உள்ளாட்சி 28: இந்தியர்கள் நாடற்றவர்களா? இல்லை, நாதியற்றவர்களா?

By டி.எல்.சஞ்சீவி குமார்

ஓர் அரசு பஞ்சாயத்து ராஜ்ஜியத்தை எப்படியெல்லாம் அமல்படுத்த முடியும்? நான்கு வகைகளில் முடியும்.

1. அரசியல் சாசன சட்டத்திலேயே கொண்டுவருவது. வாபஸ் வாங்கவே இயலாதபடியான வாசகங்களுடன் இதனை இயற்ற வேண்டும். உதாரணம்: இந்திய சுதந்திரத்துக்காக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட அரசியல் சாசனம்.

2. மாநிலங்களின் அரசியல் சாசன சட்டத்தில் புகுத்துவது. சட்டமன்றம் மூலம் நிறைவேற்றலாம்.

3. மத்திய அரசு தனிச் சட்டம் இயற்றுவது. நாடாளுமன்றம் மூலம் செய்யலாம்.

4. மத்திய, மாநில அரசுகள் அரசாணை பிறப்பித்து உள்ளாட்சிகளை உருவாக்குவது. இந்த நான்கு முறைகளிலேயே அரசியல் சாசன சட்டத்திலேயே கொண்டுவருவதுதான் பாதுகாப்பானதாக அமையும்.

ஆனால், என்ன செய்தார் நேரு?

மேற்கண்ட நான்கையும் அவர் செய்யவில்லை. 1952 சமூக மேம்பாட்டுத் திட்டம் மற்றும் 1957-ல் அமைக்கப்பட்ட பல்வந்தராய் மேத்தா குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் பஞ்சாயத்து ராஜ்ஜியத்தை அவர் ஒரு திட்டமாக நடைமுறைப்படுத்தினார். இதை அவரது தவறு என்று சொல்லக் கூடாது. ‘மாற்றுத் தரப்பினருக்கு அளித்த மரியாதை’ என்றே கருத வேண்டும். அம்பேத் கரின் தரப்பு நியாயங்களை மதித்தார். பட்டியல் இனத்தவரை பஞ்சாயத்து ராஜ்ஜியம் பலவீனமாக்கிவிடக் கூடாது என்று பயந்தார். இதை எல்லாவற்றையும்விட நேரு அரசியல் வாதிகளை நம்பினார். அடுத்த தலைமுறையை நம்பினார். மக்கள் பிரதிநிதிகளை நம்பினார். மக்களை நம்பினார். நேரு உயிருடன் இருந்தவரை பஞ்சாயத்து ராஜ்ஜியங்களை உயிர்ப்புடன் பார்த்துக்கொண்டார். பஞ்சாயத்து ராஜ்ஜியத்தின் மீது நேருவுக்கு உணர்வுபூர்வமான ஒரு பந்தம் இருந்தது. காந்திக்கும் நேருவுக்கும் இருந்த உறவின் உணர்வு அது. பஞ்சாயத்து ராஜ்ஜியத்தை அவர் ‘பாபுஜி’யாகவே பாவித்தார்.

நேருவின் காலத்தில்தான் 1962-ல் உத்தரப்பிரதேச ஜில்லா பரிசத் சட்டம் கொண்டுவரப்பட்டது. 1964-ம் ஆண்டு நேரு மறைந்தார். அப்போது தொடங்கி 1977-க்குள் இந்தியாவின் முதல் தலைமுறை பஞ்சாயத்து ராஜ்ஜியம் முற்றிலுமாக அழிந்துபோனது.

அதன் பின்பு 1977-ல் மொரார்ஜி தேசாய் பிரதமரானபோது பஞ்சாயத்துகள் மீள் உருவாக்கத்துக்கான பணிகள் தொடங்கின. அந்த ஆண்டு பழங்குடியின மக்கள் வசிக்கும் இடங்களில் பழங்குடியினர் துணைத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அசோக் மேத்தா குழு அமைக்கப்பட்டது. 1978-ல் அந்தக் குழு தனது பரிந்துரைகளை சமர்ப்பித்தது. இந்தக் காலகட்டத்தில் இடதுசாரிகள் மற்றும் சோஷலிசக் கட்சிகள் பஞ்சாயத்து ராஜ்ஜியத்துக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கின. மேற்கு வங்கத்தில் அரசியல் கட்சிகள் சார்ந்த பஞ்சாயத்துத் தலைவர்கள் கூட்டம் நடந்தது. மேற்கு வங்கம், கர்நாடகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அரசியல் கட்சிகள் அடிப்படையில் பஞ்சாயத்துத் தேர்தல்கள் நடந்தன. இரண்டாம் தலைமுறை பஞ்சாயத்து அமைப்புகள் தோன்றின. அதே ஆண்டில் சமூக நீதி மற்றும் கிழக்கிந்திய மாநிலத் தேர்தல்கள் பற்றி ஆராய ஜுனாபாய் தாஜ் குழு அமைக்கப்பட்டது. 1983-ல் மேற்கு வங்கத்தைப் பின்பற்றி கர்நாடகமும், 1985-ல் ஆந்திரமும் பஞ்சாயத்து ராஜ்ஜியம் சட்டத்தை நிறைவேற்றின.

1984-ம் ஆண்டு பிரதமராகிறார் ராஜீவ் காந்தி. முதல் வேலையாக பஞ்சாயத்து ராஜ்ஜியத்தை கையில் எடுத்தார். பஞ்சாயத்து ராஜ்ஜியத்தைக் கட்டியமைக்க நேரு கடைபிடித்த முறையைக் கடைபிடிக்க விரும்ப வில்லை ராஜீவ் காந்தி. அது நீடித்தும் நிலையானதாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பினார். அன்றைய காலகட்டத்தில் ஜனநாயகத்தையும் அதிகாரத்தையும் பரவலாக்கியிருந்த சுவிட்சர்லாந்து, நெதர் லாந்து, நார்வே, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளின் பஞ்சாயத்து ராஜ்ஜியங்களை ஆய்வுசெய்தார் ராஜீவ். உலக நாடுகள் எப்படி எல்லாம் உள்ளாட்சியை அமல்படுத்தி யிருக்கின்றன என்று பார்த்தார். நாடு முழுவதும் கிராமங்களில் சுற்றித் திரிந்தார். அரசியல்வாதிகள், அனைத்து கட்சித் தலை வர்கள், மக்கள் பிரதிநிதிகள், பத்திரிகை யாளர்கள், மக்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துக்களைக் கேட்டார். பஞ்சாயத்து ராஜ்ஜியம் அமல்படுத்தப்பட்டிருந்த சில மாநிலங்களில் சென்று ஆய்வுசெய்தார். நாடு முழுவதும் சுற்றியபோது அவருக்கு ஒன்று தெளிவாகப் புரிந்தது.

மக்களுக்கு தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்துத் தர அருகில் ஓர் ஆள் இல்லை. எல்லாவற்றுக்குமே சட்டமன்றப் பிரதிநிதியையும் நாடாளுமன்றப் பிரதிநிதியையுமே எதிர்பார்க்க வேண்டியி ருந்தது. அவர்களோ, கட்சிகளில் கட்டுண்டுக் கிடந்தார்கள். கட்சிகளைத் தாண்டி அவர்களால் மக்களுக்கு எதுவும் செய்ய இயலவில்லை. கடைக்கோடி கிராமங்கள் வரை தலைநகரங்களை எதிர்பார்க்க வேண்டியிருந்தது. மாநில அரசும், மத்திய அரசும் மனது வைத்தால்தான் மக்கள் பிழைக்க வேண்டும் என்கிற நிலைமை இருந்தது. அவை மக்கள் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்காக வெறும் திட்டங்ளைத் தீட்டித் தள்ளின. நிர்வாகம் செய்ய அதிகாரிகள், அரசு அலுவலர்கள் அதிகரித்தார்கள். அரசு கட்டிடங்கள் அதிகரித்தன. கோப்புகள் குவிந்தன. ஊழல் உருவாகத் தொடங்கியது. உச்சியில் தொடங்கி கடைநிலை வரை ஊடுருவியது ஊழல். நாட்டை கறையான் கணக்காக அரித்தது ஊழல். மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் இவை எல்லாம் மிகப் பெரிய சுமையாக மாறியது. பாரம் தாளாமல் வண்டிகள் தள்ளாட ஆரம்பித்தன.

மொத்த சுமையும் மக்கள் மீது இறங்கியது. கலங்கிப்போனான் கடைநிலை மனிதன். ஜனநாயகம் என்பது தேர்தல் நடத்துவது மட்டுமே என்றானது. ஓட்டு இயந்திரங்கள் அறிமுகமாயின. இயந்திரங்களுடன் இயந் திரங்களாக வாக்குக் கணக்கில் வரவு வைக்கப்பட்டார்கள் மக்கள். அவர்கள் வாக்கா ளர்களாக மட்டுமே இருந்தார்கள். அவர்கள் மனுதாரர்களாக மட்டுமே இருந்தார்கள். அவர்கள் பயனாளிகளாக மட்டுமே இருந்தார்கள். அவர்கள் கரங்கள் எதையோ வேண்டி தாழ்ந்திருந்தன. அரசாங்கங்களின் கரங்கள் அட்சயப் பாத்திரத்தைப் போல உயர்ந்திருந்தன. அட்சயப் பாத்திரத்தில் இருந்து வழிந்தது பிச்சை. உயிர் பிச்சை. உணவு பிச்சை. உடுப்புப் பிச்சை. இருப்பிடப் பிச்சை. தண்ணீர் பிச்சை. உணர்வு பிச்சை!

இதுவா ஜனநாயகம்? யாசிப்பதா ஜனநாயகம்? கூண்டில் அடைத்து வைத்து மூன்றுவேளையும் உணவிடுவதா ஜனநாயகம்? எளிய மக்களை சுரண்டுவதா ஜனநாயகம்? வசதியானவர்களுக்கு மட்டுமானதா ஜனநாயகம்? தேர்தல் மட்டுமா ஜனநாயகம்? நாடாளுமன்றம் மட்டுமா ஜனநாயகம்? சட்டமன்றம் மட்டுமா ஜனநாயகம்?

ஜனநாயகம் என்பது ஒரு கலாச்சாரம் அல்லவா. ஜனநாயகம் என்பது ஒருவரை ஒருவர் மதிப்பது அல்லவா. ஜனநாயகம் என்பது மாற்றுக் கருத்துகளுக்கு இடம் அளிப்பது அல்லவா. எல்லாவற்றுக்கும் மேலாக ஜனநாயகம் என்பது மக்களை சுய மரியாதைக் கொண்டவர்களாக நடத்துவது இல்லையா. உண்மையான ஜனநாயகம் தமது சொந்த மக்களை பிச்சைக்காரர்களாக ஆக்காது. நாடு இல்லாத அகதிகளுக்குதான் இலவசங்களும் சலுகைகளும். இந்தியர்கள் என்ன நாடற்றவர்களா? அல்லது நாதியற்றவர்களா? இல்லையே!

ராஜீவ் காந்திக்கு உண்மை உறைத்தது. தீர்வு தேடி நாடெங்கும் ஆயிரத்தெட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டன. உலகெங்கும் சுற்றி வந்தார் ராஜீவ். கடைசியில் அவர் வந்து நின்ற இடம்... காந்தியம்!

ராஜீவ் இந்திய சமூகத்தை நோக்கி ஒரு கேள்வியைக் கேட்டார். உலகமே உற்று நோக்கிய கேள்வி அது. “சுமார் 100 கோடி மக்களை எப்படி 5,700 மக்கள் பிரதிநிதிகள் கவனித்துக்கொள்ள முடியும்?”

- பயணம் தொடரும்...

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

6 mins ago

தமிழகம்

9 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

10 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்