சென்னை: "செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், தமிழகத்தில் உள்ள கிராமங்கள் முதல் நகரங்கள் வரை இளைஞர்கள், மாணவர்களிடையே விளையாட்டுப் போட்டிகள் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது" என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் இன்று (செப்.12) நடைபெற்ற விழாவில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில், விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குகின்ற 19 வீரர், வீராங்கனைகள், பயிற்றுநர்கள், உடற்பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் நடுவர்களுக்கு முதலமைச்சர் விருதினையும், அதற்கான ஊக்கத்தொகையாக 16 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும், தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பதக்கங்கள் வென்ற 1130 விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத் தொகையாக 16 கோடியே 28 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளையும் வழங்கினார்.
பின்னர் முதல்வர் ஸ்டாலின் பேசியது: "கடந்த மூன்று மாதங்களில் நான் மூன்றாவது முறையாக நேரு விளையாட்டு உள்அரங்கத்திற்கு நான் வந்திருக்கிறேன். இதில் இருந்தே நீங்கள் தெரிந்து கொள்ளலாம், தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை எந்தளவுக்கு சுறுசுறுப்பாக - விளையாட்டு வீரர்களுக்கு புரியும் வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், ஒரு அத்தலெட் ஓடுகின்ற வேகத்தோடு செயல்பட்டு வருகிறது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
உலகமே வியந்து பார்க்கும் வகையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியை நடத்திக் காட்டினீர்கள். அடுத்ததாக டென்னிஸ் போட்டிக்கு தயாராகி வருகிறீர்கள். இந்த சூழலில் தான் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
» வட இந்தியாவில் 'கேங்ஸ்டர்' வேட்டை: 50 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் அதிரடி சோதனை
» பெங்களூரு | நோயாளிக்கு அறுவை சிகிச்சை செய்ய 3 கி.மீ ஓடி மருத்துவமனைக்குச் சென்ற மருத்துவர்
அமைச்சர் மெய்யநாதன் ஒரு ஸ்போர்ட்ஸ் நாதனாகவே மாறிவிட்டார். தனது துறையை என்றும், எப்போதும் துடிப்போடு வைத்திருக்க வேண்டும் என்று அவர் நினைத்து சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இப்படி ஒரு சுறுசுறுப்பான அமைச்சர் உங்கள் துறைக்கு கிடைத்திருப்பது நிச்சயமாக நீங்கள் எல்லாம் பெருமைப்பட வேண்டும்.
திராவிட மாடல் என்ற குறிக்கோளின்படி அனைத்துத் துறையும் வளர வேண்டும் என்பது எங்களது இலக்கு ஆகும். அதில் விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக இந்த மாபெரும் நிகழ்ச்சி நடந்து கொண்டு இருக்கிறது.
ஒரு விழாவில் நான்கு முக்கியமான நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.தமிழ்நாட்டின் தலை சிறந்த விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கான விருதுகளை வழங்குதல்,இரண்டாவது, பன்னாட்டு மற்றும் தேசிய அளவிலானபோட்டிகளில் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகையை வழங்குதல், மூன்றாவது, முதலமைச்சர் கோப்பைபோட்டிகளுக்கான முன்பதிவு தொடங்கி வைத்தல், நான்காவது, “ஆடுகளம்” – விளையாட்டு வீரர்களுக்கான தகவல் மையம் ஆகிய நான்கு நிகழ்வுகள் ஒரே நேரத்தில் நடக்கிறது.
உலக அளவில் விளையாட்டுத் துறையில் தமிழ்நாடு முதன்மை பெற வேண்டும், நம்முடைய ஊரு வீரர்கள் எல்லாம் சர்வதேச விளையாட்டுகளிலும் பங்கேற்க வேண்டும். பதக்கங்கள் வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்கவேண்டும் - என்ற உயரிய நோக்கத்தோடு தமிழ்நாடு அரசு இந்த நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறது.
செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக 187 நாடுகளிலிருந்து 2000-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் நம்முடைய தமிழகத்தில், சென்னை, மாமல்லபுரத்தில் நடைபெற்ற அந்த போட்டியில் பங்கேற்க வந்தார்கள். தமிழகத்தை உலகமே பார்த்து வியந்தது.தொடக்கத்தில் எத்தகைய திட்டமிடுதலோடு அது தொடங்கினோமோ அதே அளவு அக்கறையுடன் கடைசி நாள் வரை நடந்து கொண்டதால் தான் செஸ்ஒலிம்பியாட் என்கின்ற போட்டி மாபெரும் வெற்றியை, மாபெரும் சிறப்பை, மாபெரும் பெயரை நாம் அடைய முடிந்தது. செஸ் ஒலிம்பியாட் போட்டியானது கிராமங்கள் முதல், நகரங்கள் வரை நம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே விளையாட்டின் மீது ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆர்வத்தை இன்னும் தூண்டும் விதமாக, தமிழ்நாடு அரசின் பெரும் முயற்சியால் கொண்டு வரப்பட்டுள்ள உலக மகளிர் டென்னிஸ் போட்டியும் சென்னையில் இன்று தொடங்கி 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. தற்போது மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த பேரார்வத்தினை மேலும் வளர்க்கும் வகையில் பல்வேறு விளையாட்டுகள் அடங்கிய 'முதலமைச்சர் கோப்பை போட்டி'களுக்கான முன்பதிவையும் இன்று தொடங்கி வைப்பதில் நான் பெருமைப்படுகிறேன்.
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் நான் சொன்னமாதிரி நம்முடைய பாரம்பரிய விளையாட்டுக்களான கபடி மற்றும் சிலம்பம் ஆகியவற்றுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.கபடி போட்டிகளுக்கான முன்பதிவு இன்றைக்கு தொடங்குகிறது. பிறபோட்டிகளுக்கான முன்பதிவும் படிப்படியாக துவங்கவிருக்கிறது.
வரும் அக்டோபர் மாதம் முதல் இப்போட்டிகள் அனைத்து மாவட்டங்களில் நடைபெறும். மாநில அளவிலான இறுதி போட்டிகள் பிரமாண்டமான அளவில் வரும் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் சென்னையில் நடைபெறும். அதாவது செப்டம்பர் மாதம் முதல் அடுத்த ஆறு மாத காலங்களில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பல்வேறு போட்டிகள் நடக்க இருக்கின்றன. இது மாநிலம் முழுமைக்குமான அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும், வீராங்கனைகளுக்கும் ஒரு பூஸ்ட் மாதிரி.
முதல் முறையாக இப்போட்டிகள் பள்ளிகள், கல்லூரிகள், பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 5 பிரிவுகளில் நடக்க இருக்கிறது. ஆண்கள் அணி மற்றும் பெண்கள் அணி என இருபாலரும் பங்கேற்கும் வகையில் இது நடத்தப்பட இருக்கிறது.
அடுத்த ஆண்டு முதல் ஜூன் மாதம் கடைசி வாரத்தில் தொடங்கி பொங்கல் வரைக்கும் நடக்கும். தமிழர் திருநாளாம் தைத்திருநாள், கலையும் பண்பாடும் மட்டுமின்றி தமிழர்களின் விளையாட்டுகளும் கொண்டாடப்படும் பெருநாளாக அது அமையும்.
இந்தப் போட்டிகளில் சிறப்பாக விளையாடும் மாணவ மாணவியரை விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் விளையாட்டு விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் சேர்த்து, அவர்களுக்கு உயரிய பயிற்சிகள் வழங்கவும், தேசிய மற்றும் உலக அளவிலான போட்டிகளில் வெற்றி பெற தயார் செய்யவும் ஆணையிடப்பட்டிருக்கிறது. நமது அரசின் சிறப்பான செயல்பாடுகளால் தமிழ்நாட்டின் விளையாட்டுத் துறையில் புதிய மறுமலர்ச்சி ஏற்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக ஊக்கத் தொகை வழங்கப்படாமல் இருந்த சாதனையாளர்களையும் கண்டறிந்து, அவர்களுக்கு விருதுகளும் ஊக்கத் தொகையும் வழங்கி பெருமைப்படுத்தி வருகிறோம். இன்றைக்கு 1,130 விளையாட்டு வீரர்ளுக்கு ரூ.16.28 கோடி ஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
மேலும், “ஆடுகளம்” – விளையாட்டு வீரர்களுக்கான தகவல் மையமானது, அவர்களின் கோரிக்கைகள், ஆலோசனைகள் புகார்கள் உள்ளிட்டவற்றை கேட்டறிந்து அவற்றுக்கான மேல் நடவடிக்கைகளையும், தீர்வுகளையும், விரைவாக வழங்கிடும் மையமாக இது அமையும். ஏற்கனவே நடந்து முடிந்துள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாணவர்களுக்கு, குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, சிறந்த பயிற்சியாளர்கள் மற்றும் கிராண்ட் மாஸ்டர்கள் மூலம் நேரடி மற்றும் இணையவழி பயிற்சிகள் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டி கொடி அணிவகுப்பில் உலகஅணிகளை வழி நடத்திச் சென்ற, நம்முடைய அரசுப் பள்ளிகளை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பலரும், வரும் காலங்களில் இது போன்ற சர்வதேச போட்டிகளில், போட்டியாளராக பங்கேற்று வாகை சூட வழி ஏற்படும்.
சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய விளையாட்டுக்களை ஊக்கப்படுத்துவதைப் போல தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியினர் விளையாட்டுக்கள் கண்டறியப்பட்டு அவற்றுக்கும் தகுந்த ஊக்கம் அளித்திட நடவடிக்கை எடுக்கப்படும். களமாட விரும்பும் இளைய தலைமுறை வெற்றி வாகை சூட அனைத்து வழி வகைகளையும் தமிழ்நாடு அரசு நிச்சயமாக உருவாக்கித் தரும்.
நீங்கள் அடையும் வெற்றியும், பெருமையும் உங்களுக்கானது மட்டுமல்ல, தமிழ்நாடும், இந்தியாவும் அடையக்கூடிய வெற்றி. எனவே, உங்களது கடமையும் பெரிது, உங்களுடைய பொறுப்பும் பெரிது. அதை உணர்ந்து தடைகளை தகர்த்து, சாதனைகளை படைத்திடுங்கள்" என்று அவர் பேசினார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
8 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago