மின்கட்டண உயர்வுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் - தேர்தல் வாக்குறுதிப்படி மாதாந்திர கணக்கீட்டை அறிவிக்காதது ஏன் என கேள்வி

By செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதற்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அவர்கள் தெரிவித்துள்ளதாவது

பாஜக தலைவர் அண்ணாமலை: மின் கட்டணம் உயர்த்தப்பட்ட இந்த தினத்தை தமிழகத்தின் கறுப்புநாளாக பார்க்கிறேன். மக்கள் எவ்வளவுதான் எதிர்த்து போராட்டம் நடத்தினாலும், அடுத்த தேர்தல் வருவதற்கு ஆண்டுக் கணக்கில் உள்ளது. அதற்குள் மக்கள் மறந்துவிடுவார்கள் என்பது திமுகவின் மனநிலையாக உள்ளது. அரசின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்துக்கு எதிரானது. இதை மக்கள்மறக்கமாட்டார்கள். 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுகக்கு வரலாறு காணாத அடி கொடுப்பார்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்: தமிழகத்தில் மின்கட்டணம் ரூ.55 முதல் ரூ.1,130 வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு 6 சதவீதம் என்ற அளவில் கட்டண உயர்வு இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில், ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்துவது ஏழை, எளிய, நடுத்தர மக்களின் வாழ்வையும், சிறு, குறு தொழில்கள், சிறிய நடுத்தர வியாபாரிகளின் வாழ்வையும் மோசமாக்கிவிடும். திமுக தேர்தல் வாக்குறுதிப்படி, மாதம் ஒருமுறை மின்கட்டண வசூல் என்பதையும் செயல்படுத்தாமல், மீண்டும் பழைய முறையில் 2 மாதங்களுக்கு ஒருமுறைதான் கணக்கிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏழை, எளிய, நடுத்தர உழைக்கும் மக்கள், சிறு குறு தொழில்களை கடுமையாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை உடனே ரத்து செய்ய வேண்டும்.

பாமக தலைவர் அன்புமணி: மக்களால் தாங்க முடியாத அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது. மின்கட்டண உயர்வு குறித்து தமிழகத்தில் 3 இடங்களில் மட்டுமேகருத்துகேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அதில் பங்கேற்றவர்களில் பெரும்பான்மையினர் கட்டணத்தை உயர்த்த கூடாது என்று கருத்து தெரிவித்தனர். அதன் பிறகும் கட்டணத்தை உயர்த்தியது நியாயம்அல்ல. மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்திக்கும் நிலையில், கட்டண உயர்வு தேவையற்றது. இதை உணர்ந்து, மின்கட்டண உயர்வை மின்வாரியம் உடனே திரும்ப பெற வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: ஏழை, எளிய மக்களின் எதிர்ப்புகளை மீறி, கட்டண உயர்வை தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்திருப்பது கண்டிக்கத்தக்கது. கரோனா தாக்கத்தால் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள், அதில் இருந்து தற்போதுதான் மெல்ல தேறிவருகின்றனர். இந்நிலையில், ஏழை, எளியவர்களின் தலையில் மின்கட்டண உயர்வை சுமத்துவது எந்த விதத்திலும் நியாயம் அல்ல. ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால், மின்கட்டணத்தை உயர்த்த மாட்டோம். மாதாமாதம் மின் அளவீடு செய்வோம்’ என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் என்ன ஆனது. ஆட்சிக்கு வந்த நாளிலில் இருந்தே மக்கள் விரோதப் போக்கை திமுக அரசு கடைபிடித்து வருகிறது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாத, மக்களின் ஆதரவை இழந்து வரும் அரசாக திகழ்கிறது. மக்களை நேரடியாக பாதிக்கும் மின்கட்டண உயர்வை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும்.

வி.கே.சசிகலா: திமுக அரசு பொறுப்பேற்று 15 மாதங்கள் ஆகியும், மக்களுக்கு இதுவரை எந்த பயனும் கிடைக்கவில்லை. மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மின்கட்டண உயர்வு மக்களை மேலும் துன்பத்துக்கு ஆளாக்கும். இதுபோன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளை யாரும் ஏற்கமாட்டார்கள். ஏற்கெனவே கரோனாவால் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் ஏழை மக்கள் மின்கட்டண உயர்வை எப்படி சமாளிக்கப்போகிறார்கள் என்று தெரியவில்லை. தமிழக மக்களை தொடர்ந்து துன்புறுத்தி வருவது வேதனை அளிக்கிறது. மின் கட்டண உயர்வை திமுக அரசு உடனே திரும்ப பெற வேண்டும். இதுபோன்ற மக்கள் விரோதப் போக்கை கைவிட்டு, மக்களின் வாழ்வாதாரத்தை பேணிக்காக்க ஆக்கப்பூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: அனைத்து தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த பிறகும், மின்கட்டண உயர்வை அமல்படுத்தியது கண்டனத்துக்குரியது. பெயரளவுக்கு கருத்துகேட்பு கூட்டங்களை நடத்திவிட்டு, அதில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளுக்கு எந்த முக்கியத்துவமும் தராமல் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பமும் இதனால் பாதிக்கப்படும். வீட்டு வாடகை, கடை வாடகை உயர்வதற்கும், ஏற்கெனவே நெருக்கடியில் உள்ள சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மேலும் நெருக்கடிக்கு உள்ளாவதற்குமே மின்கட்டண உயர்வு வழிவகுக்கும். மனசாட்சியோடு யோசித்திருந்தால் அரசுக்கு இது புரிந்திருக்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

தமிழகம்

29 mins ago

தமிழகம்

30 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

57 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்