“வைகோ ஒரு போராளி ஹீரோ” - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

By செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் இன்று நடைபெற்ற “மாமனிதன் வைகோ” ஆவணப்பட வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசி இருந்தார். அப்போது தந்து உரையில் அவர் தெரிவித்தது.

“அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருப்பது சத்யம் தியேட்டர். சத்யம் சினிமா தியேட்டர். இந்த சத்யம் சினிமா தியேட்டரில் பல நிகழ்ச்சிகள் நடந்திருக்கிறது. பல ஹீரோக்களைப் பார்த்திருக்கிறோம். திரைப்படத்தில் நடிக்கக்கூடிய ஹீரோக்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இன்றைக்கு சத்யம் தியேட்டரில் நடைபெறக்கூடிய நிகழ்வில் உண்மையான ஹீரோவை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். “ரியல் ஹீரோ” என்றால் அண்ணன் வைகோதான். திரைப்படத்தில் வருகிற ஹீரோக்கள் சித்தரிக்கப்பட்டிருக்கக்கூடிய, டைரக்‌ஷன் செய்து திரைப்படத்துக்காகச் சித்தரிக்கப்படக்கூடிய ஹீரோ.

ஆனால் சித்தரிக்கப்படாத ஹீரோவாக அண்ணன் வைகோ அவர்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். ரியல் ஹீரோ மட்டுமல்ல, கொள்கை ஹீரோ! இலட்சிய ஹீரோ! தியாகத்தால் உருவாகியிருக்கக்கூடிய ஹீரோ! எழுச்சிமிக்க ஹீரோ! உணர்ச்சிமிக்க ஹீரோ! ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் ஒரு போராளி ஹீரோ. அவர் உயரத்தில் மட்டும் உயர்ந்தவர் அல்ல, கொள்கையிலும் உயர்ந்தவர், இலட்சியத்திலும் உயர்ந்தவர், தியாகத்திலும் உயர்ந்திருக்கக்கூடியவர் அண்ணன் வைகோ அவர்கள். அவரை வைத்து நான் எத்தனையோ கூட்டங்களை நான் நடத்தியிருக்கிறேன், மாணவனாக இருந்தபோது. இளைஞர் தி.மு.க என்ற அமைப்பை முதன்முதலில் கோபாலபுரத்தில் தொடங்கியிருந்தபோது, அவரிடத்தில் போய் நான் தேதி வாங்கி, பெரிய பெரிய கூட்டத்தையெல்லாம் நான் நடத்தியிருக்கிறேன். இன்னும் சொல்லவேண்டும் என்றால், அவர் கூட்டம் எங்கு நடந்தாலும், சென்னையில், சென்னையைச் சுற்றியிருக்கக்கூடிய பகுதியில் எங்கு நடந்தாலும், சைக்கிளில் அல்லது ஸ்கூட்டரில் போய், கூட்டத்தோடு கூட்டமாக இருந்து கேட்டு ரசித்தவன் நான்.

நெருக்கடி நிலைக் காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு, தமிழகத்தில் இருந்த பல்வேறு சிறைச்சாலைகளில் அடைப்பட்டிருந்தபோது நான் சென்னையில் இருந்தேன். அண்ணன் வைகோ அவர்கள் பாளைச் சிறையில் ஓராண்டுகாலம் அவரும் இருந்தார். எத்தனையோ சிறைச்சாலை… அதில் எனக்குப் பசுமையாக, ஆழத்தில் பதிந்திருப்பது, அவர் மிசாவில் கைதாகிப் பாளைச் சிறையில் இருந்தபோது, எனக்குக் கடிதம் எழுதுவார். பாளைச் சிறையில் இருந்து சென்னைச் சிறைக்கு. எனக்கு மட்டுமல்ல, தமிழகத்தில் இருந்த எல்லாச் சிறைச்சாலைகளுக்கும் கடிதம் எழுதிய ஒரு மனிதர் உண்டென்று சொன்னால், அது அண்ணன் வைகோதான். எல்லாரையும் உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி, சிறைவாழ்க்கை என்பது என்று எடுத்துச் சொல்லக்கூடிய வகையில், அந்தக் கடிதத்தைப் படித்து நாங்கள் எல்லாம் மகிழ்ச்சியடைந்தது உண்டு. உணர்ச்சியடைந்தது உண்டு. அவர் பொடா சட்டத்தில் கைதாகி, வேலூர் சிறையில் அடைப்பட்டிருந்தபோது, அப்போது நாடாளுமன்றத்தினுடைய தேர்தல், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி, ஏற்கனவே அமைத்திருக்கிறோம். அப்போது, தலைவர் கலைஞர் அவர்கள் என்னையும் அண்ணன் துரைமுருகன் அவர்களையும் அழைத்து, வேலூர் சிறையில் இருக்கக் கூடிய அண்ணன் வைகோ அவர்களைப் போய்ப் பார்த்துவிட்டு, ஒப்பந்தத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டு வா என்று அனுப்பி வைக்கிறார். சிறையில் போய்ப் பார்த்தோம். சிங்கத்தைக் குகையில் போய்ச் சந்திப்பது என்று சொல்வார்களே, அதுபோல போய்ச் சந்தித்தோம். குகையில் சிங்கம் போல அமர்ந்திருந்தார். அந்த ஒப்பந்தத்தைக் கொடுத்தோம். படித்துக் கூட பார்க்கவில்லை. “கலைஞர் சொல்லிவிட்டார் அல்லவா! கையெழுத்து போடுகிறேன்” என்று சொல்லிப் போட்டுவிட்டார். அதுதான் இப்போது என் நினைவுக்கு வருகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எத்தனையோ மாநாடுகள் நடைபெற்றிருக்கிறது. அந்த மாநாட்டில், அண்ணன் வைகோ பேசுகிறார் என்றால், ஒரு பெரிய வரவேற்பு இருக்கும். அவருக்கு நினைவிருக்குமோ இல்லையோ எனக்குத் தெரியாது. அவரை எப்போதுமே சரியாக, ‘Lunch’ நேரத்தில் பேசவிடுவார்கள். ஏனென்றால் கூட்டம் கலைந்துவிடக் கூடாது என்பதற்காக. மதிய நேரம் ஒவ்வொருத்தரும் எழுந்து எழுந்து போய்க்கொண்டிருப்பார்கள். அதே நேரத்தில் அண்ணன் வைகோ பேசுவார். அதனால் யாரும் எழுந்து போகமாட்டார்கள். நான் உட்பட! அவர் ஒவ்வொருமுறையும் மாநாட்டில் பேசியதற்குப் பிறகு, உடனடியாக அவருக்கு முதல் டெலிபோன், அப்போதெல்லாம் செல்போன் கிடையாது, முதல் டெலிபோன் செய்து, “ரொம்ப உணர்ச்சியாகப் பேசினீர்கள். ரொம்ப வேகமாகப் பேசினீர்கள். எங்களுக்கெல்லாம் மெய்சிலிர்த்துப் போய்விட்டது.” அப்படி என்று அவரிடத்தில் பல முறை நான் சொன்னதுண்டு.

நேரமில்லை. பேசிக்கொண்டே இருக்கலாம். 56 வருடங்கள் அவருடைய அரசியல் வாழ்வு. அதை ஒன்றரை மணி நேரத்தில் எப்படியும் கொண்டு வந்து சேர்க்க முடியாது. ஆனால் மிகச் சிறப்பாக, மிகுந்த எழுச்சியோடு, உணர்ச்சியோடு, நமக்கெல்லாம் ஒரு பெரிய பாடமாக, உருவாக்கித் தந்திருக்கக் கூடிய தம்பி துரை வைகோ அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஆகவே தலைமைக் கழகத்தின் செயலாளராக இருக்கக் கூடிய துரை வைகோ அவர்களை நான் மனதாரப் பாராட்டுகிறேன்; வாழ்த்துகிறேன்! முடிந்த உடனே அண்ணன் வைகோ அவர்களின் கையைப் பிடித்துச் சொன்னேன். “தம்பி ரொம்ப சிறப்பா பண்ணியிருக்கார். அவருக்கு உள்ளபடியே எனது பாராட்டுகள்” என்று முடிந்தவுடனே சொன்னேன். “ரெண்டு வருசமா அவன் கஷ்டப்பட்டான்” என்று அவர் பெருமையாகச் சொன்னார்.

படக்காட்சியில் வந்தது. கலைஞர் அவர்கள் உடல் நலிவுற்று, அவர் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்தில், சென்னை கோபாலபுரத்தில் தன்னுடைய இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, நம்முடைய அண்ணன் வைகோ அவர்கள் என்னிடத்தில் தொலைபேசியில் தொடர்புகொண்டு, “தலைவரைப் பார்க்கணும், கலைஞரைப் பார்க்கணும்” என்று கேட்டார். உடனே அவரைத் தலைவரிடம் எந்தச் சூழ்நிலையில் பார்க்கவைக்க முடியும் என்று மருத்துவர்களிடம் கலந்துபேசி, அதற்குப் பிறகு அவரிடத்தில் சொல்லி, அவரும், அந்த நேரத்துக்கு வந்தார். அவர் வந்து மாடிப்படியேறி உள்ளே நுழையும்போதே தலைவர் அவர்கள் ஹாலில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். உடனடியாக யாரையும் அடையாளம் கண்டுகொள்ள முடியாத அந்த உடல்நிலை, அந்தச் சூழல் அவருக்கு இருக்கு. இருந்தாலும், அவர் அந்தக் கருப்புத் துண்டைப் பார்த்தவுடனே அடையாளம் கண்டுபிடித்துச் சிரித்தார். அண்ணன் வைகோவைப் பார்த்து வந்தவுடனே கையை நீட்டினார். அண்ணன் வைகோ அவர்கள் ஓடிவந்து கையைப் பிடித்துக்கொண்டு, அழ ஆரம்பித்துவிட்டார். நான் பக்கத்தில் இருந்து தட்டிக்கொடுத்து, “அண்ணே, அழாதீங்க, சமாதானமா இருங்க” என்று சமாதானப்படுத்தினேன். இன்னும் அந்தக் காட்சி எனக்குப் பசுமையா இருக்கு. அப்போது நடந்த சம்பவத்தைப் பற்றி, அதற்குப் பிறகு திருச்சியில் ம.தி.மு.க.வைச் சார்ந்த ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. ஒரு புத்தக வெளியீட்டு விழா. அண்ணன் வைகோ அவர்கள் என்னை அழைத்திருந்தார். நான் போயிருந்தேன். அந்த நிகழ்ச்சியில் நான் பேசும்போது சொன்னேன். அண்ணன் வைகோ அவர்கள் சமீபத்தில் தலைவர் கலைஞர் அவர்களைச் சந்தித்து, தலைவர் கையைப் பிடித்துக்கொண்டு, “அண்ணே கவலைப்படாதீங்க, உங்களுக்கு எப்படி நான் பக்கபலமாகப் பல ஆண்டுகாலம் இருந்தேனோ, அப்படி தம்பி ஸ்டாலினுக்கு இருப்பேன்” என்று சொன்னதைத்தான் திருச்சியில் பேசும்போது சொன்னேன். சொல்லிவிட்டு, “அண்ணே நீங்கள் எப்படி எனக்குத் துணையிருப்பேன் என்று சொன்னீர்களோ, அதுபோல நான் உங்களுக்கு எப்போதும் துணையிருப்பேன்” என்று சொன்னேன்.

சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில், அவர் போட்டியிடவேண்டும் என்று விரும்பினாரோ இல்லையோ, அது எனக்குத் தெரியாது. ஆனால் கூட்டணி அமைத்த நேரத்தில், இடங்கள் எல்லாம் ஒதுக்கீடு செய்த நேரத்தில், நான் அவரிடத்தில் உரிமையோடு சொன்னேன். “அண்ணே உங்கள் உடல்நலன் எனக்கு முக்கியம். எனக்கு மட்டுமல்ல இந்த நாட்டுக்கு முக்கியம். அதுமட்டுமல்ல, நீங்கள் ஓரிடத்தில் சென்று நின்று, அங்கே வேட்பாளராக நின்றுவிட்டால், தமிழ்நாடு முழுவதும் நீங்கள் சுற்றுப்பயணம் செய்யமுடியாது. ஆனால் மாநிலங்களவையில் உங்கள் குரல் தொடர்ந்து ஒலிக்க வேண்டும். தேர்தல் முடிவு எப்படி வருகிறதோ நமக்குத் தெரியாது. ஆனால் மாநிலங்களவை உறுப்பினர் என்பது முடிவான முடிவு. அதனால் வெற்றி பெறுகிறோமோ இல்லையோ, நீங்கள் மாநிலங்களவைக்குப் போகப் போகிறீர்கள். அதனால் நிச்சயமாக, உறுதியாக, என்னுடைய கருத்தை தயவுசெய்து ஏற்றுக்கொண்டு, எப்படி தலைவர் கலைஞர் அவர்கள் உங்களுக்கு மூன்று முறை மாநிலங்களவையில் இடம்கொடுத்து, உங்கள் குரலை ஒலிக்க வைத்தாரோ, அதுமாதிரி நானும் ஆசைப்படுகிறேன்” என்று சொல்லி அவரிடத்தில் கேட்டேன். என்னுடைய ஆசையை ஏற்றுக்கொண்ட அவருக்கு அப்போது நன்றி சொன்னேனோ இல்லையோ, இப்போது உங்கள் அனைவரின் சார்பில் என்னுடைய நன்றியை இதயப்பூர்வமாகத் தெரிவித்துக்கொண்டு, நிறைய பேர் பேச இருக்கிறார்கள், எனவே நேரத்தின் அருமை கருதி, என்னுடைய உரையை இந்த அளவோடு நிறைவு செய்கிறேன். அண்ணன் வைகோ அவர்கள் தொடர்ந்து, தன்னுடைய உடல்நலத்தை நன்கு பாதுகாத்துக்கொண்டு, இந்தச் சமுதாயத்துக்காகத் தொடர்ந்து பணியாற்ற வேண்டும், பாடுபட வேண்டும், வாழவேண்டும் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன். நன்றி, வணக்கம்!” என தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

15 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

தமிழகம்

16 hours ago

மேலும்