அரசு கலைக் கல்லூரிகளில் 70% ஆசிரியர் பணியிடம் காலி: கல்வித்தரம் எப்படி உயரும்? -  ராமதாஸ் கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: அரசு கலைக்கல்லூரிகளில் 70% ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ள நிலையில் கல்வித்தரம் எப்படி உயரும்? என்ற பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இவ்வளவு காலிப் பணியிடங்களை வைத்துக் கொண்டு மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க முடியாது என்பதை அறிந்திருந்தும் உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது வருத்தமளிக்கிறது.

தமிழகத்தில் நேரடியாக 163 கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து அரசின் கட்டுப்பாட்டிற்கு மாற்றப்பட்ட 41 கல்லூரிகள் என மொத்தம் 204 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் தொடக்கம் முதலே அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் 163 கல்லூரிகளில் மட்டும் 5 லட்சத்திற்கும் கூடுதலான மாணவர்கள் பயின்று வருகின்றனர். நடப்பாண்டில் முதலாமாண்டில் மட்டும் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்களை சேர்க்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இந்த கல்லூரிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களின் எண்ணிக்கை 10,079 ஆகும். இவற்றில் சுமார் 7,000 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இது ஒப்புதல் அளிக்கப்பட்ட ஆசிரியர் பணியிடங்களில் ஏறத்தாழ 70 விழுக்காடு ஆகும்.

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த பல ஆண்டுகளாகவே மாணவர் சேர்க்கை அனுமதிக்கப்பட்டதை விட 20-25% அதிகமாக நடத்தப்படுகிறது. கூடுதலாக மாணவர்கள் சேர்க்கப்படும் நிலையில், அதற்கு இணையாக கூடுதல் ஆசிரியர்களும் நியமிக்கப்பட வேண்டும். ஆனால், ஒப்புதல் அளிக்கப்பட்ட உதவிப் பேராசிரியர் பணியிடங்களிலேயே கிட்டத்தட்ட 70% இடங்கள் காலியாக இருக்கும் போது, அரசு கலைக் கல்லூரிகளின் மாணவர்களுக்கு தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?

அரசு கல்லூரிகளில் நிலைமையை சமாளிப்பதற்காக 4,084 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப் பட்டுள்ளனர். ஆனால், மிகக்குறைந்த ஊதியத்தில் பணியாற்றி வரும் அவர்களை மட்டும் கொண்டு அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க முடியாது. உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரந்தரமாக நிரப்பப்பட்டால் மட்டும் தான் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்க முடியும். ஆனால், அதற்காக நடவடிக்கைகள் கடந்த 10 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படவே இல்லை.

2006-2011 திமுக ஆட்சிக்காலத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 3500 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதற்கு பிறகு வந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் 28.05.2013-ஆம் தேதியிட்ட அறிவிக்கையின்படி 1093 உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அதன்பின் 10 ஆண்டுகள் ஆகி விட்ட நிலையில், அரசு கல்லூரிகளுக்கு ஒரு உதவி பேராசிரியர் கூட புதிதாக நியமிக்கப்படவில்லை.

2019-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் 2,331 உதவிப் பேராசிரியர்களை நியமிப்பதற்கான அறிவிக்கை வெளியிடப்பட்டது; அதேபோல், கவுரவ விரிவுரையாளர்களுக்கு பணி நிலைப்பு வழங்கும் நோக்குடன், 2021 பிப்ரவரி 15,16,17,18 ஆகிய நாட்களில் அவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கப்பட்டது; ஆனால், இரு நடைமுறைகளும் பாதியில் நிறுத்தப்பட்டதால் புதிய விரிவுரையாளர்கள் நியமிக்கப்படவில்லை.

முந்தைய ஆட்சியில் 2011- 2016 காலத்தில் 953 புதியப் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டன. 2016-க்குப் பிறகு இன்று வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதியப் பாடப்பிரிவுகள் தொடங்கப்பட்டன. புதிய பாடங்களை நடத்துவதற்காக மட்டும் 3,000-க்கும் மேற்பட்ட புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இவை தவிர சுமார் 4000 பேர் ஓய்வு பெற்றதையும் சேர்த்து தான் காலியிடங்களின் எண்ணிக்கை 7,000-ஐ கடந்துள்ளது. இவ்வளவு காலியிடங்களுடன் கல்லூரிகளை நடத்துவது கல்வித்தரத்தை சீரழித்து விடும்.

அரசு கல்லூரிகளின் நிலைமை இப்படி என்றால், அரசு உதவி பெறும் கல்லூரிகளின் நிலையும் மோசமாக உள்ளது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் மொத்தமுள்ள 10,610 ஆசிரியர் பணியிடங்களில் சுமார் 3,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்ப கல்லூரி நிர்வாகங்கள் தயாராக இருந்தும், அதற்கு தமிழக அரசின் உயர்கல்வித்துறை ஒப்புதல் வழங்கவில்லை. அதற்கான காரணம் புரியவில்லை.

உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தில் 51.40 விழுக்காட்டுடன் தமிழகம் முதலிடத்தில் இருப்பது உண்மை. ஆனால், இந்தப் பெருமை மட்டுமே போதாது. அரசு கல்லூரிகளின் மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கப்பட வேண்டும். இதற்கு வசதியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை - அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவி பேராசிரியர் பணி இடங்களை தமிழக அரசு உடனடியாக நிரப்ப வேண்டும். அவ்வாறு நிரப்பும் போது 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தகுதியுள்ள கவுரவ விரிவுரையாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.'' இவ்வாறு ராமதா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

55 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்