முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனுடன் ஓ.பன்னீர்செல்வம் சந்திப்பு

By செய்திப்பிரிவு

முன்னாள் அமைச்சர் பண்ருட்டிராமச்சந்திரனை அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று நேரில் சந்தித்தார்.

அதிமுகவில் ஒற்றைத் தலைமை சர்ச்சை எழுந்த நிலையில், பழனிசாமி தரப்பில் கடந்த ஜூலை 11-ம் தேதி நடத்திய பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கட்சியின் பொருளாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும், கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பான வழக்கில், அந்த பொதுக்குழு செல்லும் என உயர் நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதனிடையே அதிமுக தலைமை அலுவலக சாவியைபழனிசாமியிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக ஓபிஎஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அதில், பழனிசாமியிடம் தலைமை அலுவலக சாவியை ஒப்படைத்தது செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. எல்லா வகையிலும் பழனிசாமியின் கை ஓங்கி வரும் நிலையில், ஓபிஎஸ், கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார்.

அதன் ஒரு பகுதியாக எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருடன் பணியாற்றிய மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான பண்ருட்டி ராமச்சந்திரனை, சென்னை அசோக் நகரில் உள்ள அவரது இல்லத்தில் ஓபிஎஸ் நேற்று நேரில் சந்தித்தார்.

அப்போது அதிமுக விதிகள், கட்சியை கைப்பற்றுவதற்கான வியூகங்கள் உள்ளிட்டவை குறித்து ஓபிஎஸ் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

கடந்த ஒன்றரை மாதத்துக்கு முன்பு சசிகலாவும் பண்ருட்டி ராமச்சந்திரனை சந்தித்துவிட்டு சென்றது குறிப்பிடத்தக்கது. இந்த சந்திப்பின்போது முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE