சென்னை: ராகுல் காந்தி பயணம் மக்களை ஒன்றுபடுத்துகிறது; பாஜகவோ திசைதிருப்புகிற அரசியலை செய்கிறது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''கடந்த 8 ஆண்டுகளாக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை பலமுனைகளில் பாதிக்கிற வகையில் செயல்பட்டு வருகிற மத்திய பாஜக ஆட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்து வருவதையே தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணத்திற்கான ஆதரவு வெளிப்படுத்துகிறது. இந்த பயணத்தில் நாளுக்கு நாள் மக்களின் பேராதரவு பெருகி வருகிறது. நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, பொருளாதார பேரழிவுகள் என தொடர்ந்து மக்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 7 மாதங்களில் ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 6 சதவிகிதத்தை விட சில்லறை பணவீக்கம் அதிகமாக உள்ளது. உணவு, காய்கறிகள் மற்றும் எரிபொருள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் நடுத்தர மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர் பாதிக்கப்பட்டுள்ளனர். எரிபொருள் விலையைப் பொறுத்தவரை ஆரம்பத்திலிருந்தே தவறான கொள்கையை மத்திய அரசு பின்பற்றி வருகிறது. கச்சா எண்ணெய் விலை கடந்த 7 மாதங்களாக சரிவைச் சந்தித்து வருகிறது. ஆனால், சர்வதேச விலைக்கேற்ப பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை குறைக்கப்படவில்லை. ஆனால், நுகர்வோருக்கு அதன் பலன் கிடைக்கவில்லை. குறிப்பாக கடந்த மூன்று மாதங்களில் சர்வதேசச் சந்தையில் சமையல் எரிவாயு விலை 13.33 சதவிகிதம் குறைந்துள்ளது. இதன் அடிப்படையில் மத்திய பாஜக அரசுக்கு சில கேள்விகளை எழுப்ப விரும்புகிறோம்.
கடந்த 7 மாதங்களாக கச்சா எண்ணெய் விலை குறைவாக இருந்தும், பணவீக்கம் 6 சதவிகிதமாக இருந்தும் எரிபொருளுக்கான அதிக விலையை நுகர்வோர் ஏன் அதிகமாகக் கொடுக்க வேண்டும்? கச்சா எண்ணெய் விலை குறையும் போது எரிபொருள் விலையைக் குறைத்து நுகர்வோருக்கு நிவாரணம் கிடைக்க வழி ஏற்படுத்தாதது ஏன்? பெட்ரோல் மற்றும் டீசல் விலை தேர்தலுக்காக மட்டும் மாற்றி அமைக்கப்படுகிறதா? அல்லது சர்வதேசச் சந்தை விலையின்படி மாற்றியமைக்கப்படுகிறதா? எனவே, பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் லிட்டருக்கு ரூபாய் 15, எரிவாயு சிலிண்டர் விலையில் ரூபாய் 150 குறைத்து, நாட்டிலுள்ள நடுத்தர வருவாய் பிரிவு மற்றும் குறைந்த வருவாய் பிரிவினர் ஆகியோருக்கு உடனே நிவாரணம் பெறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
2014-ஆம் ஆண்டு மே மாதம் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை பீப்பாய் ஒன்றிற்கு 106 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 71 ஆகவும், டீசல் விலை ரூபாய் 55 ஆகவும் இருந்தது. அப்போது விலை குறைப்பு எப்படி நிகழ்ந்தது? ஆனால், இப்போது கச்சா எண்ணெய் விலை சர்வதேசச் சந்தையில் 88 டாலராக இருக்கிற போது பெட்ரோல் விலை ரூபாய் 102.63, டீசல் விலை ரூபாய் 94.24, சமையல் எரிவாயு விலை ரூபாய் 1068.50 உயர்ந்திருப்பது ஏன்? இதன்மூலம் சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் எரிபொருள் விலையைக் குறைத்து மக்களின் சுமையைக் குறைக்க விரும்பாத மக்கள் விரோத அரசாக பாஜக செயல்படுகிறது.
இதற்கு என்ன காரணம் என்றால் கடந்த 8 ஆண்டுகளில் எரிபொருட்கள் மீது கலால் வரியாக 77 லட்சம் கோடி ரூபாய் வசூலித்து மத்திய அரசு கஜானாவை நிரப்பிக் கொண்டிருக்கிறது. மக்கள் நலனில் கடுகளவும் அக்கறை இல்லாத பல நடவடிக்கைகளின் காரணமாகத் தான் பொருளாதாரப் பேரழிவு ஏற்பட்டு மக்கள் கடும் துன்பத்தை அனுபவித்து வருகிறார்கள். 20 வயதிற்குள்ளான இளைஞர்களின் வேலையின்மை 8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் 42 சதவிகிதம் இளைஞர்கள் வேலையின்றி இருக்கிறார்கள். இந்திய ஒற்றுமை பயணம் குறித்து குற்றம்சாட்டுபவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். இதுகுறித்து கேள்வி எழுப்புபவர்கள் மகாத்மா காந்தியை படுகொலை செய்தவர்கள். நாதுராம் கோட்சேவின் கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் தான் இத்தகைய கேள்விகளைக் கேட்கிறார்கள்.
சுதந்திரத்திற்குப் பிறகு 52 ஆண்டுகளாக மூவர்ண தேசியக் கொடியை ஏற்றாதவர்கள் தான் இந்த கேள்வியை எழுப்புகிறார்கள். எம்.எம். கல்புர்கி, பன்சாரே, கவுரி லங்கேஷ் கொலைகளில் தொடர்புடையவர்கள் தான் இந்த கேள்வியைக் கேட்கிறார்கள். தலைவர் ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை பயணம் பிளவுபட்ட மக்களை ஒன்றுபடுத்துகிறது. மக்களோடு மக்களாகப் பயணிக்கிறார். மக்கள் துன்பத்தை நேரிடையாக அறிகிறார். அவர் எழுப்புகிற கேள்விகளுக்குப் பதில் கூற தயாராக இல்லாத பாஜக, திசைதிருப்புகிற அரசியலைச் செய்கிறது. ஆனால், அதில் பாஜக வெற்றி பெற முடியாது.
தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டிருக்கிற இந்திய ஒற்றுமை பயணத்திற்குப் பின்னாலே கன்னியாகுமரியில் தொடங்கி இந்திய மக்கள் பேராதரவு வழங்கி ஆதரித்து வருகிறார்கள். மக்கள் எழுச்சியை சகித்துக் கொள்ளாத பாஜகவுக்கு வீழ்ச்சி தொடங்கி விட்டது. ராகுல் காந்தியின் 100 கி.மீ. பயணத்திலேயே பாஜகவின் ஆட்சி ஆட்டம் காண ஆரம்பித்துவிட்டது. இதுவே தலைவர் ராகுல் காந்திக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியின் தொடக்கமாகும்'' என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago