விருதுநகரில் செப்.15-ம் தேதி திமுக முப்பெரும் விழா - தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: விருதுநகரில் செப்.15-ம் தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் பங்கேற்க வரும்படி தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து தொண்டர்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

சிறப்புமிக்க செப்டம்பர் மாதம்: செப்டம்பர் மாதம் பிறந்தாலே தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் சிலிர்ப்பும், புத்துணர்ச்சியும் வந்துவிடும். இது நமக்கான மாதம். தந்தை பெரியார் பிறந்ததும், பேரறிஞர் அண்ணா பிறந்ததும் செப்டம்பர் மாதம்தான். திமுக பிறந்த மாதமும் செப்டம்பர் தான். அதனால், செப்டம்பர் என்பது திராவிட இயக்கத்தின் தனிச் சொந்த மாதம்.

ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் இயங்கி வந்த திமுக அலுவலகத்தை, அப்போதைய ஆட்சியாளர்கள் அகற்றிய பின், அண்ணா சாலையில் அறிவாலயம் திறக்கப்பட்டதும் 1987 செப்டம்பர் 16-ம் தேதியாகும்.

திமுகவைக் காக்க தங்களை அர்ப்பணித்த மூத்த முன்னோடிகளைப் போற்றும் வகையில், முப்பெரும் விழாவில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோர் பெயர்களில் விருதுகள் வழங்கும் நிகழ்வை கருணாநிதியே தொடங்கி வைத்து, அவற்றை வழங்கி வந்தார்.

விழா ஏற்பாடுகள் தீவிரம்: அதன் தொடர்ச்சியாக, பாவேந்தர் பாரதிதாசன், பேராசிரியர் அன்பழகன் பெயரிலும் விருதுகள் வழங்கப்படுகின்றன. சிறப்புமிக்க முப்பெரும் விழா இந்தாண்டு செப்.15-ம் தேதி விருதுநகரில் நடைபெறுகிறது.

இவ்விழாவுக்கான ஏற்பாடுகளை, மருதிருவர் போல், அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரனும், தங்கம் தென்னரசும் இரவுபகல் பாராமல் மேற்கொண்டு வருகின்றனர். நானும் நேரில் பார்வையிட்டு ஆலோசனைகளை வழங்கியுள்ளேன். முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற உங்களில் ஒருவனாக நான் அழைக்கிறேன்.

செப்.15-ம் தேதி அண்ணா பிறந்தநாள். அதை மனதில் கொண்டு அரசு தொடக்கப் பள்ளிகளில் காலைச் சிற்றுண்டி வழங்கும் புதிய திட்டம் தொடங்கப்படுகிறது. நீதிக் கட்சியின் நீட்சியாக திமுகவின் திராவிட மாடல் அரசு, சிற்றுண்டி திட்டத்தை தொடங்குகிறது.

முன்னோடிகளுக்கு விருதுகள்: முப்பெரும் விழாவில், மிசா காலத்தில் தன் கணவரை சிறையில் அடைத்தபோதும், கலங்காமல் கழகம் காக்கும் பணியில் ஈடுபட்ட சம்பூர்ணம் சாமிநாதனுக்கு பெரியார் விருதும், பதவி பொறுப்புகளைவிட கழகக் கொள்கைவழிப் பயணமே லட்சிய வாழ்வின் அடையாளம் எனச் செயலாற்றும் கோவை இரா.மோகனுக்கு அண்ணா விருதும், கருணாநிதியின் கண்ணசைவுக்கேற்பக் களமிறங்கி அயராது கழகப் பணியாற்றிவரும் பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருதும் வழங்கப்படுகிறது.

அதுபோல், புதுச்சேரியில் கட்சியை வளர்ப்பதில் பெரும்பங்காற்றிய சி.பி.திருநாவுக்கரசுவுக்கு பாவேந்தர் விருதும், கழகமே உயிர்மூச்சென வாழும் உடன்பிறப்புகளில் ஒருவரும், தலைமையின் கட்டளையை நிறைவேற்றுவதில் துடிப்புடன் செயலாற்றியவருமான குன்னூர் சீனிவாசனுக்கு பேராசிரியர் விருதும் வழங்கப்பட உள்ளது.

இந்த விழாவில், நாட்டுக்கே வழிகாட்டும் வகையில் ஆட்சியியல் இலக்கணத்தைப் படைத்துள்ள ‘திராவிட மாடல்’ அரசு பற்றிய எனது எண்ண ஓட்டங்கள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட உள்ளது. முரசொலியில் கருணாநிதி எழுதிக்குவித்த கடிதங்களின் 54 தொகுதிகள் வெளியிடப்பட உள்ளன. நெருக்கடிகளிலும் சோதனைகளிலும் கழகத்தைக் கட்டிக் காத்த கருணாநிதியின் அன்பு உடன் பிறப்புகளை, உங்களில் ஒருவனாக அன்புடன் அழைக்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE