது உடனடி தேவைக்குக் கூட, தன் பெயரில் உள்ள சொத்தை விற்பனை செய்ய இயலாத நிலைக்கு இந்த பகுதியில் உள்ள மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு, உரிய தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டுள்ள கிராம மக்களின் கோரிக்கை.
இந்நிலையில், திருச்செந்துறை சிவன் கோயிலுக்கு நேற்று வந்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா, செய்தியாளர்களிடம் கூறியது:
திருச்செந்துறை கிராமம் முழுவதும் வக்பு வாரியத்துக்கு சொந்தம் என அதன் தலைமைச் செயல் அலுவலர் அறிவித்திருப்பது சட்டவிரோதம். திருச்செந்துறை, திருவெறும்பூர், ரங்கம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சொத்துகளை வக்பு வாரியம் அபகரிக்கப் பார்க்கிறது. இத்தகைய செயலில் ஈடுபடும் வக்பு வாரிய தலைமைச் செயல் அலுவலரை உடனடியாக கைது செய்ய வேண்டும்.
இங்கு உள்ள சந்திரசேகர சுவாமி கோயில், 9-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதை வக்பு வாரியம் உரிமை கொண்டாடுவது எப்படி? இந்த விவகாரத்தில் இப்பகுதிகளில் வசிக்கும் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.
இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான கோயில்கள், அதன் நிலங்கள் குறித்து சட்டப்பேரவையில் துறையின் அமைச்சர் சேகர்பாபு, ஒரு பட்டியலை வாசித்தார்.
அந்த பட்டியலின் அடிப்படையில், கோயில்களுக்குச் சொந்தமான சொத்து விவரங்களை முழுமையாக சேகரித்து, சம்பந்தப்பட்ட சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு முறையாக அனுப்பி வைத்து, அந்தஇடங்களில் யாரும் பிரவேசித்தால், அது சட்ட விரோதமானது என்று குறிப்பிட வேண்டும் என்றார்
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago