20,000+ ச.மீ அடுக்குமாடி குடியிருப்புகளின் கழிவு மேலாண்மைக்குப் பின்பற்ற வேண்டியவை: அதிரடி உத்தரவு விவரம்
சென்னை: 20,000 சதுர மீட்டர் பரப்பளவுக்கு மேல் உள்ள குடியிருப்புகளில் கழிவு மேலாண்மை தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிற்கு மேல் கட்டப்படும் அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள் (IT Parks) மற்றும் வணிக வளாகங்கள் கழிவு நீர், திடக் கழிவு மேலாண்மை உள்ளிட்டவற்றைப் பின்பற்றுவது தொடர்பாக தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. இந்த விவரம்:
- 20 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவிற்கு மேல் கட்டப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில்நுட்ப பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்கள் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981-ன் கீழ் வாரியத்திடம் இயக்குவதற்கான இசைவாணை (Consent to Operate) பெற்றிருக்க வேண்டும்.
- ஏற்கெனவே வாரிய இசைவாணை பெற்று இருப்பின் அது புதுப்பிக்கப்பட்டு செல்லத்தக்கதாக இருக்க வேண்டும். 20,000 சதுர மீட்டர் பரப்பளவிற்கு கீழ் உள்ள கட்டடங்களில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டிருப்பின், அவர்களும் தமிழ் நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திடம் இசைவாணை பெறவேண்டும். இக்கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் வாரியத்தால் கண்காணிக்கப்படும்.
- அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி முடிக்கப்பட்டு, குடியிருப்போர் நல சங்கத்திடம் ஒப்படைக்கப் பெற்று இருப்பின், அக்குடியிருப்போர் நல சங்கங்கள் வாரியத்திடம் விண்ணப்பித்து இசைவாணை பெற வேண்டும்.
- கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் சரிவர பராமரிக்கப்பட்டு தொடர்ந்து திறம்பட இயக்கப்பட வேண்டும். கழிவுநீர் வாரியம் நிர்ணயத்த தர அளவிற்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு மறுசுழற்சி செய்யவும், மரங்கள் வளர்ப்பதற்கும் பயன்படுத்த வேண்டும்.
- சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரின் தன்மையை தொடர்ந்து கண்காணிக்கும் வண்ணம் தொடர் கண்காணிப்பு கருவி (Online Continuous Effluent Monitoring System – OCEMS) பொருத்தப்பட்டு மத்திய மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் நீர் தர கண்காணிப்பு மையத்துடன் இணைக்கப்பட வேண்டும்.
- திடக்கழிவுகள் சரிவர சேகரித்து திடக்கழிவு மேலாண்மை விதிகள் – 2016 ன் படி மேலாண்மை செய்யப்பட வேண்டும்.
- தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.
- இவற்றை கண்காணிக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் முன்னறிவிப்பு இன்றி திடீர் ஆய்வு மேற்கொள்ளும்.
- விதிகளை மீறி செயல்படுவது கண்டறியப்பட்டால் அவற்றை மூடுவதற்கும், மின் இணைப்பினை துண்டிப்பதற்கும் மற்றும் சீல் வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
- இதன் உரிமையாளர்கள் மீது சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை விதிக்கப்படுவதுடன், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும்.
- சுத்திகரிக்கப்படாத கழிவுநீரினை டேங்கர் லாரிகள் மூலம் எடுத்துச் சென்று சாலையோரங்கள், கால்வாய்கள், நீர் நிலைகளில் வெளியேற்றப்படுவது கண்டறியப்படின், அவ்வாகனங்கள் பறிமுதல் செய்வதுடன் வழக்கு பதிவு செய்யப்பட்டு மேல்நடவடிக்கை எடுக்கப்படும்