சென்னை: "ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் சென்னையில் அவசர கால அடிப்படையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் சராசரியாக 30-35% பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. இது போதுமானதல்ல" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: "சென்னையில் வெள்ள ஆபத்தை தடுக்கும் நோக்கத்துடன் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் கால்வாய் பணிகள் திட்டமிடப்பட்டதை விட மிகவும் மந்தமாக நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் விரைவுபடுத்தப்படாவிட்டால், எந்த நோக்கத்திற்காக இந்தப் பணிகள் பல நூறு கோடி செலவில் தொடங்கப்பட்டனவோ, அந்த நோக்கமே நிறைவேறாமல் போய்விடக்கூடிய ஆபத்து உள்ளது.
சென்னை மாநகரம் 2015-ஆம் ஆண்டில் சந்தித்ததற்கு பிறகு மிக மோசமான வெள்ளத்தை கடந்த ஆண்டில் தான் எதிர்கொண்டது. சென்னையின் பெரும்பான்மையான பகுதிகள் கடந்த ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மூன்று முறை வெள்ளத்தில் மிதந்தன.அத்தகைய நிலை மீண்டும் ஒருமுறை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தான் பேரிடர் மேலாண்மை வல்லுனர் வெ.திருப்புகழ் தலைமையிலான குழு அளித்த பரிந்துரைகளின்படி சென்னையில் பல்வேறு பிரிவுகளாக சுமார் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் மழைநீர் மற்றும் வெள்ளத்தடுப்பு கால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவற்றில் பல பணிகள் நீண்டகால அடிப்படையில் மேற்கொள்ளப்படுபவை. ரூ.983 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாக முடிக்கப்பட வேண்டிய அவசர கால பணிகள் ஆகும். இந்த பணிகளை செப்டம்பர் இறுதிக்குள் முடிக்க வேண்டும். மழைநீர் வடிகால் பணிகளை நிறைவு செய்வதன் மூலமாக மட்டும் பணிகளை முடிக்க முடியாது. மழை நீர் வடிகால் 2 அடிக்கோ, 3 அடிக்கோ அமைக்கப்பட்டிருந்தால் அதன் இருபுறமும் குறைந்தது ஓரடிக்கு பள்ளம் உள்ளது. அந்த பள்ளங்களை மூடி சிமெண்ட் பூச்சு பூசுதல், அதன் மீது புதிதாக சாலை அமைத்தல் போன்ற பணிகளையும் செய்தால் மட்டுமே சென்னை சாலைகளும், தெருக்களும் இயல்பு நிலைக்கு திரும்பும்.
» மின் கட்டண உயர்வு | நியாயமற்ற மக்கள் விரோத செயல்: ஓபிஎஸ் கண்டனம்
» சென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையில் செல்போன் சிக்னல் அடிக்கடி பாதிப்பு
ஆனால், செப்டம்பர் மாதம் தொடங்கி 10 நாட்கள் நிறைவடைந்து விட்ட நிலையில், சென்னையில் எந்த பகுதியிலும் மழைநீர் காலவாய் அமைக்கும் பணிகள் நிறைவடையவில்லை. சில இடங்களில் 60% பணிகள் நிறைவடைந்திருந்தாலும் கூட, வேறு சில இடங்களில் பணிகள் இன்னும் தொடங்கப்படவே இல்லை. ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் சென்னையில் அவசர கால அடிப்படையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் சராசரியாக 30-35% பணிகள் மட்டுமே நிறைவடைந்துள்ளன. இது போதுமானதல்ல.
மழைநீர் வடிகால் பணிகளை குறித்த காலத்தில் முடிப்பதற்காக ஒவ்வொரு ஒப்பந்ததாரரும் எவ்வளவு பணியாளர்களை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்பது குறித்து ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், எந்த பகுதியிலும் ஒப்பந்த விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ள அளவுக்கு பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. இதே வேகத்தில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்றால் இந்த ஆண்டு இறுதிக்குள்ளாகக் கூட பணிகள் நிறைவடைய வாய்ப்பு இல்லை. அக்டோபர் மூன்றாவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி விடும். அதற்கு இன்னும் சுமார் ஒரு மாதம் மட்டுமே உள்ளதால், அதற்குள்ளாக பணிகளை முடித்தாக வேண்டும். அவ்வாறு முடிக்காவிட்டால், வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளையும், ஆபத்துகளையும் நினைத்துப் பார்க்கவே அச்சமாக உள்ளது.
கடந்த ஆண்டு பருவமழை காலத்தில் சாலைகளில் பல அடி ஆழத்திற்கு வெள்ளநீர் தேங்கி நின்றது. சென்னையின் பெரும்பான்மையான பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. அதனால் பொது மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டது மட்டுமின்றி, பலநூறு கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன. நடப்பாண்டில் குறித்த காலத்தில் மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படவில்லை என்றால், இந்த பாதிப்புகள் அனைத்தும் கடந்த ஆண்டை விட அதிகமாக ஏற்படும். அதுமட்டுமின்றி, ஆங்காங்கே தோண்டப்பட்டுள்ள பள்ளங்களால் விபத்துகள், உயிரிழப்புகள் போன்றவையும் ஏற்படும் அபாயம் உள்ளது.
வந்தபின் அனுபவிப்பதை விட, வருமுன் காப்பது தான் சிறந்தது என்பது வெள்ளத் தடுப்பு பணிகளுக்கும் பொருந்தும். அதை உணர்ந்து கொண்டு வெள்ளத்தடுப்பு பணிகளை விரைவுபடுத்த வேண்டும். ஒவ்வொரு மழைநீர் கால்வாய் திட்டப் பணிக்கும் ஓர் அமைச்சரை பொறுப்பாக நியமித்து இந்த மாத இறுதிக்குள் பணிகளை முடிக்கவும், பருவமழை தொடங்குவதற்கு முன்பாக சாலைகளை சீரமைக்கும் பணிகளை முடிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்; இந்த பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலினே கண்காணிக்க வேண்டும். அதன் மூலம் வெள்ள ஆபத்திலிருந்து சென்னையை காப்பாற்ற வேண்டும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
9 hours ago